img/728x90.jpg
ஆட்டுக் கிடா அரசியலும் இன அழிப்பும்..!

ஆட்டுக் கிடா அரசியலும் இன அழிப்பும்..!

'இன அழிப்பு பின் புலத்தில் சம்பந்தப்பட்ட இனக் குழுமத்தின் ஐதீகங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் கூட இன அழிப்புக்கு எதிரான பெறுமானத்தை தக்க வைத்துக் கொள்ளும். இதனூடாக இன அழிப்புக்கு எதிரான அரசியல், பண்பாடு, பொருண்மியம் மற்றும் உளவியல் காரணிகளின் கூட்டுப் பெறுமானத்தை அந்த இனக் குழுமம் தக்க வைத்துக் கொள்ள முடியும்'

#நந்திக்கடல்கோட்பாடுகள்.

தனி மனிதன் ஒரு தவறு இழைத்துவிட்டு அதை சரி என்று நியாயப்படுத்துவதனூடாக அவன்தான் பாதிக்கப்படப் போகிறான்.

ஆனால் பொது வாழ்வில் உள்ள ஒருவர் - அதுவும் அந்த இனக்குழுமம் சார்ந்த விடயத்தில் தவறை இழைத்துவிட்டு அதை நியாயப்படுத்துவதனூடாக அவர் தான் சார்ந்துள்ள இனக் குழுமத்தின் இருப்பையே கேள்விக்குட்படுத்துவதாகவே அது அமையும்.

வேள்விக்கு தடை கொண்டு வந்தவர்கள், வாதாடியவர்கள் அது இனத்தின் இருப்புக்கு ஏதோ வகையில் வேட்டு வைக்கிறது என்பதை மிகத் தாமதமாக புரிந்துள்ளார்கள்.

அவர்களது பதட்டத்தில் புரிகிறது. ஆனால் வறட்டுத்தனமாக அதை நியாயப்படுத்தப் புகுந்துள்ளார்கள்.

இது ஆபத்து. வரலாற்றில் தம்மை நிரந்தரக் குற்றவாளியாக்கும் முயற்சி மட்டுமல்ல இன அழிப்புக்குத் துணையும் போகிறார்கள்.

மொக்குவளமாக வைக்கப்படும் இந்த வாதங்கள் இனி இனத்தின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள், சமய நம்பிக்கைகள், மரபுகள், பண்பாட்டு கூறுகள், பாரம்பரிய விளையாட்டுக்கள் ( உதாரணம் : ஜல்லிக்கட்டு /மிருக வதை) என்று ஒவ்வொன்றிலும் ஊடுருவும்.

அவை காட்டு மிராண்டித்தனம், நாகரிக உலகில் பிற்போக்குத்தனம் என்ற அடிப்படையில் படிப்படியாக அழித்தொழிக்கப்படும் - அதுவும் எம்மவரைக் கொண்டே..

உயிரழிவை விட இன அழிப்பிற்காக பயங்கரவாத அரசுகள் கையிலெடுக்கும் மிக பழமை வாய்ந்த உத்தி இது.

இதுகூடப் புரியாமல் இவ்வளவு காலமும் போராடியிருக்கிறோமே என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

நமது தோல்விக்கான காரணம் இப்போதுதான் மிகத் தெளிவாகப் புரிகிறது.

வேள்வித் தடை என்பது இன அழிப்பு உத்திகளில் ஒன்று என்பதை இன்றல்ல கடந்த 8 வருடங்களாக ஆய்வு செய்தவன் என்ற அடிப்படையில் சில விடயங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

சமூக வலைத்தளங்களில் ஆழமாக பதிவு செய்வதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது.

எனவே வேள்வி தொடர்பான சில அடிப்படை தகவல்களை மட்டும் பதிவு செய்கிறேன்.

முடிவை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

0000000000000000000000000000

01. முதல் இலக்கு.

