img/728x90.jpg
சர்வதேச மனித உரிமைகள் சாற்றுரையும் ஈழத்தமிழர்களும். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

சர்வதேச மனித உரிமைகள் சாற்றுரையும் ஈழத்தமிழர்களும். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

சர்வதேச மனித உரிமைகள் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10-ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் 1948-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 48 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950-ம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் நாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கின்னஸ் பதிவுகள் நூலில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட இந்த ஆவணம் ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே உரித்தாக உள்ள உரிமைகள் பற்றி எடுத்துரைக்கின்ற சாற்றுரையாகும்.

மனிதகுலம் சமாதானத்துடனும், நிம்மதியுடனும் வாழவேண்டும் என்ற மேலோங்கிய சிந்தனையுடன் மனிதகுலத்திற்கு ஒவ்வாத படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைகள் போன்றவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வால் கொண்டுவரப்பட்டது. ஆனால், சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்ற போதிலும் மனித உரிமைகள் பெயரளவில் மாத்திரமே நடைமுறையில் உள்ளன. சிறிலங்காவைப் போன்ற பல நாடுகளில் மனித உரிமைகள் படுமோசமாக மீறப்பட்டும் மறுதலிக்கப்பட்டும் வருவதை மறுப்பதற்கில்லை.

மனித உரிமை என்பது ஒரு இனக் குழுமங்கள் மத்தியில் சனநாயகத்தைப் பாதுகாத்தல், மக்களின் பொது நலனை விருத்தி செய்தல், சமூக நீதியை நிலைநிறுத்துதல் போன்றவற்றுக்கு மனித உரிமை என்பது அத்தியாவசியம் ஆகும். ஆனால், சனநாயக நாடு என்று பெயரளவில் சொல்லிக் கொள்ளும் சிறிலங்கா போன்ற நாடுகளில் தொடர்ச்சியாக மனித உரிமைகள் மீறப்பட்டே வருகின்றன என்பதை அங்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நில அபகரிப்புக்கள், தமிழினப் படுகொலைகள் ஒடுக்குமுறைகள் மூலம் உணரமுடிகின்றது.

சர்வதேச மனித உரிமைகள் சாற்றுரை 30 உறுப்புரைகளைக் கொண்டது. ஓவ்வொரு உறுப்புரையிலும் மனிதகுலத்திற்கான அடிப்படை உரிமைகள் வரையப்பட்டுள்ளது. அன்றிலிருந்து இன்று வரை அதாவது இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து சிங்கள தேசமானது எந்தவொரு உறுப்புரைகளையும் மதித்து நடந்ததில்லை. பௌத்த மேலாதிக்கச் சித்தாந்தத்தின் மயக்கத்திலும் பௌத்த தேரர்களின் காலடியிலுமே சிறிலங்கா அரசின் மனித உரிமை பண்புகள் மிதிபட்டு சிதறிப்போயின.

உறுப்புரையில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு பகுதியையும் உற்றுநோக்கினால் இன்று சிறிலங்காவில் நடைபெறுகின்ற ஒவ்வொரு விடயமும் மனிதகுலத்திற்கு ஒவ்வாதவையாகவே இருக்கின்றன. அன்று டி.எஸ். சேனநாயக்கா முதல் இன்று மைத்திரி - ரணில்வரை தமிழர்களது உரிமைகளும் இருப்பும் தொடர்ச்சியாகப் பறிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. அதாவது தமிழர்கள் தேசத்தை தாங்கும் தூண்களாக இருக்கின்ற நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம், மக்கள் கூட்டம் என்பன சிறிலங்கா அரசால் அழிக்கப்படும் பொழுது உறுப்புரைக் கூற்றுகளின்படி தமிழர்கள் பிரிந்து போவதற்கான உரிமை உள்ளவர்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்க் குமுகாயத்தின் ஒவ்வொரு தமிழ் மகனும் இப்பிரகடனத்தைக் கற்றறிந்து கொண்டால் தமிழர்கள் உரிமைகளை எவ்வாறு சிங்களதேசம் பறித்தெடுக்கின்றது எனத் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.  முள்ளிவாய்காலில் பேரவலம் நடைபெற்றபோது மனித உரிமை உறுப்புரைகளை இயற்றிய ஐ.நா.வும் மனித உரிமைகளை மதிக்காது தமிழின அழிப்புக்கு உடந்தையாகவே இருந்துள்ளது.

தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு நீதிகிடைக்கக் கூடிய வகையில் உறுப்புரைகளில் சொல்லப்பட்டுள்ள ஒருசில முக்கியமான பகுதிகளை நாம் குறிப்பிடலாம். கீழே குறிப்படப்பட்டுள்ள உறுப்புரைகளின்படி தமிழர்கள் தமது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற தமது அடிப்படை உரிமைகளைப் பெற்று ஒரு தேசமாக வாழ  உரிமையுள்ளவர்கள்.


நாம் அனைவரும் சுதந்திரமாகவும் உரிமைகளில் சமமாகவும் பிறக்கிறோம்.

இன, நிற, பால், மொழி, சமய, அரசியல் கருத்து, தேசியம், சொத்து, பிறப்பு பாகுபாடு காட்டேதே.

யாரும் அடிமை இல்லை.

யாரும் சித்தரவதைக்கு உட்படலாகது.

