img/728x90.jpg
சோழர்களின் நீர் மேலாண்மை சொல்லும் பாடம்

சோழர்களின் நீர் மேலாண்மை சொல்லும் பாடம்

உயிர் வாழ்வதற்கு உணவு தேவை. உணவு உற்பத்திக்கு நிலமும் நீரும் தேவை. நிலத்துடன் நீரை இணைப்பதுதான் ஓர் ஆட்சியின் தலையாய கடமை!

எவ்வளவு பெரிய படை வைத்திருந்தாலும் வேற்று மன்னர்களைப் போரில் வென்றாலும் அவற்றால் ஓர் அரசின் புகழ் இம்மண்ணில் நிலைக்காது; உணவு உற்பத்திக்குத் தேவையான நீரை ஆறுகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் வழியாகத் தட்டுப்பாடில்லாமல் எந்த மன்னர் தருகிறாரோ அந்த மன்னர் புகழ்தான் இம்மண்ணில் நிலைக்கும் என்று பாடினார் புலவர் குடபுலவியனார் (புறம் – 28).

பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அறிவுரை கூறும் வகையில் இப் புறநானூற்றுப் பாடல் இருந்தாலும் தமிழ்நாட்டில் அனைத்து அரசர்களுக்கும் பொருந்தக்கூடிய அறிவுரை இது. அனைத்துப் புலவர்களின் கருத்தும் இதுதான்!

நீர் மேலாண்மையில் சோழர்களின் தனித்திறம்

சோழ மண்டலம் பெரிதும் மருத நிலம் ஆனதாலும், காவிரித் தாயின் பாலருந்தி வேளாண்மை செழித்ததாலும் நீர் மேலாண்மைக்கு முன்னுரிமை தந்தனர் சோழர்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரியில் கல்லணை எழுப்பி நீரின் போக்கைப் பாசனத்திற்கு ஒழுங்குபடுத்தித் தந்த பேரரசன் கரிகால் பெருவளத்தான். சோழநாட்டின் மீது பாண்டியரும் சேரரும் படையெடுத்தபோது நீடாமங்கலம் அருகே உள்ள வெண்ணிப்பரந்தலை என்ற இடத்தில் இளம் கரிகாலன் அவர்களை எதிர்த்துப் போர் புரிந்து வென்றான். அந்த வெற்றியின் நினைவாக மக்களுக்குப் பயன்தரும் செயல் ஒன்றைச் செய்ய நினைத்தான்.

காவிரியாறு கல்லணைப் பகுதிக்கு வந்தவுடன் பல்வேறு பிரிவுகளாக ஓடும். வெவ்வேறு ஆண்டுகளில் வேறுவேறு திசைகளில் ஓடும். அதை ஒழுங்குபடுத்துவதற்காக – கொள்ளிடம் பகுதியில் ஓர் அணை எழுப்பினான். இப்போது வெண்ணாறு என்ற பெயரில் ஓடிய காவிரியின் ஒரு பிரிவுக்குக் கரை எழுப்பி, அதில் நிரந்தரமாகக் காவிரியை ஓடச் செய்தான். அந்தப் புதிய ஆற்றிற்கு வெண்ணிப்போர் வெற்றியின் அடையாளமாக வெண்ணியாறு என்று பெயர் சூட்டினான். அதுதான் இப்போது வெண்ணாறு.

நேரடி விதைப்பு மட்டுமின்றி, நாற்றுப்போட்டு நெல் நடும் பழக்கம் 2,000 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இருந்துள்ளது. இது சிலப்பதிகாரத்தில் வருகிறது. இப்போது தண்ணீரை ஆற்றிலிருந்தோ, வாய்க்காலில் இருந்தோ திறந்துவிட மூடித் திறக்கும் ஷட்டர்கள் இருக்கின்றன. இந்த ஷட்டர்தான் மதகு. மதகு என்ற வேளாண் பொறியியல் சொல் சோழ நாட்டில் பயன்படுத்தப்பட்டதை சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது.

பிற்காலத்தில் இராசராசன் பெற்ற வெற்றிகளுக்கு அடையாளமாக “உய்யக்கொண்டான்” என்ற கிளை ஆற்றைக் காவிரியிலிருந்து வெட்டினான். “உய்யக்கொண்டான்” என்பது சான்றோர்கள் இராசராசனுக்கு வழங்கிய பட்டங்களில் ஒன்று. அப்பெயரை மக்களுக்குப் பயன்படும் புதிய ஆற்றுக்குச் சூட்டினான்.

திருச்சி மாவட்டம் பெட்டைவாய்த்தலையில் காவிரியில் பிரிகிறது உய்யக்கொண்டான். தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள ஆவாரம்பட்டியில் அந்த ஆறு முடிவடைகிறது. வழி நெடுக ஏரிகளுக்குப் பாசனம் தந்து நிறைவடைகிறது.

உய்யக்கொண்டான் ஆற்றுக்காகக் காவிரிக் கரையில் வெட்டப்பட்ட இடம் வெட்டு வாய்த்தலை என்று அப்போது அழைக்கப்பட்டது. அப்பெயர்தான் பின்னர் பெட்டவாய்த்தலை என்று திரிந்துள்ளது.

சோழ மண்டலத்தில் கல்லணையிலிருந்து நாகூர் கடற்கரை வரை தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் ஒரே சமவெளி. மலைகளோ, பாறைகளோ இல்லை! சாகுபடிக்கு ஏற்ற மிகப் பெரும் சமவெளி! இந்தச் சமவெளியில் ஏராளமான கால்வாய்கள், வாய்க்கால்கள் வெட்டினர் சோழர்கள். பிற்காலத்தில் வெள்ளையராட்சியிலும் புதிய கால்வாய்கள் வெட்டப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் கல்லணைக் கால்வாய் (புதாறு).

