img/728x90.jpg
பௌத்த துறவியின் தகனம் இலங்கை ஒரு தோல்வியுற்ற நாடு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது

பௌத்த துறவியின் தகனம் இலங்கை ஒரு தோல்வியுற்ற நாடு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நீராவியாடி இந்து கோவில் வளாகத்தில் அமைந்துள்ள இடத்தில் பௌத்த துறவி கொலோம்பா மாதலங்கர தேரரின் தகனம் தமிழர்களின் புனித வழிபாட்டுத் தலத்தை இழிவுபடுத்தும் செயலாகும். இந்த இடத்தில் தேரரைத் தகனம் செய்யக்கூடாது எனத் தடைசெய்த நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த தேரரின் உடலம் ஆலயத்தின் தீர்த்தக்கேணி அருகில் தகனம் செய்யப்பட்டுள்ளது. இது உலக மனித உரிமைகள் சாற்றுரையின் 9 வது பிரிவான '' நீதியான வழக்குக்கான உரிமை'' என்ற உறுப்புரையை மீறும் செயலாக் கருதப்படவேண்டும்.

இந்த பௌத்த வன்முறைக் கும்பலுக்கு பொது பலசேனாவின் செயலாளர் ஞானசர தேரர் தலைமை தாங்கியுள்ளார். சம்பவத்தின்போது இந்து சமய பக்தர்களையும் அவர்களின் வழக்கறிஞர்களையும் பௌத்த துறவிகள் மிரட்டியும் தாக்கியும் உள்ளனர். இப்படியான நிகழ்வுகள் 'இலங்கையில் சட்டத்திற்கும் மேலாகப் பௌத்த மதத்திற்கு முதலிடம் உள்ளது' என்பதை மட்டுமே நிரூபிக்கின்றது. நீதிமன்ற உத்தரவையும் மீறி தகனம் செய்ய, வன்முறையில் ஈடுபட்ட பௌத்த பிக்குகளுக்கு அங்கு நின்ற காவல்துறையும் இராணுவமும் பக்கபலமாக நின்று உதவியுள்ளனர். இது உலக மனித உரிமைகள் சாற்றுரையின் 7 வது பிரிவான ''சட்டத்தின் முன் சமவுரிமை'' என்ற உறுப்புரையை மீறும் செயலாகும்.

இப்படியான நிகழ்வுகள் சிறிலங்காவில் சட்டம் மற்றும் ஒழுங்குகள் இல்லாத ஒரு தோல்வியுற்ற நாடு என்பதையும், தமிழர்களுக்கு சிறிலங்காவின் சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்பைப் பெற முடியாது என்பதையும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன. வன்மமும் வன்முறைச் செயற்பாடுகளும் கொண்ட சிங்கள பௌத்த துறவி ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டியதற்காகவும் நீதிமன்ற அவமதிப்பிற்காகவும் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறாயினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பணிப்பின் பெயரில் அவரக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டு அவரது இனவெறியாட்டங்களைத் தங்குதடையின்றி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடைபெறும் இந்த நிகழ்வுகள் சிறிலங்காவிற்குள் தமிழர்கள் நீதியை என்றுமே எதிர்பார்க்க முடியாது என்பதில் சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் நிரூபிக்கப்படுள்ளதுடன் கடந்த ஏழு தசாப்தங்களாக பலமுறை திரும்பத் திரும்ப நடைபெற்றுள்ளது என்பதும் நிரூபணமாகின்றது. இலங்கையில் நல்லிணக்கத்திற்கான தங்கள் முயற்சி பயனற்றது என்பதை ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் உணர்ந்துகொள்வது மிக அவசியம் ஆகும். சிறிலங்காவில் இனப்படுகொலை நடப்பதைத் தடுக்கவும், மீதமுள்ள தமிழ்மக்களை சிறிலங்காவின் ஆக்கிரமிப்புப் படைகள் மேலும் துஷ்பிரயோகம் செய்வதிலிருந்து பாதுகாக்கவும் தமிழர்கள் ஐ.நா. சபையின் தலையீட்டை அவசரமாக நடைமுறைப்படுத்தக் கோருகின்றனர். அவ்வாறு செய்யத் தவறும்பட்சத்தில் இந்த பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் அபாயம் உள்ளது.


''தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்''
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

PDF

PDF Link