img/728x90.jpg
இந்திய அரசின் ஜனநாயக படுகொலையின் உச்சம் - காஸ்மீர் மக்களுக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து ரத்து

இந்திய அரசின் ஜனநாயக படுகொலையின் உச்சம் - காஸ்மீர் மக்களுக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து ரத்து

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளோடு பக்தர்கள் பயணிப்பர். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கி நடந்துகொண்டிருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக மாநிலத்தைவிட்டு வெளியேறுங்கள் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தீவிரவாதத் தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாத்திரை ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அதேநேரம், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டன. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் மோடி சுதந்தர தினத்தில் வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

மத்திய, மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆளுநர் சத்யபால் மாலிக்கை அம்மாநில முன்னாள் முதல்வர்களான மெஹ்பூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர் நேரில் சந்தித்துப் பேசினர். இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அரசியல் தலைவர்கள் வீட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மெஹ்பூபா முஃப்தி, `இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் என்ன நடந்தாலும் அதை எதிர்த்து ஒன்றுசேர்ந்து அதை வென்றெடுப்போம் என மக்களுக்கு உறுதிகூறிக்கொள்ள விரும்புகிறேன்' என்று ட்வீட்டியுள்ளார். அதேபோல், ஒமர் அப்துல்லா, `காஷ்மீர் மக்களுக்கு, என்ன நடக்கப்போகிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால், கடவுளை உறுதியாக நம்புபவன் நான். அவர் மீதும் அவரது செயல்முறைகள் மீதும் எப்போதும் நாம் சந்தேகம் கொள்ளக் கூடாது. அமைதி காக்கவும்' என்று கூறியிருக்கிறார்.

பதற்றம் தொடருவதால் மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், வீட்டுக்குத் தேவையான அத்திவாசியப் பொருள்களை வாங்கி இருப்பு வைத்துவருகின்றனர். இதனால், பெட்ரோல் நிலையங்கள், சமையல் எரிவாயு நிலையங்களில் நீண்டவரிசையில் காத்திருக்கிறார்கள்.

அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலிருந்து பயணிகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். விமானம், ரயில், பேருந்து உள்ளிட்டவைகள் மூலம் மக்கள் ஜம்மு மற்றும் ஸ்ரீநகரை விட்டு வெளியேறுகின்றனர். இதனால், ரயில்நிலையங்களில் அதிக அளவில் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது.

காஷ்மீர் நிலவரம் தொடர்பாக விவாதிக்க அம்மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று ஸ்ரீநகரில் ஒன்று கூடினர். இதில், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சியின் மூத்த தலைவருமான மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரங்கள், தன்னாட்சி உள்ளிட்டவைகளைக் காக்க அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது என்பது உள்ளிட்ட 3 அறிவிப்புகளைக் கூட்டாக வெளியிட்டனர்.

அதேபோல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாகவும் மறு உத்தரவு வரும்வரை இதேநிலைதான் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை மற்றும் லேண்ட்லைன் சேவைகளும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. பாதுகாப்புப் படையினர் குவிப்பால் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக, பாதுகாப்புத் துறை, உள்துறை அமைச்சர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் பிரதமர் மோடி, ஆலோசனை நடத்தினார். அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் 12 மணியளவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

காஷ்மீர் நிலவரத்தால் பிராந்திய அளவில் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்துத் தெரிவித்திருக்கிறார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இருநாடுகள் இடையிலான பேச்சுவார்த்தையை மூன்றாவதாக ஒருவர் மத்தியஸ்தம் செய்வதே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இந்திய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் ராணுவம் அதிக அளவில் குவிக்கப்படும் இந்தசூழலில் பேச்சுவார்த்தையை ட்ரம்ப் கூறியபடி நடத்த, இதுவே சிறந்த தருணம். இந்த சூழல் தொடர்ந்தால், அது பிராந்திய நெருக்கடிக்கு வழ் வகுக்கும்'' என்று இம்ரான் கான் கூறியிருக்கிறார்.

காஷ்மீர் தொடர்பாக பதற்ற சூழல் நிலவிவரும் நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று திடீர் விடுப்பு எடுத்திருக்கிறது.

