img/728x90.jpg
தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை 1956 இல் ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது!

தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை 1956 இல் ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது!

சங்கரத்ன தேரரிடம் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைப்பு!

பாரம்பரியமாக தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் வடக்கு கிழக்கு பிரதேசத்தை 1956 இல் ஏற்றுக்கொண்டிருந்தால் நாட்டில் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது என ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களை சந்திது உரையாடியபோது வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமாகிய கௌரவ நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குறைகளை கேட்டறியும் முகமாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தலைமையிலான மத்தியகுழு அணியினர் மட்டக்களப்பில் தங்கியிருந்து மூன்று நாட்களாக மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று செவ்வாய் கிழமை கல்முனைக்கு சென்றபோது, அப்பகுதி தமிழ் மக்களுக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வருவதுடன் அண்மையில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி முன்னெடுக்கப்பட்ட சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தவருமான கல்முனை சுபத்திரா ராமய விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களை சந்தித்து உரையாடிய போது இவ்விடயத்தை எடுத்துரைத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது...

தர்மபால அரசனிற்கு முடிசூட்டும் வைபவத்திற்கான சடங்குகளை செய்வதற்குரிய முனிகள் இல்லாத காரணத்தினால் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் இருந்து முப்பதிற்கு மேற்பட்ட இளம் இந்து பிராமண முனிகள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். இவ்வாறு முடிசூடும் விழாவிற்காக வரவழைக்கப்பட்டிருந்த முனிகளுக்கு பௌத்த சிங்கள பெண்களை மணம் முடித்து வைத்து நிலங்களையும் வழங்கி இங்கேயே இருக்குமாறு தர்மபால அரசர் கேட்கப்பட்டதற்கிணங்க அவர்களும் அவ்வாறே இங்கு தங்கிவிட்டார்கள். அவர்களிம் வழித்தோன்றல்கள்தான் வெற்றி முனி போன்றவர்கள். இவர்கள் எல்லோரும் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் இருந்து வந்த இந்து பிராமணர்கள். ஆனால் தற்போது சிங்கள பௌத்தர்களாக உள்ளார்கள். ஆகவேதான் பெரும்பான்மையினருடன் சிறுபான்மையினர் சேரும் போது அவர்களது தனித்துவம் இல்லாது போகும் நிலையேற்படும். அதனால் தான் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மொழி பேசும் மக்களது தனித்துவம் உறுத்திப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றோம்.

பாரம்பரியமாக தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் வடக்கு கிழக்கு பிரதேசத்தை தமிழர்களின் தாயகமாக 1956 இல் ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்காது. ஆட்சிக்கு வருவதற்காக S.W.R.D.பண்டாரநாயக்க அதை செய்திருந்தாலும் ஒரு சில வருடங்களில் Reasonable use of Tamil என்ற சட்டத்தைக் கொண்டுவந்திருந்தார். இருநூற்றிற்கு மேற்பட்ட புத்த பிக்குகள் தான் அன்று அதனை கிழித்தெறிந்து நிப்பாட்டியிருந்தார்கள். அதே போன்ற பல சம்பவங்கள் பின்னரும் நடைபெற்றுவந்தபடியால் பிரச்சினை 70 வருசமா இழுபட்டு போகுது.

அந்த அடிப்படையில் பார்ப்பதானால் அந்தந்த இடத்தில் இருக்கிற மக்கள் தம்மைத்தாமே பார்த்துக்கொள்ளக்கூடிய ஏற்பாட்டை செய்ய வேண்டியது கட்டாயம். மலை நாட்டில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய கலாசாரம், மொழி மற்றும் பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் அதனை அவர்கள் பாதுகாத்துக்கொள்ள வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் முஸ்லீம்களுக்கு தனியான அலகொன்றை உள்ளடக்கியதாக வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லீம்களுக்கு ஒரு தனி அலகு கொடுக்க வேண்டும் என்பது எமது கட்சியின் நிலைப்பாடு என்பதனையும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கல்முனை சுபத்திரா ராமய விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களை சந்தித்து உரையாடிய போது மேலும் கூறியிருந்தார்.

