img/728x90.jpg
ஒரு இனத்தின் எதிர்காலம் அதன் அடுத்த சந்ததியிலேயே வலுப்பெறுகிறது

ஒரு இனத்தின் எதிர்காலம் அதன் அடுத்த சந்ததியிலேயே வலுப்பெறுகிறது

ஒரு இனத்தின் எதிர்காலம் அதன் அடுத்த சந்ததியிலேயே வலுப்பெறுகிறது

சமீபகாலமாக எழுத என நினைத்தால் எழும் இனம் குறித்த வலி காரணமாக முடிவதில்லை. முள்ளிவாய்காலும், 10 ஆண்டுகளும் அவ்வலியை மேலும் அதிகரித்துவிட்டது. சம்பிரதாய சடங்குகளை நடத்தி முடித்தாயிற்று. இனி என்ன மீண்டும் கும்பகர்ண நித்திரை தானே. தற்போதைய எனது மறுபிறப்பின் இரண்டு ஆண்டுகள் நேற்று ஏனோ நிறைவைத் தரவில்லை. உங்கள் அன்பிற்கு எவ்வாறு பதில் சொல்வது என்பதிலேயே பல குழப்பம். ஈற்றில் பதில் சொல்லிவிட்டேன். எனினும் உங்கள் அன்பு மீண்டும் பலவற்றை எழுதத் தூண்டுகிறது.
 
பல முறை வானலைகளிலும், எனது எழுத்துக்களிலும் பகிர்ந்த விடயம் தான். தற்போது சில ஆதாரங்களுடன். இது அரசியல் இல்லை என்றாலும், இதில் இனம் சார்ந்த அரசியல் உண்டு. ஒரு இனத்தின் அடிநாதமான எதிர்காலச்சந்ததியான குழந்தைகள் குறித்தது. இது ஈழத்திற்கு மட்டுமல்ல தமிழர் வாழும் நாடுகள் அனைத்திற்கும் பொருந்தும். குறிப்பாக இளைய தம்பதிகளின் கவனத்திற்கும் அவர்களுக்கு குழந்தை வளர்ப்பில் ஆதார சக்தியாக உள்ள அவர்களை சார்ந்தவர்களின் கவனத்திற்கும் முக்கியமானது.
 
யூனிசெவ் எனப்படும் ஜ.நாவின் குழந்தைகள் நிறுவனம் குழந்தைகள் குறித்த இவ்விடயத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அவர்களது முதல் ஜந்து வருடங்களில் பெற்றோரின் வகிபாகத்தின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுகிறது. குறிப்பாக ஆரம்காலங்களிலான அவர்கள் மீதான அன்புடன் கூடிய பராமரிப்பு (early caregiving), அவர்கள் ஏனையவர்களுடன் பழகுவதற்கான வாய்ப்புக்கள் (socializing), அவர்கள் மீதான கண்டிப்பு முறைமைகள் (disciplining practices) சரிவர கைக்கொள்ளப்படவில்லை எனில் அது அவர்கள் மூளை வளர்ச்சியில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள், அவர்கள் வாழ்க்கை முழுவதும் மட்டுமன்றி, அவர்களினூடான எதிர்கால சந்ததிகளிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இவ்வாறான பாதிப்புக்களை, நான் எனது சமுதாயத்திலும் எங்கும் நிறையவே பார்த்துவிட்டேன். அதனால் தான் இவற்றை தொடர்ந்தும் பேசி வருகின்றேன்.
 
இது எமது இனத்திற்கு மட்டுமுள்ள சவால் அல்ல. அனைவரும் எதிர்கொள்ளும் சவாலும் தான். எனினும் கடந்த 40 ஆண்டுகளாக பல சூறாவளிவளினூடாக பயணிக்கும் ஒரு இனம் என்ற வகையில் எமது சவால்கள் சற்று அதிகரித்துக் காணப்படுகின்றன. இருக்க தற்போதைய இளைய தம்பதிகள் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு அதிகரித்த சவால்களிடையே இதன் முக்கியத்துவம் ஏனோ அவர்களுக்கு புரிய மறுப்பது, அவர்கள் சார்ந்த இவ்விடயத்திலான கரிசனையை அதிகரித்துள்ளது.
 