சிலாபம் முன்னேஸ்வர ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில்தான் முதல் இலக்கு..
அங்குதான் முதலில் வேள்விக்கு எதிராகத் தடை கொண்டுவர முயன்றார்கள்.
இந்த வழக்கைத் தொடுத்தவர்கள், அவர்கள் அதற்கு கூறிய காரணங்கள், மீறி நடத்தியவர்கள் மீது மேர்வின் செல்வா மற்றும் கெல உறுமயினர் நடத்திய தாக்குதல்கள், கோத்தபாய ராஜபக்ச இதன் பின் நின்ற பின்னணி எல்லாம் இப்பவும் கூகுளில் தேடினால் கொட்டுப்படும்.

முழுக்க முழுக்க சிங்கள இன வாதத்தின் - இன அழிப்பு பின்னணியில் நின்றவர்களின் கூட்டு முயற்சி அது.

ஜாதிக்க ஹெல உறுமயவைச் சேர்ந்த அத்துரலியே ரத்தன தேரர் தலைமையில் எம்பிலியபிட்டியவைச் சேர்ந்த பௌத்த பதனம என்ற அமைப்பு உட்பட 14 பெளத்த அமைப்புகள் இந்த மனுவை தாக்கல் செய்தன.

இதற்கு பின்னணியில் தேசிய சங்க சம்மேளனத்தின் பாஹியன்கல ஆனந்த சாகர தேர நின்றார்.

கூடவே வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவி ஆயிராங்கனி சில்வா இதற்கு முண்டு கொடுத்தார்.

கோத்தபாயவின் பணிப்பில் மேர்வின் சில்வா நேரடியாகவே இதில் தலையிட்டார்.

இப்போது நமது கேள்வி ஒன்றுதான். முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான உயிர்களை பலியெடுத்தவர்கள் - அதற்கு முண்டு கொடுத்தவர்களின் 'ஆட்டுக்கிடா' உயிர்க் கரிசனைதான் என்ன?

இந்த இன அழிப்பு அரசியலை விளங்காமல் தற்போது தடையை போராடி சிங்களத்திற்கு வாங்கிக் கொடுத்து விட்டு மார் தட்டும் தமிழனின் அரசியல்தான் என்ன?

0000000000000000000000000000

02. இன அழிப்பு பின்புலம்.

தென் தமிழீழத்தில்
சம்மாந் துறை காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில், கல்முனை கரவாகு காளிகோயில் மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில் ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன.

இவற்றில் சிலவற்றில் தமிழர்களின் தொன்ம வழிபாட்டு முறையான வேள்வி நடைமுறையில் இருந்ததாக அறிய முடிகிறது.

இயல்பாகவே தமது தொன்மத்தையும் மரபையும் பேணும் இந்த வழிபாட்டு முறைகளை தமிழர்கள் கைவிட நேர்ந்தபோது இலகுவாக அவை அழித்தொழிக்கப்பட்டு இன அடையாளமே மாற்றப்பட்டுள்ளது.

வழிபாடுகளின் அழிவு கோயில்களின் அழிவாக மாறி இறுதியில் கிராமங்களின் அழிவாக மாறியுள்ளன.

விளைவாக
பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன. தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன.

50 வருடங்கள் கழித்து ஒரு வேளை கவுணாவத்தை வைரவர் கோவில் ஒரு பள்ளிவாசலாகவோ, விகாரையாகவோ மாறி சூழவுள்ள கிராமங்களே உரு மாறலாம்.

ஒரு இனக் குழுமத்தின் பாரம்பரிய, பண்பாட்டு, தொன்ம அடையாளங்களின் இழப்பு அந்த இனத்தை வரலாற்றிலிருந்தே துடைத்தழித்து விடும்.

தென் தமிழீழ தமிழ் கிராமங்களின் இன்றைய நிலை அதற்கு சரியான எடுத்துக்காட்டு.