முன்னதாக கல்முனை சுபத்திரா ராமய விகாரைக்கு சென்றிருந்த வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் மக்கள் கூட்டணி குழுவினரை வரவேற்று கருத்துரைத்த ரன்முத்துகல சங்கரத்ன தேரர், இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ இந்த நாட்டை பிளவுபடுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒரே நாடு என்ற அடிப்படையில் நாம் ஒற்றுமையாக வாழ வேண்டுமென கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில்...

வடக்கில பிரச்சி இருக்கு. அது உங்களுக்கு தெரியும். கிழக்கு மாகாண பிரச்சினை குறித்து மிகுந்த அக்கறை செலுத்தப்பட வேண்டும். இங்கு தமிழ் அரசியல் வாதிகள் இருக்கிறார்கள். அதிகாதிகள் இருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள தமிழ் மக்கள் என்னிடம் வந்து தமது பிரச்சினைகளை கூறுகிறார்கள். நீங்கள் வடக்கு மாகாண முதலமைச்சரா இருக்கும் போது அங்கு வந்து பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஆனால் முடியாமல் போய்விட்டது. இப்ப பார்த்தது மிச்சம் சந்தோசம்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விடயம் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் நிலவிவரும் தமிழ்-முஸ்லீம் முரண்பாடுகள் குறித்தும் வேலைவாய்ப்பு, பட்டதாரிகள் விவகாரம் குறித்தும் எடுத்துக்கூறியிருந்தார். தொழில் ஏதும் இல்லாமலும் பசியோடும் மக்களை வைத்துக்கொண்டு சமாதானம், சகவாழ்வு, நல்லிணக்கம் பேசி பிரியோசனம் இல்லை. அம்பாறை மாவட்டத்தில் நான்கு அமைச்சர்கள் இருந்தும் தமிழர்கள் கீழ் நிலை உத்தியோகத்தர்களாகவும் கூலி வேலையாட்களுமாகவே இருந்து வருகின்றார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலராக தற்போது பதவியில் இருப்பவர் மிகவும் திறமையானவர். முழு அதிகாரம் மிக்க பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படும் போது இவரை பணி செய்ய அனுமதிப்பார்களா தெரியாது. ஆனால் இவர் இங்கு தொடர்ந்தும் பணி செய்ய வேண்டும். தேவையேற்பட்டால் அவருக்கு ஆதரவாகவும் நான் போராடுவேன் என்று கூறிய சங்கரத்ன தேரர் அவர்கள், நியாயமான மனச்சாட்சியுடன் எல்லா இன மக்களும் திருப்தி அடையக் கூடிய ஆட்சியை மேற்கொள்ளும் ஒருவரே எதிர்கால கிழக்கு மாகாண முதலமைச்சராக வர வேண்டும் என்பதே இங்குள்ள மக்களது கருத்தாக உள்ளதாகவும் அதற்காக தாம் பாடுபடுவேன் என்றும் மேலும் கூறியிருந்தார்.

கல்முனையில் அமைந்துள்ள சுபத்திரா ராமய விகாரைக்கு செவ்வாய் கிழமை காலை 9.30 மணிக்கு சென்றிருந்த வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பழக்கூடையினை விகாராதிபதியிடம் வழங்கி கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கு ஆதரவான செயற்பட்டு வருகின்றமைக்கு நன்றியை தெரிவித்து உரையாடியிருந்தார். உடன் தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் நிர்வாக இணை உப செயலாளருமான எஸ்.சோமசுந்தரம், நிர்வாக இணை உப செயலாளர் ஆ.ஆலாலசுந்தரம், சட்ட விவகரங்களுக்கான உப செயலாளர் திருமதி ரூபா சுரேந்திரன், இளைஞர் அணி இணைப்பாளர் கே.கிருஸ்ணமீனன், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அன்ரனி கெப்ரியல், தொகுதி அமைப்பாளர் இரா.மயூதரன், கணக்காளர் ராஜா துரைசிங்கம், ஊடக உதவியாளர் சதீஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.