குழந்தையின் சிறந்த வளர்ச்சியில் முக்கியமான முதல் ஜந்து ஆண்டுகளில், மூன்று விடயங்கள் பெற்றோருக்கு முதன்மையாகின்றன. முதலாவது ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை எப்போதும் உறுதிப்படுத்தல் (good nutrition). அதற்கு ஊட்டச்சத்து உணவுகள் எவை என்பது குறித்த அறிவும், அவற்றை பிள்ளை விரும்பி உண்ணும் வகையிலான தயாரிப்பு முறைகள் குறித்த தேடுதல்களும் அத்தியாவசியமாகின்றன. தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளே பிள்ளையின் மூளை வளர்ச்சியில் பிரதான பங்கு வகிக்கின்றன. அதாவது மூளையின் முறையான வளர்ச்சியிலும், அதன் செயற்ப்பாட்டிலும் பாதிப்பு ஏற்படும் வகையில் முதல் ஜந்து ஆண்டுகளில் கவலையீனமாக நடந்து கொண்டால், அதனை பின்னர் சரிசெய்வது கடினமாகிவிடும். இரண்டாவது விளையாட்டுகளினூடாக பிள்ளையின் மூளையின் பயன்பாட்டைத் தூண்டுதல் (stimulation). பிள்ளைகளுக்கு பெற்றோர் பல விளையாட்டு உபகரணங்களை வாங்கிக் குவிக்கின்றனர். ஆனால் பிள்ளையின் மூளையின் பயன்பாடு மாறுபட்டு செயற்படுகின்ற வகையிலான உபகரணங்களில் கோட்டைவிட்டு விடுகின்றனர். அவ்வாறு இருந்தாலும் அவற்றை ஒரு முறைமைக்குள் மாற்றி, மாற்றி பிள்ளை விளையாடுவதினூடாக மூளையின் செயற்ப்பாட்டு ;விருத்தி முன்னேற்றம் காணும் வகையிலான, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறைமைக்குள் பிள்ளையை வழிப்படுத்துவதில் தவறிவிடுகின்றனர்.
 
இவற்றில் சிறந்து செயற்படுபபவர்கள், அவற்றை ஏனைய இளைய தம்பதிகளுடன் பகிர்ந்து அவர்களை வளப்படுத்துவதில் பின் நிற்பது ஒருபுறம், அவ்வாறு முயல்பவர்களுக்கான களங்கள் ஏனோ இதுவரை பெரிதாக உருவாகவில்லை என்பது மறுபுறம். இதேவேளை சிறுவர்களின் ஒன்றிணைவும், அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் கூட்டாக ஊக்கிவிக்கப்படுவதும், அதில் பெற்றோர் அனைவரும் அவர்களுடன் இணைந்து கொள்வதுவும் முதன்மை பெறுகிறது. ஆனால் இளைய பெற்றோரின் ஒன்றுகூடல்கள் தற்போதைய காலத்தில் அதிகரித்துள்ளன என்பது மட்டுமம் உண்மை. ஆனால் அங்கு ஒன்றில் தவிர்க்கப்படுவது அல்லது கவனிப்பாரற்று இருப்பது பெரும்பாலும் இவ்வாறான பிள்ளைகளே.
 
மூன்றாவது விடயம் அவர்கள் மீதான அன்புடன் கூடிய பாதுகாப்பு (protection). இவற்றை சாப்பாடு விளையாட்டு அன்பு என சுருங்கக் கூறலாம் (eat, play and love). இவ்விடயங்களிலான நிலைமை இலங்கையைப் பொறுத்தவரை கரிசனை தருவதாக யூனிசெவ் ஆதாரங்களுடன் சொல்லியுள்ளது. இலங்கையிலேயே அவ்வாறான நிலை என்றால் யாரும் கண்டு கொள்ளாத அக்கரை செலுத்தாத தமிழ்ப் பெற்றோரின் சிறுவர்களின் நிலை அச்சம் தருகிறது. அடுத்த பதிவில் மேலும் விவரமாக பார்ப்போம்...
 
- நேரு குணரட்ணம் -