img/728x90.jpg
ஜமால் கஸோஜி என்பவர் யார்? கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன?

ஜமால் கஸோஜி என்பவர் யார்? கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன?

ஜமால் கஸோஜி என்பவர் யார்? கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன?

தூதரகத்துக்குள் போன ஜமால் கஸோஜியை ஒரே இழுவையாக அறையொன்றினுள் இழுத்துக்கொண்டுபோய் மேசையின் மீது போட்டிருக்கிறார்கள். அதன் பின்னர், குழற குழற அவரது விரல்களை ஒவ்வொன்றாக வெட்டியிருக்கிறார்கள். சத்தம் கேட்டு கீழிருந்து பதற்றத்தில் கத்திய தூதரக அதிகாரி - "டேய், இதை வெளியே கொண்டுபோய் செய்யக்கூடாதா" - என்று குழற - "நீ ஊருக்கு வந்து உயிரோடிருக்கவேணுமொன்றால் பொத்திக்கொண்டு கிட" - என்று கூறிவிட்டு, காதுக்கு headset  அணிந்து பாட்டுக்கேட்டுக்கொண்டே காரியத்தை தொடருமாறு கூறப்படுகிறது. விரல்கள் வெட்டப்பட்ட உடலின் மிகுதிக்கு போதையேற்றி, பின்னர் அதனை துண்டு துண்டாக வெட்டத்தொடங்கியுள்ளார்கள். அதன் பிறகு உடல் சிதிலங்களை அமிலத்தில் போட்டிருக்கிறார்கள். இவ்வளவும் நடந்து முடிந்த பின்னர், உடல் சிதைவுகளையும் தூக்கிக்கொண்டு நான்கைந்து வாகனங்கள் சகிதம் தூதரகத்தைவிட்டு வெளியேறியுள்ளார்கள். 

தூதரகத்துக்குள் போனவரை காணவில்லையே என்று சுமார் நான்கு மணி நேரத்துக்கு மேலாக வெளியே காத்துக்கொண்டிருந்த ஊடகவியலாளனின் துணைவியார் Hatice Cengiz சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைத்து முறையிட்டு, அது செய்தியாகி சுமார் 17 நாட்களாக உலக நாடுகள் அனைத்தையும் உருட்டிப்பிரட்டிவிட்டு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகளை வெளிக்கொண்டுவரத்தொடங்கியுள்ளது. அதுவும் முழுமையான உண்மையல்ல. வெட்டப்பட்ட ஜமால் கஸோஜியின் உடல் துண்டுகள்போல சிதிலமான உண்மைதான்.

அப்படி என்னதான் இந்த மனிதர் செய்தார்? அவரை ஏன் இவ்வளவு கொடூரமாக கொன்றார்கள்?

ஜமால் கஸோஜி சவுதியை சேர்ந்த ஊடகவியலாளன். விபத்தில் இறந்த டயானாவுடன் அந்த நேரத்தில் பயணம் செய்த அவரது ஆண் நண்பர் என்று கூறப்பட்ட டோடி அல்பைட்டினுடைய மைத்துனன். இவரது குடும்பத்தினரும் சுற்றார்களும் பரம்பரை பரம்பரையாக பணம்படைத்தவர்கள். அத்துடன் படித்தவர்கள். 

ஜமால் கஸோஜி சவுதியிலிருந்து வெளியேறி துருக்கியிலிருந்துகொண்டு அமெரிக்காவின் The Washington Post பத்திரிகைக்கு பத்தியாளராக பணிபுரிந்து வந்தவர். சவுதி மன்னரின் அரசியலையும் அவரது ஆட்சிமுறை தொடர்பாகவும் கடுமையான விமரசனங்களை முன்வைத்தவர். சுருக்கமாக கூறினால், புலம்பெயர்ந்த ஈழத்து ஊடகவியலாளன் ஒருவன் ஒரு காலத்தில் மகிந்த தரப்பினரை விமர்சித்துக்கொண்டதுபோல ஜமால் கஸோஜி செயற்பட்டுவந்திருக்கிறார். இவரது குரல் சர்வதேசளவில் அதிகம் செவிசாய்க்கப்பட்டபோது அது சவுதிக்கும் சவுதி மன்னருக்கும் மிகுந்த எரிச்சலையும் குடைச்சலையும் கொடுத்திருக்கிறது. 