சட்டத்தின்முன் சமவுரிமை.

நியாமற்று தடுத்துவைக்கமுடியாது.

நீதியான வழக்குக்கான உரிமை.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி.

நகர்வுச் சுதந்திரம்.

துன்புறுத்தலிலிருந்து புகலிட உரிமை.

தேசியத்துக்கான உரிமைசிந்தனை சுதந்திரம்.

உள்ளுணர்வு சுதந்திரம், சமயச் சுதந்திரம்.

கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம்.

மக்களாட்சி உரிமை.

சமூக பாதுகாப்பு உரிமை.

தொழிலாளர் உரிமைகள்.

கல்விக்கான உரிமை.

பண்பாட்டு பங்களிப்பு உரிமை, ஆக்கவுரிமை.

நியாமான விடுதலை பெற்ற உலகு.

மனித உரிமைகளை யாரும் பறிக்க முடியாது.

இந்த உறுப்புரைகளை மீற எந்த நாட்டுக்கோ அல்லது நபருக்கோ உரிமை கிடையாது.

இவ் உறுப்புரைகள் அனைத்துமே தமழர்களின் மனித உரிமைக்கும் சுதந்திர வாழ்வுக்குமான பூரண அர்த்தத்தைக் கொடுப்பதோடு தமிழர்களுக்கு நடைபெற்ற இனப்படுகொலைக்கும் சர்வதேச அரங்கில் நீதி கேட்க உரிமையுள்ளவர்கள் என்ற கூற்றைப் பறைசாற்றி நிற்கின்றன.


21ம் நூற்றாண்டின் படுபாதகமான இனவழிப்பு நடந்தேறிய இவங்கைத் தீவில் பூர்வீகக் குடிகளான தமிழர்களின் உரிமைகள் நடைமுறையில் சாத்தியமற்றதாகவே இருக்கின்றது. உதாரணமாக சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது சொந்த நிலங்களுக்காகவும் காணாமல் ஆக்கப்பட்ட தமது சொந்தங்களுக்காகவும் தெருக்களிலும் அரச அலுவலகங்கள் முன்பாகவும் போராடும் மக்களைக் கூறலாம். எமது தாயகத்தில் எமக்காக மாண்டவருக்காக அழக்கூட உரிமையற்றவராக தமிழினம் வாழ்கின்ற நிலைக்கு அடிமைப்பட்டுள்ளோம். இவர்களுக்குக் கிடைக்கவேண்டய நீதி என்பது சிங்கள தேசத்தினதும் வல்லரசுகளினதும் கட்டுபாட்டுக்குட்பட்டதாகவே தொடர்ந்தும் காணப்படுகின்றது.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனவழிப்பு, பாலியல் பலாத்காரம், மனித உரிமை மீறல்கள் என்பனவற்றுக்கு நீதி கிடைக்கும் வரை உலகத் தமிழர்கள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டே இருக்கவேண்டும். ஒரு கொடிய இராணுவ அடக்குமுறைக்குக்கீழ் ஆளப்பட்டு வரும் இனம் தனது விடுதலைக்காக கிளர்ந்தெளுந்து போராடுவதற்கான உரிமையும் அந்நாட்டு சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டும்.

தமிழ்மக்களின் மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டமாயின் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது முன்வைக்கப்படவேண்டும். இவ் அரசியல் தீர்வானது இன அழிப்பிலிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதாக அமைய வேண்டும். இதற்கு கோட்பாட்டு ரீதியாக தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதையும், அந்த தேசத்திற்குரிய ஆட்சி செய்யும் அதிகாரமான இறைமையையும், தமிழ் மக்களுக்குரிய சுய நிர்ணய உரிமையையும் அங்கீகரித்தல் வேண்டும். அதுமட்டுமல்ல சுயநிர்ணய உரிமையை செயற்படுத்துவதற்கான ஆட்சிப்பொறிமுறையை உருவாக்க வேண்டும். அரசியல் யாப்பு சட்டரீதியாக வட-கிழக்கு இணைந்த தாயகம், சுயநிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்கள், மத்திய அரசில் ஒரு தேசமாக பங்கு பற்றுவதற்கான பொறிமுறை, என்பன உருவாக்குவதோடு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கான பாதுகாப்பும் உறுதிப்படுத்தல் வேண்டும்.

மனித உரிமைகள் நாளைக் கொண்டாடுவதை விட மனித உரிமைகள் பாதுகாப்புக்கான முன்னெடுப்புக்களையும் நடவடிக்கைகளையும் அனைவரும் கவனத்தில் கொள்வதே மிக அவசியம். அத்தோடு நின்றுவிடாது ஒவ்வொருவரும் தத்தமது உரிமைகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்க வேண்டும். மனித நல்வாழ்விற்காக உருவாக்கப்பட்ட மனித உரிமைகள் மீறப்படும் போது இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டிய ஈழத்தமிழரை வஞ்சித்த ஐ.நா.வும் சர்வதேச நாடுகளும் இனிமேலாவது ஆக்கிரமிப்புகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும், பாகுபாடுகளுக்கும் உள்ளாகும் மக்களின் நலனிகளில் அக்கறை கொண்டு, மனித உரிமையைப் பாதுகாக்க செயற்படவேண்டும் என வேண்டிநிற்கின்றோம்.


'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்''

'அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை''

PDF

PDF Link