இனிச் சொல்லுங்கள்.. வேள்வி மீதான தடை, அதுவும் இந்த இன அழிப்பு சூழலில் சரியானதுதானா?
( கோயில் தரவுகள் : நன்றி / அந்துவான்)

0000000000000000000000000000

03. நோக்கம்.

தமிழர் தாயகம் எங்கும் தமிழர்களின் கலை பண்பாடு கலாச்சார அடையாளங்கள் சிதைக்கப்பட்டு பவுத்த மேலாதிக்கமும் பவுத்த மதமும் தீவிரமாக விதைக்கப்பட்டு வரும் சூழலை நாம் அறிவோம். இன அழிப்பிற்கு பிறகான இனச்சுத்திகரிப்பு இது.

அதன் ஒரு பகுதியாகவே தமிழர்களின் குல தெய்வ வழிபாட்டு முறையை சிதைக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் 2009 இலிருந்து படிப்படியாக செயற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாகவே தொடர்ச்சியாக இந்த வேள்வியை தடை செய்ய முயன்று இன்று வென்றிருக்கிறது இன அழிப்பு அரசு. இதற்கு நம்மவர்களும் உடந்தை என்பது வேதனை.

இந்த சிறு தெய்வ வழிபாட்டை தடை செய்ய முற்படுவது இனச்சுத்திகரிப்பின் நுண்வடிவங்களில் ஒன்று. அதாவது இந்த சிறு தெய்வ வழிபாட்டு முறை தமிழர்களின் தொன்மம் மரபுகளை தொடர்ந்து பேணுவதும் அதை மீட்டெடுக்கும் அலகாகவும் தமிழ் அடையாளங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. எனவே அதை சிதைக்க வேண்டிய கட்டாயம் இனப்படுகொலை அரசுக்கு இருக்கிறது.

பெரிய கோயில்கள் ஏற்கனவே சிங்களத்தை நக்கிப்பிழைக்கும் டக்ளஸ் கருணா போன்றவர்களை கொண்டு கையகப்படுத்தப்பட்டிருப்பது மட்டுமல்ல அவை எல்லா மதத்தினரும் கலந்து கொள்ளும் ஒரு கேளிக்கை பிரதேசங்களாகவும் மாறி தமிழ் தனித்துவம் அழிக்கப்பட்டிருக்கிறது.

எனவே தமிழ் தொன்மத்தை தொடர்ந்து பேணும் அதை மீட்டெடுக்கும் இந்த சிறுதெய்வ வழிபாட்டு முறை சிங்களத்தால் குறிவைக்கப்ட்டிருக்கிறது.

இனச்சுத்திகரிப்பின் நுண்வடிவம் இது.

0000000000000000000000000000

04. புலிகளும் வேள்வியும்.

'புலிகள் வேள்வியை தடை செய்திருந்தார்கள்' என்பது, இன அழிப்பு அரசின் நீதிமன்ற வேள்வித் தடையை ஆதரிப்பவர்கள் முன் வைக்கும் வாதங்களில் ஒன்றாக இருக்கிறது.

இது பகுதியளவே உண்மை.
சட்ட ரீதியாக தடை செய்யப்படவில்லை. 
தமிழீழத்தில் 2009 வரை பல இடங்களில் வேள்வி நடந்ததற்கான வரலாற்று பதிவுகள் உள்ளன.

இது முழுமையான உண்மை என்றே வைத்துக் கொண்டே நாம் 'வேள்வி தேவையா?' என்று பார்ப்போம்.

புலிகள், இன அழிப்பிலிருந்து மண்ணை மீட்டு நடைமுறை அரசு ஒன்றை உருவாக்கியிருந்தார்கள்.
அது தமிழர்களுக்கான அரசு - தமிழ் அரசு.
விளைவாக, உயிர் அழிவைத் தவிர அனைத்து வழியிலும் இன அழிப்பு மட்டுப்படுத்தப் பட்டிருந்தது.

ஆனால் 2009 இற்குப் பிறகு நிலைமை தலைகீழ்.

