img/728x90.jpg
1977 தமிழ் இனப்படுகொலை

1977 தமிழ் இனப்படுகொலை

ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் மற்றுமொரு இருண்ட நாள்

இனப்படுகொலைகளை தடுக்கத் தவறும் பட்சத்தில் அவை பிற்காலத்தில் பன்மடங்கு மூர்க்கமான இனப்படுகொலைகளுக்கு வழிவகுத்திருக்கின்றன என்ற வரலாற்று உண்மையை 1977 தமிழ் இனப்படுகொலை உணர்த்துகிறது. ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் மற்றுமொரு இருண்ட நாள் 1977. முதன் முதலில் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய இன அழிப்பு கலவரம் மேற்கொள்ளப்பட்ட நாளாகும்.

1977 நாடாளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்குப் பகுதியில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழத் தனிநாடு கோரிக்கையை முன்வைத்தது. இன ஒடுக்குமுறையாலும் உரிமை மறுப்பினாலும் பாதிக்கப்பட்ட வடகிழக்குத் தமிழ் மக்கள் இலங்கை அரசினால் தீர்வு முன்வைக்கப்படாத நிலையில் தனிநாட்டுத் தீர்மானத்திற்கு வந்தனர்.

இலங்கையின் சுதந்திரத்திற்காக சிஙகளவர்களைக் காட்டிலும் முன்னின்று போராடிய ஈழத் தமிழ் மக்கள் சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகினர். சிறுபான்மை இனம் என்ற காரணத்தினால் அவர்களுக்கான ஆட்சி அதிகாரங்கள் மத்தியில் மறுக்கப்பட்டன.மக்களின் வாழ்வியல் கட்டமைப்புசார் உரிமைகளை பெரும்பான்மையினம் மறுத்து தனது வசமாக்கியது.

தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த வடகிழக்கில் சிங்கள பௌத்த அரசாட்சியினால் பல்வேறு இன ஒடுக்குமுறையும் உரிமை மறுப்பும் மேற்கொள்ளப்பட்டது. 1956இல் தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டதும் வடகிழக்கு ஸ்தம்பித்தது. பின்னர் தமிழ் மக்கள் தமது பகுதிக்கான சுய அதிகாரங்களைக் கோரிப் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.

இதேவேளை தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தமிழரசுக் கட்சி சமஸ்டி ஆட்சிமுறையை வடகிழக்கில் அமுல்படுத்துமாறு இலங்கை ஆட்சியாளர்களிடம் கோரியது. தனிச்சிங்களச் சட்டத்தை கொண்டு வந்த பண்டார நாயக்க பின்னர் சமஷ்டியே தீர்வென்றும் கூறும் நிலைக்கு வந்தார். இதனையடுத்து அவருக்கும் தந்தை செல்வாவுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் நடைபெற்றன.

எனினும் சமஷ்டியை நடைமுறைப்படுத்தும் தமிழர்களுக்கு அதிகாரங்களை கொடுக்கும் நிலை ஏற்படவில்லை. சிங்கள பௌத்த இனவாதிகள் தமிழர்களுக்கு துரும்பையும் கொடுக்கக்கூடாது என்று இன்றுபோல் அன்றும் தலைவிரத்தாடினர். இந்த நிலையில் தமிழ் தலைவர்கள் தனிநாடே தீர்வு என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன் அடிப்படையில் 1974இல் தமிழ் கட்சிகள் அனைத்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் ஒன்றிணைந்தன.

இவ்வாறு ஒன்றிணைந்த தமிழ் தலைமை 1976இல் வட்டுக்கோட்டையில் கூடி தமிழ் ஈழம் என்ற தனிநாட்டை அடைவதே இலட்சியம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை எடுத்தனர். இந்த தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் போட்டியிட்டனர். 1977 ஜூலை 21இல் நடைபெற்ற தேர்தலில் வடகிழக்கு மாகாணத்தில் அனைத்துத் தேர்தல் தொகுதிகளிலும் வெற்றி பெற்று, அதிக உறுப்பினர்களைக் கொண்டு இலங்கை பாராளுமன்றத்தில் இரண்டாவது கட்சியாக உருவெடுத்தது.

