img/728x90.jpg
வயிறு கலக்குது சம்பந்தர் ஜயா

வயிறு கலக்குது சம்பந்தர் ஜயா

”தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியா, அமெரிக்கா உட்படச் சர்வதேச நாடுகள் பலவும் இலங்கைக்கு உதவி வழங்கின. புலிகளை அழித்த பின் இனப் பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்திக் கொடுப்போம் என்று சர்வதேசத்துக்கு இலங்கை அரசு வாக்குறுதி வழங்கியது. ஆயினும் போர் முடிந்து பத்து வருடங்கள் கடந்தும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டவில்லை . இந்த விடயத்தில் இந்தியா உட்படச் சர்வ தேசம் பார்வையாளர்களாகவே இருந்து வருகின்றது. இனியும் அந்த நிலைமை தொடரக்கூடாது. இதுகுறித்து அவர்கள் தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவேண்டும். அந்தக் கடமை அவர்களுக்கு உண்டு.... ஆக யுத்தம் முடிவடைந்து ஏறத்தாழ பத்து வருடங்கள் ஆகி விட்டன. சர்வதேச சமூகம் தொடர்ந் தும்பார்வையாளர்களாக இருக்கப் போகின்றதா? சர்வதேச சமூகம் தொடர்ந்தும் பார்வையாளர்களாக இருக்கலாமா? சர்வதேச சமூகத் துக்கு ஒரு கடமை இருக்குதல் லவா? இந்தியாவுக்கு ஒரு கடமை இல்லையா? ஏனைய நாடுகளுக்கு ஒரு கடமை இல்லையா?”

என சம்மந்தர் ஜயா முழங்கியதாக செய்தி ஒன்று கண்ணில் பட்டது. நம்மவர் செய்திகளைப் படித்தால் இரத்தம் அழுத்தம் சொல்லிக் கொள்ளாமல ஏகிறுகிறது. உடம்பு சொல்வழி கேக்குதில்லை என அந்தப்பக்கம் பார்க்காமல், எழுதாமல் இருக்கலாம் எண்டால் அதுவும் முடியுதில்லை. சரி ஜயா நிறைய கேள்விகள் நியாயமாகத் தான் கேட்டிருக்கிறியள்... ஆனா உங்கட்டை கொஞ்சம் கேள்விகள் எங்கண்டை தெளிவுக்காக...

புலிகளை அழிக்க உதவியவையை என வெளிப்படையாக பட்டியல் இட்டுருக்கிறியள்.. இதெல்லாம் தெரிந்திருந்தும் ஏன் அப்போ அழிவைத் தடுக்க எதுவும் செய்யாமல் யாரில் சொல்லைக் கேட்டு, அல்லது யாருக்கெல்hலம் பயந்து இந்தியாவிலை தொலைபேசியையும் எடுக்காமல், எவ்வித கருத்துக்களையும் வெளிப்படுத்தாது ஒளிந்திருந்தீர்கள்?

அது சரி ஜயா.. தீர்வு மூன்று வருடங்களுக்கு முன்னரே கிடைத்துவிடும் என நீங்களே முரசரைந்தது இன்றும் நினைவில் இருக்கிறது... பின்னர் அதற்கான கால நீடிப்புக்களையும் நீங்களே பல தடவைகள் செய்தீர்கள்.. தற்போது தீர்வே சாத்தியமில்லை என்கிறீர்கள்... அப்போ இந்த ஞானோதயம் எப்போது ஏற்ப்பட்டது? உண்மையாகவே இனிமேல் தீர்வு வரும் கதையைச் சொல்லவே மாட்டீர்களா?

சர்வதேசம் எங்கள் பின்னால் இருக்கிறது! அவர்கள் வழிகாட்டலில் தான் நாம் இருக்கிறோம்... ஒன்றும் யோசியாதைங்கோ... இவர்கள் தரவில்லை என்றால் அவர்கள் களம் காண்பார்கள் என்று எல்லாம் நீங்கள் தந்த நம்பிக்கையில் இருக்கிறோம்... இப்ப என்னவெண்டால் சர்வதேசமே.. வெறும் பார்வையாளர்களா? என்று பலம்புகின்றீர்கள்.. இன்னும் விளங்கச் சொன்னால் அமெரிக்காவே... இந்தியாவே... நீங்கள் வெறும் பார்வையாளர்களா? என்கிறீர்கள்... ஜயா வயிறு கலக்குது... அப்ப இதுவரை நீங்கள் நம்பிக்கை தந்த அந்த சர்வதேசம் யார் ஜயா?

இப்பவும் ஏதோ கச்சையுடன் பிச்சை எடுக்கும் நிலை தான் எண்டால்... கையிலை அச்சர பாத்திரமும் கிடையாது அது மட்டுமா? இடுப்பிலை கச்சையும் வேறு கிடையாது என்கிறீர்கள் ஜயா... ஜயா ஈழத்தமிழர் அரசியலை யார் யாருக்கோ முதலில் அடைமானம் வைத்து பின்னர் விற்றே பல நாளாயிற்று என்பதை முதற் தடவையாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்... மீண்டும் இதை மாற்றிப் பேசும் வரை வாழ்த்துக்கள்... இதைத் தான் பலமுறை இன நலன் சார்ந்து எழுதினால் கம்பு சுத்திய சில உறவுகளே... முடிந்தால் நீங்கள் ஆவது தனிநபர் நலனைப் புறம் தள்ளி இன நலனை மட்டும் முன்னிறுத்திப் பதில் தாருங்கள்...

- நேரு குணரத்னம் -