பாரிய இனப் படுகொலையை சந்தித்து தொடர்ந்து இன அழிப்புக்கு முகம் கொடுத்து படிப்படியாக அழிந்து கொண்டிருக்கிறோம்.

குறிப்பாக எமது வரலாறு, பண்பாடு, தொன்மம், மரபு மீது ஒரு பாரிய யுத்தத்தை இன அழிப்பு அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.

ஏனென்றால் உயிர்களை கொல்வதனூடாக ஒரு இனத்தை என்றுமே முற்றாக அழிக்க முடியாது.

ஆனால் ஒரு இனத்தின் மேற்படி கூறுகளை சிதைப்பதனூடாக ஒரு இனத்தை மிகச் சுலபமாக அழித்தொழிக்க முடியும்.
இது இன அழிப்பு தியரி.

இப்படி ஒவ்வொரு விடயமாக விட்டுக் கொடுக்க தொடங்கினால் நாம் அழிவது உறுதி.

சிந்திப்போம்.

நாமாக ஒரு விடயத்தை கைவிடுவது என்பது வேறு, இன அழிப்பு அரசின் நீதிக்குள் உள் மடிந்து போவதென்பது வேறு.

தற்போது புலிகள் இருந்திருந்தால் இன அழிப்பு அரசின் தடையையும் மீறி கவுணாவத்தை கோயிலுக்குள் இரவோடு இரவாகப் புகுந்து ' வேள்வியை' நடத்தி
விட்டுப் போயிருப்பார்கள்.

இது மூட நம்பிக்கை அல்ல, வன்முறையும் அல்ல.

இன அழிப்பிற்கு எதிரான எதிர்வினை.

உயிரைக் கொடுப்பதனூடாகவும், உயிரை எடுப்பதனூடாகவும் கட்டியெழுப்பப்பட்ட போராட்டம் இது.

பனானின் மொழியிலே
கூறினால், எமது வன்முறை வெறும் கோபக் குமுறல் அல்ல, வன்மத்தின் விளைவுமல்ல, அது எம்மை நாமே திருப்பி படைப்பது. எந்த ஒரு நளினத்தாலும் மேன்மையாலும் சிங்களத்தின் வன்முறையை அழிக்க முடியாது. எமது வன்முறையால் மட்டுமே அதை அழிக்க முடியும்.

0000000000000000000000000000

05. தேசிய இனங்களின் மரபு/ தொன்மம்/ ஐதீகம்/ வழிபாடு குறித்து நந்திக்கடல் என்ன சொல்கிறது.?

அரச எந்திரத்தின் - அதை தாங்கும் பெரு முதலாளிகளின், நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த ஒன்றுடன் ஒன்று தொடர்புபடாத பல உதிரிகள் சம்பந்தப்பட்ட இனக் குழுமத்திற்குள் உற்பத்தி செய்யப்பட்டிருப்பார்கள்.

அவர்கள் முற்போக்கு முகமூடியுடன் அலைந்து கொண்டிருப்பார்கள்.
சமீபத்திய உதாரணம், ஜல்லிக்கட்டு.
உயிர்வதை, நாகரிக உலகில் காட்டுமிராண்டித்தனம், ஆணாதிக்கம் என்று பல வழிகளில் சமூகத்திற்குள் குறுக்கும் நெடுக்குமாக வாளை வீசினார்கள்.
மாணவர்கள், பெண்கள் உட்பட முழு இனக் குழுமமும் தமது தொன்மத்தின் மீது, மரபின் மீது ஒரு யுத்தம் திணிக்கப்பட்டதை உணர்ந்து கூட்டு உளவியல் திரட்டாக அணியமானபோதே இந்த போலிகள் பின்னடைய நேரிட்டது.

'நந்திக்கடல்' இத்தகைய உதிரிகள் குறித்து சம்பந்தப்பட்ட இனகுழுமத்திடம் மிகுந்த எச்சரிக்கையை கோருகிறது.

