img/728x90.jpg
ஓடவும் முடியாமல் - ஒளியவும் முடியாமல்- உலகின் முன்னாள் சிக்கிக் கொண்ட இலங்கையின் அரசியல் வியாபாரிகள்

ஓடவும் முடியாமல் - ஒளியவும் முடியாமல்- உலகின் முன்னாள் சிக்கிக் கொண்ட இலங்கையின் அரசியல் வியாபாரிகள்

ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல், உலகின் முன்னாள் சிக்கிக் கொண்ட, இலங்கையின் அரசியல் வியாபாரிகள்

இலங்கையின் இன்றைய அரசியல் தலைமைகள் இன்றுதான் அரசியலுக்கு வந்த புதியவர்கள் அல்ல, காலத்திற்கேற்ற புதிய சிந்தனைகளைக் காவி மாற்றங்களை ஏற்படுத்தவல்ல புனிதர்களுமல்ல, என்பதை கடந்த ஞாயிறு இலங்கையில் நடந்தேறிய ஒரு பெரும் நரபலி மீண்டும் நிரூபித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, தமது தனிப்பட்ட அரசியல் இருப்பிற்காக, இன, மத முரண்பாடுகளை தொடாந்தும் வளர்த்து, அதில் அப்பாவி மக்களைப் பலியிட்டு, அதனூடாக தமது ரத்த அரசியல் வியாபாரத்தை தொடர்ந்தும் அரங்கேற்றும் அதே சாத்தான்களே, அரசியல் சிம்மாசனத்தை தொடர்ந்தும் கடந்த 50 ஆண்டுகளாக அலங்கரித்து வருகின்றனர். இன்றைய சூழல் ஒரு சனாநாயக நாட்டில் ஏற்ப்பட்டிருந்தால், பல அரசியல் தலைகள் உடன் உருண்டிருக்க வேண்டும். ஆனால் அதுதான் இலங்கையில் என்றுமே நடைபெறாது. இந்நிலையில் ஞாயிறு நடந்தேறிய படுகொலைகளுக்கு, இந்த அரசியளாலர்களே முழுப்பொறுப்பு என்பது முழுமையாக நிரூபணமாகிவரும் நிலையில், இதன் பின்னணிகளை கட்டம் கட்டமாக விரிவாகப் பார்ப்போம்.
 
ஞாயிறு படுகொலைகளின் பின்னணியில் இருந்த தீவிரவாதக் குழுவான, தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பு, முன்னர் அறியப்படாத அமைப்பு என்ற விம்பம் உருவாக்கப்படுகிறது. அது உண்மையா? என்றால், இல்லை என்பதே பதில். எப்படி? என்றீர்களானால், அது குறித்துப் பார்ப்போம். பல பின்னணிகளை நீண்ட காலம் பின்னோக்கி ஆரம்பிக்க முடியும். அதாவது ராஜபக்ச, கோத்தபாயா காலத்தில் இருந்து மூலத்தை ஆதாரத்துடன் அலசலாம். அதை பின்னர் பார்ப்போம். தற்போது சமீபத்தில் இருந்தே வருவோம். தாக்குதலுக்கு முன்னர் ஏப்ரல் 11 எனத் திகதியிடப்பட்டு, பாதுகாப்பு உயர் வட்டாரங்களில் பகிரப்பட்ட இரகசியத் தகவல்களில் என்ன உள்ளது?
 
உதவிப் பொலீஸ் மாஅதிபர் பிரியலால் டசநாயக்காவால், முக்கிய பாதுகாப்பு அங்கங்களான, அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவு, தூதராலங்களுக்கான பாதுகாப்புப் பிரிவு, நீதிக்கட்டமைப்புக்களுக்கான பாதுகாப்புப் பிரிவு, மற்றும் முன்னாள் சனாதிபதிகளுக்கான பாதுகாப்புப் பிரிவு என்பவற்றிற்கு, பின்வரும் விடயங்கள் பகிரப்பட்டுள்ளன. அதில் இவ்விடயங்கள் பாதுகாப்பு அமைச்சினால், பொலீஸ் மாஅதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் பொலீஸ் மா அதிபரால் ஏப்ரல் 9ஆம் நாள் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையையும், இதனுடன் இணைத்துப் பார்க்கவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் அச்சுற்றறிக்கையின் 2 முதல் 4ஆம் பக்கங்களில் உள்ள விடயங்களில் அதீத கவனம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "தேசிய தாவுகீத் ஜமாத்" எனத் தலைப்பிட்டு அதன் தலைவன் மொகமட் சகரன் இந்நாட்டில் தற்கொலைத் தாக்குதலுக்கு தயாராகியுள்ளமை குறித்தது, என்று வேறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒன்றைக் கவனத்தில் கொள்ளவும் பாதுகாப்பு அமைச்சில் இருந்தே விடயம் ஆரம்பிக்கிறது.
 