உலங்கு வானூர்தியில் அமர்ந்து, கல்லணையிலிருந்து மூன்று மாவட்டங்களையும் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் காட்டுமன்னார்குடி வட்டங்களையும் மேலிருந்து பார்த்தால் பல வகைப்பட்ட கால்வாய்களும் வாய்க்கால்களும் சிலந்தி வலைபோல் தெரியும். இவற்றின் மொத்த நீளம் 25 ஆயிரம் கிலோ மீட்டர் என்கிறார்கள் பொறியாளர்கள்.

உலகத்தில் எந்த நாட்டிலும் இதுபோன்ற சமவெளியும் அதில் வலைப்பின்னல் போன்ற வாய்க்கால்களையும் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆய்வாளர்கள். எல்லாம் இயற்கை கொடுத்த கொடையும் சோழர்கள் போட்ட விதையும்தான்!

சோழர்கள் செயல்படுத்திய நீர் மேலாண்மைத் திட்டங்கள்தான் பின்னர் விரிவடைந்தன. அதனால்தான் சோழநாடு சோறுடைத்து என்ற புகழ் வந்தது.

வீரசோழன், மதுராந்தகன் என்ற சிறப்புப் பெயர்கள் கொண்ட சோழ மன்னன் முதலாம் பராந்தகன் தஞ்சாவூரின் வடபகுதியில் ஓடும் வீரசோழ வடவாற்றையும், திருப்பனந்தாளுக்கு வடக்கே ஓடும் மதுராந்தக வடவாற்றையும் புதிதாக வெட்டியவன். கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி என்று அழைக்கப்படும் வீரநாராயணன் ஏரியையும் முதலாம் பராந்தகச்சோழன் அமைத்தான்.

தென்னார்க்காடு மாவட்டம் உலகபுரத்தில் உள்ள கண்டராதித்தப் பேரேரி முதற் பராந்தகன் மகன் கண்டராதித்த சோழனாலும், திருச்சி மாவட்டம் திருமழபாடி அருகே உள்ள செம்பியன் மாதேவிப் பேரேரி செம்பியன் மாதேவியாலும் அமைக்கப்பெற்றவை.

இராசராசன் தந்தை சுந்தரசோழனும் தமக்கை குந்தவையும் முறையே வட ஆர்க்காடு மாவட்டம் பிரமதேசம் என்ற ஊரில் சுந்தரப்பேரேரி, குந்தவை பேரேரி ஆகியவற்றையும் வெட்டினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியை கண்டராதித்தசோழன் மகன் உத்தமசோழன் அமைத்தான். புதுச்சேரியில் திருபுவனையில் உள்ள மதுராந்தகப் பேரேரியும் உத்தமச்சோழன் வெட்டியது.

கங்கை வரை சென்று போரிட்டு நாடுகளைக் கைப்பற்றி வெற்றியுடன் திரும்பிய இராசராசன் மகன் இராசேந்திரச்சோழன், அதன் அடையாளமாக செயங்கொண்டம் அருகே மிகப்பெரிய ஏரியை வெட்டி பாசனத்திற்களித்தான். அதன் பெயர் சோழகங்கம் எனப்படும் பொன்னேரி!

மேற்கண்ட ஏரிகள் எல்லாம் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

இன்னும் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. ஆனால், இன்றைய நிலை என்ன?

ஏரிகளையும் புதுப்பித்துப் பாதுகாக்கவில்லை. காவிரி உரிமையையும் நிலைநாட்ட முடியவில்லை. இப்பொழுது நடைபெறும் மக்களாட்சி என்பது சோழர்களின் மன்னராட்சியை விட நீர் மேலாண்மையில் நீர் உரிமைக் காப்பில் மிக மோசமாக உள்ளது.

வெள்ளையர் ஆட்சி பாதுகாத்துத் தந்த நமது காவிரி உரிமையைக் கூட விடுதலை பெற்ற இந்தியாவில் நடுவண் அரசின் துணையடன் கன்னடர்கள் பறித்துக் கொண்டார்கள். காவிரி உரிமையை நிலைநாட்ட முடியாத, மீட்க முடியாத ஆட்சிகள் அடுத்தடுத்து தமிழ்நாட்டில் வந்துள்ளன. இரண்டாம் குலோத்துங்கன் மகன் இரண்டாம் இராசராசன் (கி.பி. 1146 - 1163) காலத்தில் மைசூருக்கு அருகே போசள மன்னன் முதலாம் நரசிம்மன் (கி.பி. 1141 - 1173) காவிரியின் குறுக்கே செயற்கை மலைபோல் அணை போட்டுத் தடுத்துவிட்டான். தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் வரவில்லை. மைசூர் மன்னருக்கு ஓலை அனுப்பினான் சோழன். மசியவில்லை போசளன். அடுத்து படையெடுத்துப் போய் அந்த அணையை உடைத்துக் காவிரியை விடுவித்தான் இரண்டாம் இராசராசன்.

இந்தச் செய்தியை புலவர் ஒட்டக்கூத்தர் தமது தக்கயாகப்பரணி காப்பியத்தில் எழுதியுள்ளார்.

"அலைகொன்று வருகங்கை வாராமல் மண்மேல்
அடைக்கின்ற குன்றூ டறுக்கின்ற பூதம்
மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன்
வரராச ராசன்கை வாளென்ன வந்தே".

கடந்த காலச் சாதனைகளிலிருந்து வீரம் பெறுவோம் நிகழ்காலத் தவறுகளிலிருந்து பாடம் பெறுவோம்!

- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் -