தேசிய இனங்களின் பண்பாட்டு கூறுகள், பழக்க வழக்கங்கள், விளையாட்டுக்கள், வழிபாட்டு முறைகளின் பின்னே அந்த இனக் குழு மங்களின் தொன்மமும் மரபும் தொடர்ந்து பேணப்படுவது மட்டுமல்ல இன அழிப்பிற்கு எதிரான தொடர் பொறிமுறைகள் உற்பத்தி செய்யப்பட்டு கொண்டிருக்கும் என்பதையும் 'நந்திக்கடல்' அறிவுறுத்துகிறது.

இன அழிப்புப் பின் புலத்தில், சம்பந்தப்பட்ட இனக் குழுமத்தைச் சேர்ந்த மக்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒன்று கூடுதல், ஒருங்கிணைதல் என்பது மிக முக்கியமானது என்கிறது 'நந்திக்கடல்'.

இதனூடாக இன அழிப்புக்கு எதிரான அரசியல், பண்பாடு, பொருண்மியம் மற்றும் உளவியல் காரணிகளின் கூட்டுப் பெறுமானத்தை அந்த இனக் குழுமம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கிறது 'நந்திக்கடல்'.

இன அழிப்பு பின் புலத்தில் சம்பந்தப்பட்ட இனக் குழுமத்தின் ஐதீகங்கள் கூட இன அழிப்புக்கு எதிரான பெறுமானத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்கிறது 'நந்திக்கடல்'.
கோயில் திருவிழாக்களை முன்னிட்டு ஒன்றிணைந்த எமது மக்கள் குழுமத்தின் திரட்சியை இந்த கூட்டுப் பெறுமானங்களின் பின்னணியில் வரையறுத்துக்கொள்ள முடியும்.
எனவே எமது ஒருங்கிணைவுதான் முக்கியம் - அங்கு பகுத்தறிவையும் மூட நம்பிக்கைகளையும் தேடாதீர்கள்.

அது இன அழிப்பு அரசிற்குத்தான் சாதகமான ஒரு கருத்தியலாக உருத் திரளுமேயொழிய பாதிக்கப்பட்ட இனக் குழுமத்தின் ஒன்றிணைதலுக்கு பாதகமான கருத்தோட்டமாக மாறி தொடர்ச்சியான இன அழிப்புக்குள் அந்த இனக் குழுமத்தை தள்ளும் என்று எச்சரிக்கிறது 'நந்திக்கடல்'.

அத்துடன் தாயகத்திலுள்ள பெரிய ஆலயங்களை எமது தனித்துவ அடையாளங்களுடன் பேணும் அதே சமயம் சிறு தெய்வ வழிபாட்டை அழியாமல் பாதுகாப்பதுதான் இனஅழிப்பிலிருந்து நம்மை நிரந்தரமாகப் பாதுகாக்க உதவும்.

தமிழர் தாயகத்தில் வீதிக்கு வீதி புத்தர் சிலைகளை நிறுவும் சிங்களத்தின் நகர்வு இந்த சிறு தெய்வ வழிபாட்டை முடக்கும் இனச்சுத்திகரிப்பின் நுண்வடிவங்களில் ஒன்று.
அதாவது இந்த சிறு தெய்வ வழிபாட்டு முறை தமிழர்களின் தொன்மம், மரபுகளை தொடர்ந்து பேணுவதும் அதை மீட்டெடுக்கும் அலகாகவும் தமிழ் அடையாளங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

எனவே தமிழ் தொன்மத்தை தொடர்ந்து பேணும் அதை மீட்டெடுக்கும் இந்த சிறுதெய்வ வழிபாட்டு முறையை தொடர்ந்து பேணுவோம்.