இந்த மொகமட் சகரன் தான் தற்போது ஜசஸ் என்ற மத்திய கிழக்கு தீவிரவாத அமைப்பு, இலங்கைத் தாக்குதலுக்கு உரிமைகோரி வெளியிட்டுள்ள காணொளியில், முகத்தை மறைக்காது நடுவில் உள்ள நபர். குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு வெடித்தவர்களில் இவனும் ஒருவன். ஏப்ரல் 11ஆம் நாள் இரகசிய பாதுகாப்பு சுற்றறிக்கையில், வேறு என்ன விடயங்கள் தெவிக்கப்பட்டுள்ளன? தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பின் தலைவன் மொகமட் சகரன் மேற்கொள்ளவுள்ள தற்கொலைத் தாக்குதல்களின் விபரங்கள் வருமாறு, என அது தொடர்கிறது. வெளிநாட்டு உளவு அமைப்பொன்று எமக்கு சகரன் கஷ்மி என்றழைக்கப்படும், மொகமட் காசிம் மொகமட் சகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட, தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பின் தலைவனும், அவனைப் பின்பற்றுபவர்களும் இந்நாட்டில் தற்கொலைத் தாக்குதல்களுக்கு திட்டமிட்டுள்ளனர் என அறியத்தந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவர்களின் அத்தகவலில் கத்தோலிக்க தேவாலயங்களும், இந்தியத் தூதரகமும் இலக்குகள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தகலை வழங்கிய வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவு வேறுயாருமல்ல, இந்தியா தான். அவர்களுக்கு இது எவ்வாறு தெரியுமென்றால்? அவர்களிடம் ஒரு தீவிரவாதி மாட்டிக் கொண்டான். அவனிடம் மேற்கொண்ட விசாரணைகளிலேயே அவன் இலங்கையில் சகரனிடம் தீவிரவாதப் பயிற்சிகளைப் பெற்றதையும், சகரனின் திட்டத்தையும் கக்கியுள்ளான். இத்தகவல் ஏப்ரல் 4ஆம் நாள் பகிரப்பட்டுள்ளது என்பது வேறு விடயம். ஈற்றில் தாக்துதல்கள் நடாத்தப்பட்டது ஏப்ரல் 21ஆம் நாள். ஆனால் தமக்கு எதுவும் தெரியாது என்பதை அமெரிக்க உளவுத்துறை வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளது. மேலும் ஏப்ரல் 11ஆம் நாள் இரகசிய சுற்றறிக்கையில், டிசம்பர் 26ஆம் நாள் 2018இல், மாவனெல்லவில் சமயச் சிலைகள் சேதமாக்கப்பட்டதின் பின், சகரன் கஷ்மி மற்றும் சகீட் இருவரும் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில், உள்ள ஒலுவில் கிராமத்தில் ஒளிந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக வேறு அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
கேகாலை மாவட்டத்தில், கேகாலை நகருக்கும் கடுகனாவைக்கும் இடையில், கொழும்பு கண்டி வீதியில் அமைந்துள்ளது தான் மாவனெல்ல. இங்கு தான் டிசம்பர் 26ஆம் நாள் புத்தர் சிலைகள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால், சுட்டியல்கள் கொண்டு அடித்துச் சேதமாக்கப்பட்டன. மானெல்லவில் சிங்கள சமூகத்துடன் கணிசமான முஸ்லீம் மக்களும் வாழுகின்றனர்.
 
இப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் தான் தற்போதைய அமைச்சர் கபீர் கசீம். இங்கு இரு சமூகங்களுக்குமான முறுகல் நிலை, 2001இல் இருந்தே வியாபித்தே இருக்கிறது. அது ஒரு பெரும் கதை. புத்தர் சிலைகள் உடைப்புச் சம்பவம் பரபரப்பாக நடாளாவிய ரீதியில் பேசப்பட்ட விடயம் வேறு. அது குறித்து அரச பத்திரிகை சண்டே ஒப்சேவர் டிசம்பர் 30 நாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றைப் பாருங்கள், Seven suspects had been taken in for questioning for destroying the Buddha statues in the Mawanella police division, while two more suspects are on the run. It was later found that they had already left the Mawanella police division, police sources said. இது குறித்து அப்போது பேசிய ரணில் ஜயா, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னாள் நிறுத்தப்படுவார்கள், எனப் பிரதமராக சூளுரைத்திருந்தார் வேறு. ஆக மொத்தத்தில் ஏப்ரல் ரகசிய குறிப்பில் குறிப்பிட்ட இருவர் (சகரன் கஷ்மி மற்றும் சகீட்) குறித்து கடந்த டிசம்பர் மாதத்திலேயே தெரியும், தேடிக் கொண்டிருந்திருக்கிறீர்கள். அதற்கு முன்னரே இவர்களுக்கு சகரன் கஷ்மியையும், தேசிய தாவுகீத் ஜமாத் என்ற அமைப்பையும் தெரியும் என்றது வேறு விடயம்.
 