இவை எல்லாவற்றையும்விட, சவுதிக்கு ஜமால் என்பவர் உலக மகா பிரச்சினைக்குரியவராக இருந்ததற்கு வேறு காரணங்களும் இருந்தன. அதாவது, அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதல் சம்பவத்துக்கு முன்னர் சவுதி அரசகுடும்பத்தினர் பின் லேடனுடன் வைத்திருந்த தொடர்புகளை அறிந்தவர் ஜமால். அத்துடன், இரண்டாரு சந்தர்ப்பங்களில் பின்லேடனுடன் சமரசப்பேச்சுக்களை மேற்கொள்வதற்கு சவுதி புலனாய்வுத்துறையினரால் பயன்படுத்தப்பட்டவர். பிற்காலகட்டங்களில், சவுதி அரசகுடும்பத்தினர் கடைப்பிடிக்கத்தொடங்கிய இஸ்லாமிய அரசியல் கோட்பாடுகளினால் சினங்கொண்ட ஜமால், சவுதி அரசை தும்பு பறக்க விமர்சிக்கத்தொடங்கினார். இதனால் தனக்கு ஆபத்து நேரக்கூடும் என்று, போனவருடம்தான் சவுதியிலிருந்து வெளியேறி அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து அங்கு வாழ்ந்து வந்தவர். இந்த வருட ஆரம்பத்தில், அமெரிக்காவில் "அரபு உலகத்துக்கான ஜனநாயக்கட்சி" - என்ற கட்சியை ஆரம்பித்திருந்தார். ஜமாலின் டுவிட்டரில் அவரை 20 லட்சம் பின்தொடர்கிறார்கள். அவ்வளவு பிரபலமான அரபுலக அரசியல் பண்டிதர்.

ஆக, தங்களுக்கு அச்சுறுத்தலான - தமது இருப்புக்கு சவால்விடுக்கின்ற  - ஜமாலின் குரலை நசுக்குவதற்கு - 

அதிகாரம் மிகுந்தவர்கள் - தங்களை சீண்டிப்பார்க்கும் சின்னவர்களை அடக்கி ஒடுக்குவதற்கு பின்பற்றுகின்ற - சம்பிரதாயபூர்வமான அணுகுமுறையைத்தான் ஜமால் மீதும் ஏவி விடுவதற்கு சவுதி தீர்மானித்தது. ஜமாலை போட்டுத்தள்ளுவதற்கு தருணம் பார்த்து காத்திருந்தது. 

அப்போதுதான், பழம் நழுவி பாலில் விழுந்ததைப்போல ஜமாலே சவுதியை நாடி வந்து வலையில் விழுந்துகொண்டார். அதாவது, சவுதியில் ஏற்கனவே ஒருதடவை திருமணமாகி அந்த உறவிலிருந்து பிரிந்திருந்த ஜமால், துருக்கியில் ஒரு பெண்ணுடன் பழகி அவரை திருமணம் செய்வதற்கு தீர்மானித்திருந்தார். தனது திருமணத்தை உத்தியோகபூர்வமாக நடத்துவதற்கு, தான் செய்துகொண்ட முதல் திருமணத்திலிருந்து விவகாரத்து பெற்றுவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தை சவுதி அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. இந்த தேவையை மையமாக வைத்துத்தான் ஜமாலின் கொடுமையான முடிவு சவுதி தரப்பினரால் பின்னப்பட்டு, அரங்கேற்றப்பட்டிருக்கிறது. 

கடந்த செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி தூதரகத்துக்கு சென்று தனக்குத்தேவையான ஆவணத்தை கோரிய ஜமாலிடம், தற்போதைக்கு உடனடியாக அதைப்பெற்றுக்கொள்ளமுடியாது என்றும் இரண்டு வாரங்களில் வருமாறும் தூதரகத்திலிருந்த புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் சொல்லி அனுப்பியிருக்கிறார். அவர்கள் கூறியதைப்போலவே, இரண்டாவது தடவையாக சவுதி தூதரகத்துக்கு போனபோது அது தனக்கு வைக்கப்பட்டிருக்கும் பொறி என்பதை ஒரளவுக்கு ஜமால் உணர்ந்திருக்கிறார் என்பது தற்போது வெளிவரும் தகவல்களை வைத்து பார்க்கும்போது ஊகிக்கமுடிகிறது. 

அதாவது, அன்றையதினம் - ஒக்டோபர் இரண்டாம் திகதி - பிற்பகல் ஒரு மணிக்கு ஜமால் தூதரகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் அங்கு போவதற்கு முன்னர், தான் திருமணம் செய்துகொள்ளவிருந்த துணைவியாரிடம் கைத்தொலைபேசியை கொடுத்துவிட்டு, நான்கு மணி நேரத்தில் தூதரகத்திலிருந்து தான் வெளியே வராவிட்டால் உடனடியாக துருக்கி அரச அதிபரின் ஆலோசகரை அழைத்து விஷயத்தை தெரியப்படுத்தும்படி கூறியுள்ளார். (துருக்கி அரச அதிபரின் ஆலோசகர் ஜமாலுக்கு நெருங்கியவர்) கைத்தொலைபேசியை தனது கைக்கடிகாரத்துடன் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு (he synced the Apple Watch with his phone) தூதரகத்திற்குள் சென்றுள்ளார் ஜமால்.