இது கடவுள் நம்பிக்கை அல்ல - நமது எதிர்ப்பு அரசியல் இது.
'நந்திக்கடல்' எல்லைகள் தாண்டி - தேசங்கள் தாண்டி இனக் குழுமங்களின் இந்த சிறு தெய்வ வழிபாட்டு முறைகளை ஒரு கோட்பாடாகவே முன்வைக்கிறது.

0000000000000000000000000000

06.எமது எதிர்ப்பு.

2009 ம் இல் நேரடி இன அழிப்பு முடிந்தவுடன் தொடர்ந்து இனத்தை சுத்திகரிக்க இன அழிப்பு அரசு எதிலெதிலெல்லாம் கை வைக்கும் என்று நாம் போட்ட பட்டியலில் வேள்வியும் ஒன்று.

2009 டிசம்பரில் முல்லைத்தீவு மாவட்டம் நாயாறுப் பகுதியில் அமைந்துள்ள நீராவியேற்றப் பிள்ளையார் கோயிலுக்கு தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றச் சென்ற ( கவனிக்கவும், இது வேள்வி அல்ல) தமிழர்களை அங்கு ஆக்கிரமித்திருந்த சிங்களவர்கள் மற்றும் புத்த பிக்குகள் இந்த குல தெய்வ வழிபாட்டின் அடையாள அரசியலை - அதன் தொன்ம மீட்டெடுப்பை முன்னுணர்ந்து படையினர் உதவியுடன் அடித்து விரட்டினார்கள்.

அன்றிலிருந்து நாமும் உக்கிரமாக நமது மரபை, தொன்மத்தை மீட்டெடுக்கும் இந்த குல தெய்வ வழிபாட்டு முறைகளுக்கு ஆதரவாகப் பேசி வருகிறோம்.

ஏதோ திடீரென்று வேள்விக்கு சார்பாக கம்பு சுத்தவில்லை.

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு குறித்த புரிதல் இல்லாமல் நம்மவர்களே இன்று இன அழிப்பு அரசின் வேலையை இலகுவாக்கியிருக்கிறார்கள்.

வேதனையான விடயம்.

0000000000000000000000000000

07.சமூக வலைத்தள வாசிகளின் 
பொறுப்பின்மையும், குற்றமும்..

சமூக வலைத் தளங்களில் வேள்வியை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல ஆதரிப்பவர்கள் பெரும்பாலானோர்கூட இன அழிப்பு பின்புலத்தில் நின்று தமது புரிதலை வளர்த்துக் கொள்ளவில்லை.

அந்தப் புரிதல் இருந்திருந்தால் தற்காலிகமாகவேனும் வேள்வியை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்குள் வந்திருப்பார்கள்.

இதுவே இன அழிப்பு அரசுக்கு வாய்ப்பாக மாறுகிறது.

சமூக வலைத்தளங்களில் கும்பலாக நின்று வாதிடும் விடயம் அல்ல இது. ஒரு இனத்தின் வரலாற்று - பண்பாட்டு உள்ளடக்கம் இது.

சமூக வலைத்தளங்களில் பத்து பேர் சேர்ந்து நின்று வாதாடி, இன அழிப்பு அரசின் நிகழ்ச்சி நிரலான வெள்வித் தடையை நியாயப்படுத்திவிட்டு போகலாம்.

ஆனால் இந்த தடைக்காக இன அழிப்பு அரசின் நீதிமன்றை நாடியவர்களும், அதற்காக வாதாடியவர்களும், அதை தடை செய்து தீர்ப்பு வழங்கியவர்களும் வரலாற்றை பொறுத்தவரை குற்றவாளிகளே - இன அழிப்பு குற்றவாளிகள்.

வரலாறு ஈவிரக்கமில்லாதது. அது யாரையும் மன்னிப்பதில்லை.

அப்போது காலம் கடந்திருக்கும். தமது தவறை உணர்ந்து அவர்கள் வருந்தும் போது இந்த இனம் துடைத்தழிக்கப்பட்டிருக்கும்.

- பரணி கிருஸ்ணரஜனி -