img/728x90.jpg
img/728x90.jpg
எனது மக்களின் விடுதலைக்காக…

எனது மக்களின் விடுதலைக்காக…


விடுதலைப்புலிகள் குரல் 44


கட்டுப்பாட்டிற்கும், உறுதிக்கும், போர்த்திறனுக்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் உலகமே போற்றும் உன்னத விடுதலை இயக்கத்தின் தலைவன் என்ற வகையிலும் – இனவெறிபிடித்த கொடூரமான ஒரு அரசு படையை எதிர்த்து, விடுதலைப் போரைத் திறமையுடன் வழிநடாத்தும் ஒரு தளபதி என்ற வகையிலும் தலைவர் பிரபாகரனது கருத்துக்களும் சிந்தனைகளும் உலக சமுதாயத்தால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒரு விடயம் என்பது இயல்பே!

எனது மக்களின் விடுதலைக்காக என்ற தலைப்பிலான தலைவர் பிரபாகரனது கருத்துத் தொகுப்பு, இந்த ஆவலைப் பூர்த்தி செய்யும் எனலாம்.

உலகம் வியர்க்கும் இந்த விடுதலையமைப்பை அவர் எப்படி ஆரம்பித்தார்? இந்த ஆயுதப் போராட்ட அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவரைத் தூண்டிய காரணிகள் எவை? இந்த விடுதலைப் போராட்டம் தொடர்பான அவரது மதிப்பீடுகளும் கருத்துக்களுமென்ன? என்பன போன்ற ஆர்வத்தைத் தூண்டும் வினாக்களுக்கு, இது தொகுப்பு நூல் விடையளிக்கின்றது. 

அதேவேளை, சிங்கள பேரினவாத அரசுகளானது மாறிமாறி எழுந்த புறச்சூழல்களை தங்களுக்குச் சாதகாமகப் பயன்படுத்திக்கொண்டு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தந்திரோபாயமாகவோ அல்லது ஆயுத பலத்தைப் பயன்படுத்தியோ நசுக்க முயன்ற போதெல்லாம், தமிழினத்திற்குச் சார்பான வகையில் தீர்க்கதரிசனமான முடிவுகளை எடுத்த தலைவர், விடுதலைப் போராட்டத்தை எங்ஙனம் கட்டிவளர்த்து அதை முன்னோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கின்றார் என்ற வரலாற்றையும் இந்நூலை முழுமையாகப் படிக்கும் ஒருவர் தெரிந்துகொள்வார். 

அத்துடன் சிங்கள பேரினவாதம் என்றைக்குமே தமிழர்களுக்கு நீதிவழங்கப் போவதில்லை; தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனைக்கு ஒரேதீர்வு தமிழீழத் தனியரசுடான் என்ற யதார்த்த உண்மையை, தலைவர் அன்றிலிருந்து இன்றுவரை தீர்க்கதரிசனத்துடன் வலியுறுத்திச் சொல்லிவருவதை, இத்தொகுப்பு நூலில் காணலாம்.

இந்திய அரசின் நேரடித் தலையீடு நடைபெற்ற 1987ஆம் ஆண்டுப் பிற்பகுதியில் ஒருநாள்…

புலிகள் இயக்கத்தை தனது இராஜதந்திரப் பொறிக்குள் சிக்கச் செய்யும் நோக்குடன், இந்திய இராஜதந்திரி டிக்சிற் அவர்கள்  தலைவரை அழைத்து, பலாலியில் ஒரு பேச்சுவார்த்தையை நடாத்திக்கொண்டிருந்தார்.

அவர் விரித்துவைத்துவிட்டுக் காத்திருக்கும் பொறிக்குள் சிக்காது தவிர்த்தும் – தாண்டியும் தலைவர் பிரபாகரன் நகர்த்திய இராஜதந்திரக் காய்நகர்தலைக் கண்டு பொறுமையிழந்த திரு டிக்சிற் தலைவரை நோக்கி……

„எம்மை நீங்கள் மூன்றுக்கு தடவைகள் ஏமாற்றிவிட்டீர்கள் என்று“, தனது இராஜதந்திர இயலாமையைக் கோபமாக வெளிப்படுத்தினார்.