இதனையடுத்து அப்போதைய ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம் தமிழ் இனப்படுகொலைக்கு வித்திட்டது. இனவெறியர்களைத் தூண்டி வடகிழக்கிற்கு வெளியில் வசிக்கும் தமிழ் மக்களை படுகொலை செய்யுமாறு அறிவிறுத்தியது. அனுராதபுரம், புத்தளம், கொழும்பு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்தப் படுகொலையில் சுமார் 400 தமிழர்கள் கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமானவர்கள் அழிக்கப்பட்டதாக அரசசார்பற்ற நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அவைகளின் புள்ளி விபரங்களின்படி சுமார் 1500க்கும் அதிகமானவர்கள் அழிக்கப்பட்டுள்ளார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மைகள் அரசசினால் மறைக்கப்பட்டள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அப்போதைய அரசாங்கம் முன்னெடுத்த சன்சோனி ஆணைக்குழு (Sansoni Commission) வெறும் 300பேர்தான் கொல்லப்பட்டனர் என்று கூறியது. எவ்வாறெினும் தமிழ் மக்கள் எதிரான இன அழிப்பு என்பதன் மூலம் ஒரு இனத்திற்காக எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த படுகொலைச் சம்பவம் இலங்கையில் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதல் இனப்படுகொலைச் சம்பவம் என்று வரலாற்றின் கறுப்பு நிகழ்வாக இடம்பெற்றுள்ளது.

ஒரு அரசே தன்னுடைய பிரசைகளை இவ்வாறு இன அழிப்பு செய்ய உத்தரவிட்டதன் மூலம் இலங்கை அரசு தமிழ் இன ஒடுக்குமுறையை மிகவும் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளுகிறது என்ற கசப்பான உண்மை அம்பலமானது. இந்த இனப்படுகொலைக்கு ஊக்குவித்த இலங்கை அரசு பின்னர் இதனைக் காட்டிலும் பன்மடங்கு கொடிய 1983 இனப்படுகொலைக்கு ஊக்குவித்தது.

தமிழ் மக்களின் ஜனநாயக வெளிப்பாடுகளுக்குப் பதிலாக இன அழிப்பை மேற்கொள்ளும் இனவாத மேலாதிக்கப் போக்கு தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தை மேலும் மேலும் பலப்படுத்தியது. இலங்கை அரசியலில் தமிழர்கள் வெளிப்படுத்தும் ஜனநாயகக் குரலுக்கு அவர்கள் வெட்டிச் சரிக்கப்படுவதே பதில் என்றே இலங்கை அரசு செயலில் காட்டியது. பிரிந்து செல்லுதலே இன அழிப்புக்கும் ஒடுக்குமுறைக்குமான தீர்வு என்று தமிழர்கள் தீர்மானித்தனர்.

இப்பேடுகொலை இடம்பெற்று 39 வருடங்களின் பின்னரும் ஈழத் தமிழ் மக்கள் ஜனநாயகக் குரலில் தமது உரிமையைக் கோரினாலும் வடகிழக்கில் வன்முறையை திணிக்கும் தெற்கின் இனவாதச் செயற்பாடுகள் தீவிரத்துடன் உள்ளன.

இன்றும் குறைந்தபட்சமாக வடகிழக்கு மக்கள் சமஷ்டியை கோரி வருகிறார்கள்.

அதனையும் தனிநாடு என்று சித்திரிக்கும் சிங்களப் பேரினவாதிகள் அதற்கு எதிராகவும் கடுமையாக செயற்பட்டு தம் அரசியலை முன்னெடுக்கின்றனர்.

இவ்வாறு இனப்படு கொலைகளை மேற்கொண்டு, தமிழ் இனத்திற்கான உரிமையை மறுத்து அவர்களை மேலாதிக்கம் செய்து அடக்கி ஒடுக்க நினைப்பதும் மீண்டும் மீண்டும் அழிவையும் இன முரண்பாடுகளையுமே தந்துள்ளது.

தமினிப்படுகொலை வரலாற்றில் இடம்பெற்ற 1977 ஆவணிப் படுகொலையை ஈழத் தமிழர்கள் நினைவுகூறும் இன்றைய நாளில், தமிழர்களின் உரிமைகளை அவர்களிடமே கொடுத்து அவர்களை மேலாதிக்கம் செய்யாத ஒரு அணுகுமுறையை சிங்கள தேசம் மேற்கொள்ளுமா?