அடுத்து, அவ்விரகசிய சுற்றறிக்கையில் ரில்வான் என்பவர் அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர் யார் என்றால், சகரன் கஷ்மியின் இளைய சகோதரர். இவர் தான் சகரனுக்கு ஆட்களை சேர்த்துக் கொடுப்பவர் என்றும், அவரது முழுப்பெயர் முகமட் காசிம் மொகட் ரில்வான் எனவும், தெரிவிக்கப்பட்டு அவரது தேசிய அடையாள அட்டை இலக்கம் 903432624V எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, காத்தான்குடி பொலிஸ் பகுதியில், இந்த முகவரியை நிரந்தரவதிவிடமாகக் கொண்டவர், எனவேறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அம்முகவரி இங்கு தவிர்க்கப்படுகிறது. என்ன உங்களுக்கு தலைசுற்றுகிறதா? முகநூலில் லைக் போட்ட தமிழர்களையும், கணணியில் பாட்டுக் கேட்ட தமிழர்களையும், ஆய்ந்து, அறிந்து இன்றும் கைது செய்யும் சிறீலங்கா உளவுத்துறையும் பாதுகாப்புத்துறையும், இவ்வளவு விபரங்களை கொண்டிருந்தும் எதுவும் செய்யாதது ஏன்? ஆழமாக யோசியுங்கள்...
 
மார்ச் 10இ 2018இல், காத்தான்குடியில் தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பிற்கும், மற்றுமொரு மத அமைப்பிற்கும் இடையில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து, ரில்வான் தனது நெருங்கிய சகா ஒருவரின் வீட்டில் ஒலுவில் பிரதேசத்தில, ஒளிந்து வாழுவது கண்டறியப்பட்டுள்ளது என அடுத்து வருகிறது. ஒளிந்திருந்தாலும் ரில்வான் சகரனுக்காக அக்கரைப்பற்று (அம்பாறை மாவட்டம்), குளியாப்பிட்டிய (குருநாகல் மாவட்டம்), புத்தளம் (பு;த்தளம் மாவட்டம்), மாவனெல்ல (கேகாலை மாவட்டம்) மற்றும் திகாரிய (கம்பகா மாவட்டம்) பகுதிகளில் ஆட்கைளச் சேர்த்த வண்ணமேயுள்ளான் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே கடந்த டிசம்பரில் அல்ல, கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் இவர்களைப் பற்றி நன்கு தெரியும். இது தவிர அவர்கள் ஆட்களைச் சேர்த்ததாக குறிப்பிட்டுள்ள மாவட்டங்களைப் பாருங்கள். ஏப்ரல் 21 தாக்குதலில் தற்போது அடையாளம் காணப்பட்டோரில், கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தோரும் உண்டு என்பது வேறு. இவை அனைத்திற்கும் சிகரம் வைப்பது போன்றது தான் அடுத்த விபரம். ரில்வான் தனது மனைவியையும் பிள்ளைகளையும், இரவு 11 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் இடையில் குறித்த முகவரியில் சென்று சந்திப்பதாக வேறு மேலும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது தான். அந்த முகவரி இங்கு தவிர்க்கப்படுகிறது. உங்களுக்கு கோபம் வந்தால் கோபப்பட்டுக் கொள்ளுங்கள், இலலை சிரிப்புவந்தால் வாய்விட்டுச் சிரித்துக் கொள்ளுங்கள். இல்லை இன்று அநியாயமாக அரசியல் காட்டேரிகளுக்கு பலியிடப்பட்ட மக்களுக்காக அழுகை வந்தால், வாய்விட்டு அழுது கொள்ளுங்கள். அடுத்த பதிவில் மேலதிக விபரங்களுடனும் ஆதாரங்களுடனும் சந்தித்துக் கொள்வோம்...
 
- நேரு குணரட்னம் -