ஆனால், ஜமால் ஊகித்துக்கொண்டதைவிட, மிகப்பெரிய மர்ம ஏற்பாடுகள் அவரைச்சுற்றி அன்றையதினம் பின்னப்பட்டிருந்தது என்பது தற்போதைய விசாரணைகளில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத்தொடங்கியிருக்கிறது.

அதாவது, சவுதி மன்னரின் மெய்ப்பாதுகாவலர் குழுவின் முக்கியஸ்தர் ஒருவரின் தலைமையில் ஜமாலை போட்டுத்தள்ளுவதற்கு ஒரு குழு, அன்றையதினம் காலை விசேட விமானத்தில் சவுதியிலிருந்து இஸ்தான்புல்லுக்கு வந்திருக்கிறது. மூன்று வெவ்வேறு குழுக்களாக தூதரகத்துக்கு அருகிலுள்ள ஆடம்பர ஹோட்டல்களில் அவர்கள் தங்கியிருக்கிறார்கள். மதியம் நெருங்கும் வேளையில், ஹோட்டல்களிலிருந்து கிளம்பி தூதரகத்துக்கு வந்திருக்கிறார்கள். இவர்கள் ஹோட்டலின் உள்ளே போவது வெளியே வருவது மற்றும் தூதரகத்துக்குள் வருகின்ற காட்சிகள் அனைத்தும் சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியிருக்கிறது. அன்றைய தினம் பிற்பகலில் தூதரகத்தில் முக்கியமாக இராஜதந்திர சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாகக்கூறி, தூதரகத்தில் பணிபுரிபவர்கள் மதியத்துக்கு பிறகு வேலைக்கு வரத்தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறானதொரு நிலையில்தான், பிற்பகல் 1.02 ற்கு ஜமால் தூதரகத்துக்குள் போயிருக்கிறார். ஓரிரு நிமிடங்களிலேயே உள்ளிருந்து அவர் தனது கைக்கடிகார வட்ஸ் - அப்புக்கு வந்த செய்தியை படித்திருக்கிறார். அதற்குப்பின்னர்தான், அவர் மீதான குரூரமான தாக்குதல் ஆரம்பித்திருக்கிறது. 

நான்கு மணிநேரமாக வெளியில் வராத ஜமால் குறித்து தூதரக வாயிலுக்கு சென்று விசாரித்தபோது அவர் பின்வாசல் வழியாக போயிருக்கக்கூடும் என்று ஜமாலின் துணைவியாரிடம் தூதரக காவலாளிகள் கூறியிருக்கிறார்கள். ஆனால், அப்போது ஜமாலின் உடல் துண்டம் துண்டமாக அமிலத்தில் உக்கிப்போயிருந்திருக்கிறது. 

ஜமாலின்த துணைவி மேற்கொண்ட அழைப்புக்களை அடுத்து செய்தித்தீ துருக்கியையும் பின்னர் சர்வதேச ஊடகங்களையும் பரந்துகொண்டது. தமக்கு எதுவுமே தெரியாது என்று சவுதித்தரப்பினர் தொடர்ந்தும் வாயை இறுக்கி முடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், துருக்கி புலனாய்வுப்பிரிவினர் தாங்கள் மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரமும் தூதரக கட்டடத்தின் உள்ளே இரகசியமாக பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பதிவுக்கருவிகளின் வழியாக பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையிலும் ”ஜமால் தூதரகத்தில் வைத்து கொடூரமாக கொலைசெய்யப்பட்டிருப்பது உறுதி” என்று அறிவித்துவிட்டார்கள். ஆனால், ஆதாரத்தை யாருக்கும் வெளியிடப்போவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். 

துருக்கி காவல்துறையினர் உடனடியாக தூதரகத்துக்குள் சென்று விசாரணை நடத்தவேண்டும் என்ற அழுத்தம் நாலா பக்கமும் எழுந்தபோது - சவுதி தூதரக தரப்பினருடன் சேர்ந்து தூதரக கட்டடத்துக்குள் இறங்கிய துருக்கி காவல்துறை சல்லடைபோட்டு தேடுதல் நடத்தியது. கட்டடத்தின் சில இடங்களில் புதிதாக பெய்ண்ட் பூசப்பட்டுள்ளதாக தெரிந்தது. ஆனால், வேறெந்த தடயத்தையும் அவர்களால் பெற்றுக்கொள்ளமுடியவில்லை.