அதற்குத் தலைவர் பதிலளித்தார்.„அப்படியானால் நான் நினைக்கிறேன், எனது மக்களை மூன்று தடவைகள் நான் பாதுகாத்து விட்டேன்“ என்று அவருக்கே உரிய அமைதியுடன் தலைவர் கூறிமுடித்தார்.

இந்தச் சம்பவம் நடந்து சில வாரங்களின்பின் இந்தியப்படைகள் போரைத் தொடக்கிவிட்டன. பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் வந்தனர். போரை உடனடியாக நிறுத்திப் பொதுமக்களது அழிவைத் தடுக்கும்படி இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கு அடுத்தடுத்து தலைவர் அன்பான வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அதிகாரமமதையுடன் அதை நிராகரித்த ராஜீவ், „பிரபாகரனை எனது காலடியில் விழவைக்கிறேன்“ என்று சூளுரைத்திருந்தார்.

போர் தீவிரமடைந்தது. பேரழிவிற்கு உட்பட்டாலும் மக்களின் ஒத்துழைப்புடன் புலிவீரர்கள் போர்க்களத்தில் காவியம் படைக்கத் தொடங்கினர். நாட்கள் செல்லச் செல்ல „ஆப்பிழுத்த குரங்கின் கதைபோல“ இந்தியப்படைகள் நிரந்தரமாகவே இக்கட்டுக்குள் மாட்டிக்கொண்டன. இப்போது சமரசம் பேச புலிகளுக்கு மறைமுக அழைப்புகளை இந்திய அரசு விடுத்தது. இந்தியாவின் உள்நோக்கத்தை சமரசம் மூலம் ஆக்கிரமிப்பைத்தொடரும் எண்ணத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்ட தலைவர் சமரச அழைப்பைப் புறந்தள்ளிவிட்டு, இந்தியப்படைகளுக்கெதிராக இராஜதந்திர ரீதியாகவும் தீவிர நடவடிக்கைகளை எடுத்தார். இறுதியில் இந்தியப் படைகளை தமிழீழத்தை விட்டோடச் செய்தார்.

Related image

போரோ-சமரசமோ அது எதுவாக அது எதுவாக இருந்தாலும், தமிழீழமக்களின் நிரந்தர நலனுக்காகத் தீர்க்கதரிசனத்துடன் தலைவர் அயராது பாடுபட்டதை, இத்தொகுப்பு நூல் சொல்கிறது.

இதைப்போன்று தமிழீழத் தேசியத்தைக் குறிவைத்து வீசப்பட்ட இராஜதந்திரச் சதிகளையும் – அக்கிரமிப்புப் புயல்களையும் எதிர்கொண்ட தலைவர் அவர்கள், அவற்றை சாதுரியமாகவும், அதேவேளை உறுதியுடனும் எப்படிக்கையாண்டு அவற்றை வெற்றிகொண்டு வருகிறார் என்பதையும், இக் கருத்துத் தொகுப்பு நூலை வாசிக்கும் ஒருவர் தெரிந்துகொள்ள முடியும்.

ஆயுதப் போராட்டமே ஒரேவழியென்ற முடிவுக்கு நீங்கள் வரக்காரணமாக இருந்த உங்களது தனிப்பட்ட அனுபவங்களைக் கூறமுடியுமா என்று „சண்டே“ இதழின் செவ்வியாளர் கேட்டபோது….

„நான் பள்ளிச்சிறுவனாக இருந்தபோது, 1958 ஆம்  ஆண்டின் இனக்கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒரு விதவைத் தாயை நான் ஒருமுறை சந்தித்தபோது, அவர் இந்த இனவெறியாட்டத்தில் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார். சிங்களக் காடையர்கள் கொழுப்பிலிருந்த அவரது வீட்டுக்குத் தீவைத்து, அவருடைய கணவரையும் குரூரமாகக் கொலைசெய்தனர். அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரிகாயங்களுடன் உயிர்தப்பினார். அவரது உடலில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சிறு குழந்தைகளை கொதிக்கும் தாருக்குள் உயிருடன் வீசிக்கொன்ற கோரச்சம்பவங்களை நான் கேள்விபட்டேன். அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகினார் என்பதையெல்லாம் கேட்க்கும்போது, என் மக்கள்மீது ஆழ்ந்த அனுதாபமும் – அன்பும் ஏற்பட்டன. இந்த இனவெறியமைப்பின் பிடிக்குள்ளிருந்து எம்மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற பெரும் உந்துதல் என்னிடம் தோன்றியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்குத் ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இந்த அமைப்பினை, ஆயுதப் போராட்டத்தின்மூலமே எதிர்கொள்ள முடியும் என்று, நான் ஆழமாக உணர்ந்தேன்“, என்று தலைவர் அவர்கள் தனது அனுபவத்தை மீட்டுச் சொன்னார்.