காஷ்மீர் விவகாரம் தேசிய அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. இந்தநேரத்தில், பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பாக மாநிலங்களவையில் காலை 11 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், மக்களவையில் பகல் 12 மணிக்கு அவர் பேச இருக்கிறார். அப்போது முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவை காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது. இந்தச் சட்டத்தினால், காஷ்மீரிகள்தான் இந்தியாவின் செல்லக் குழந்தைகள் ஆகிறார்கள். காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது, மன்னர் ஹரிசிங், தன் மக்களின் நலன் கருதி பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். இந்து மன்னராக இருந்தாலும் தன் மக்கள்மீது ஹரிசிங் அளவற்ற பிரியம் கொண்டிருந்தார். நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்தான் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒப்புக்கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தார். பாகிஸ்தான், காஷ்மீரைக் கைப்பற்ற துடித்துக்கொண்டிருந்த காரணத்தினால், இந்தியத் தலைவர்கள் காஷ்மீருக்காக சிறப்பு அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க ஒப்புக்கொண்டார்கள்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவை காஷ்மீர் மாநில மக்களுக்கு அளித்து வந்த சிறப்பு உரிமைகள்:

> இந்தியாவில், எங்கு வேண்டுமானாலும் காஷ்மீர் மக்கள் நிலம் வாங்கலாம். ஆனால், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் ஒரு பிடி மண்கூட வாங்கிவிட முடியாது.

> இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் காஷ்மீருக்குப் பொருந்தாது. பாதுகாப்புத் துறை, தகவல் தொடர்புத் துறை, நிதித் துறை, வெளியுறவுத் துறை தவிர, காஷ்மீர் தொடர்பான எந்த ஒரு சட்டம் இயற்றப்பட்டாலும், காஷ்மீர் சட்டமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பொருந்தாது.

> காஷ்மீர் பெண்கள், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்தால், காஷ்மீரில் நிலம் வாங்கும் உரிமையை இழக்கிறார்கள். அதே வேளை, ஆண்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண்களை மணம் புரிந்தால், அங்கே நிலம் வாங்க உரிமை உண்டு.

> அரசியலமைப்புச் சட்டம் 35 ஏ, காஷ்மீரின் நிரந்தர குடியேறிகளுக்கு, அசையா சொத்துகள் வாங்குவது மற்றும் அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கிறது.

மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, `தற்போதைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதி, அதிக மக்கள் தொகையுடன் வேறுவிதமான நிலப்பரப்பைக் கொண்டது. லடாக் பகுதியை தனியாக யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக செயல்படும்.

தற்போதைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது எல்லைதாண்டிய பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பாதுகாப்புப் பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு அது தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்படுகிறது. அது சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகச் செயல்படும்'' என்று தெரிவித்தார்.


இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள்!

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி, ``இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் இன்று. இரண்டு நாடுகள் வேண்டாம் என இந்தியாவுடன் இணைய கடந்த 1947ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் எடுத்த முடிவு தவறாகியிருக்கிறது. சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு எடுத்திருக்கும் ஒருதலைபட்சமான சட்டவிரோதமானது. இது, ஜம்மு காஷ்மீரில் இந்தியா, ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்ற பொருளை வழங்கும்.

மேலும், இது இந்தப் பிராந்தியத்தில் பேரழிவுகளை ஏற்படுத்தும் பின்விளைவுகளை உண்டாக்கும். மத்திய அரசின் எண்ணங்கள் இதன்மூலம் தெளிவாகிறது. ஜம்மு காஷ்மீர் மக்களை தீவிரவாதிகளாக மாற்ற எண்ணுகிறது. காஷ்மீர் விவகாரத்தில், தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்றாமல், இந்தியா தோல்வியடைந்திருக்கிறது'' என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பிடிபி எம்.பிக்கள் வெளியேற்றம்!

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியின் பிடிபி கட்சி எம்.பிக்கள் மிர் ஃபயாஸ், நஸீர் அஹமது ஆகியோர் சட்டப்பிரிவு நகல்களைக் கிழிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்களை மாநிலங்களவையில் இருந்து வெளியேற்ற அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார்.

நாடாளுமன்றத்தில் கொதித்த வைகோ!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு ம.தி.மு.க எம்.பி வைகோ மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாவத்தில் பேசிய வைகோ, `இதன்மூலம் மத்திய அரசு ஜனநாயகத்தைப் படுகொலை செய்திருக்கிறது. அரசின் இந்த முடிவுக்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துகொள்கிறேன். உடனடியாக இதை அரசு திரும்பப்பெற வேண்டும்'' என்றார்