ஆனால், பிந்திக்கிடைத்துள்ள தகவல்கள் ஜமாலின் உடல் சிதிலங்கள் தூதரகத்திலிருந்து இஸ்தான்புல்லின் புறநகர்பகுதியொன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள காட்டுப்பகுதியொன்றில் எறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துருக்கியின் உயர்மட்ட விசாரணைக்குழுவினர் இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் மணந்து மணந்து விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். சவுதிக்காரர்களை துரத்திக்கொண்டேயிருக்கிறார்கள்.

இந்நிலையில், தனது தூதரகத்துக்குள் ஜமால் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியே இல்லை என்ற நிலையில், சவுதி அரசு எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு சப்பைக்கட்டை கட்டி ஜமாலின் மரணம் தூதரகத்தில்தான் இடம்பெற்றது என்பதை தற்போது ஒப்புக்கொண்டிருக்கிறது.

ஒப்புக்கொண்டிருப்பதன் சீத்துவம் எப்படியிருக்கிறதென்றால் - 

"தூதரகத்துக்குள் முஷ்டியை முறுக்கிக்கொண்டு இடம்பெற்ற கைகலப்பினால் ஜமால் உயிரிழந்துள்ளார்" - என்று கூறியுள்ளார்கள். 

அறுபது வயது முதியவர் ஒருவர் முஷ்டியை முறுக்கிக்கொண்டு எவ்வாறு யாருடன் முரண்பட்டார்? அந்த முரண்பாட்டினால் அவர் எவ்வாறு துண்டு துண்டானார் என்ற கேள்விகளுக்கான பதில்கள் சவுதி அரசைத்தவிர எவருக்கும் புரியவில்லை. ஆனால், தாங்கள் தூதரகத்தில் பணியிலிருந்த 16 பேர்வரை கைது செய்து விசாரித்துவருவதாக மாத்திரம் கூறியிருக்கிறார்கள். முஷ்டியை முறுக்கிக்கொண்டு சண்டைபிடித்த பெரியவர் இறந்ததில் 16 பேர் எவ்வாறு சம்பந்தப்பட்டார்கள் என்று யாரும் எவரும் விளக்கம் சொல்லவில்லை. 

ஆனால், இந்த சம்பவத்தினை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது - சவுதி தரப்பினர் இவ்வளவு மொக்குத்தனமாக தமது தூதரகத்தினுள் வைத்து ஜமாலை போட்டுத்தள்ளுவதற்கு முடிவு செய்திருப்பார்களா? தூதரகத்துக்கு வெளியே துருக்கியில் - கூலிப்படை யாரையாவது - வைத்து சிம்பிளாக ஜமாலை கொலை செய்திருக்கலாமே? ஜமாலை எப்படியாவது சவுதிக்கு கொண்டுபோவதற்கு அவர்கள் முயற்சிசெய்தபோது இவர்தான் வேறு ஏதாவது செய்து, தூதரகத்தில்வைத்து தான் கொல்லப்படுவதற்கான காரணங்களை சவுதிக்காரர்களுக்கு கொடுத்துவிட்டாரா என்பதுபோன்ற சந்தேகங்களும் எழும்பாமல் இல்லை. 

எது எப்படியோ, வைரமுத்துவுக்கு சின்மயிபோல, மேற்குலகத்துக்கு சவுதி தற்போது பெரிய தலைவெடியாகியிருக்கிறது. திருடனுக்கு கேள்கொட்டியதுபோல, சமாளிக்கவும் முடியாமல் கத்தவும் முடியாமல் போகுமிடமெல்லாம் சவுதி தொடர்பாக கேட்கும் கேள்விகளுக்கு ட்ரம்ப் பம்முகிறார். "சிக்கல்தான்" - என்கிறார். ஆனால், அவ்வளவு விரைவாக இந்த விவகாரத்தை கை விடுதவதற்கு யாருமே தயாராக இல்லை.

மேற்குலகம் சர்வதேசத்தின் முன்னிலையில் அம்மணமாக நின்றுகொண்டிருக்கும் தருணம் இது. எந்த சேலையை எடுத்து தன் மீது சுற்றப்போகிறது என்று பார்ப்போம்.

கொசுறுத்தகவல்: ஜமாலைப்போட்டுத்தள்ளுவதற்கு மிகத்தெளிவான திட்டத்தோடு இஸ்தான்புல்லில் போயிறங்கிய சவுதிக்கூலிப்டையில் இடம்பெற்ற வைத்தியர் ஆஸ்திரேலியாவில் படித்தவராம்! ஆஸ்திரேலிய ஊடகங்கள் தங்கள் பங்குக்கு குழலெடுத்து ஊதுவதற்கு கிடைத்துள்ள தகவல் இது.