இதேபோல, தமிழீழத்தில் தான் சந்தித்த இராணுவத் தோல்விகளை மறைக்க முயன்ற இந்திய அரசு, „ஒரு கையை பின்னால் கட்டிக்கொண்டு தமிழீழத்தில் போரிட்டதாக“ கூறியது. இது தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் தலைவரிடம் கேட்டபோது…

„ஒரு கையை பின்னால் கட்டிய படி இந்திய இராணுவம் எமது மக்கள்மீது இத்தகைய கொடுமைகளைச் செய்தார்கள் என்றால், இரு கைகளாலும் எத்தகைய அட்டூழியங்களைப் புரிந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகிறது“ என்று இந்தியப் படையின் இயலாமையையும் – அவர்கள் செய்த படுகொலைகளையும் நாசூக்காகச் சொல்லியிருந்தார். இவ்வாறு பல சுவாரசியமான விடயங்கள் இத்தொகுப்பு நூலில் உள்ளன 

ஒட்டுமொத்தமாக இத்தொகுப்பு நூலை மதிப்பீடுசெய்வதாயின், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பத்தாண்டுகால போராட்ட வரலாறு இத் தொகுப்பு நூலில் பொதிந்துகிடக்கின்றது என்று கூறலாம்.

மொத்தம் அறுபத்தாறு தலையங்களின் கீழ் அந்தந்தக் காலகட்டத்தை நினைவுகூரும் தலைவரின் நிழற் படங்களுடன், இத்தொகுப்பு நூல் அழகாக வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பத்து ஆண்டு காலகட்டத்தில் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வுகள், திருப்புமுனைகள், அரசியல் நெருக்கடிகள், போர் நடவடிக்கைகள், அரசு பயகரவாதக் கொடுமைகள் என்பவற்றிற்கு அவ்வப்போது தலைவர் அளித்த விளக்கங்களும் மதிப்பாய்வுகளும் இத்தொகுப்பில் உள்ளடங்கி இருக்கின்றன.

நீண்டதும் வீரம் செறிந்ததுமான போராட்ட வரலாற்றில், தனது சொந்த அனுபவங்களையும் வாழ்க்கைப் பின்னணியையும் தான் வரித்துக்கொண்ட இலட்சியங்களையும், தனது உலகப் பார்வையையும் மிகவும் தெளிவாகவும், துல்லியமாகவும் உலகப் பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய பேட்டிகளில் தலைவர் விளக்கியிருக்கின்றார். அரசியல் நிலைவரங்கள், போராட்டச் சூழ்நிலைகள் மட்டுமல்லாது கல்வி, பொருளாதாரம், கலை இலக்கியம், பெண்விடுதலை, நீதிநிர்வாகம் போன்ற பல்வேறு விடயங்களுக்கும் தலைவர் வழங்கியுள்ள கொள்கை விளக்கங்களும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.

தலைவர் பிரபாகரனின் அரசியல் சிந்தனையையும், சமூகப் பார்வையையும் ஆழமாக அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு. இந்த நூல் ஒரு அறிய விருந்தாக அமையும். சுருக்கமாகச் சொன்னால், „எனது மக்களின் விடுதலைக்காக“ என்ற இந்த நூல், தமிழர்கள் அனைவரது வீடுகளிலும் படிக்கப்படவேண்டிய, ஒரு உயிர்த்துடிப்புள்ள வரலாற்று நூல் ஆகும்.   

PDF

PDF Link