img/728x90.jpg
எதிர்வரும் தேர்தல்களின்போது தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டத் தயாராக வேண்டும்

எதிர்வரும் தேர்தல்களின்போது தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டத் தயாராக வேண்டும்

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் வரும் வரும் என்றார்கள். ஆனால் இப்போது அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்றாயிற்று.

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலேயே நாங்கள் முழுக் கவனத்துடன் இருக்கின்றோம். 

சில்லறை விடயங்களில் தலையிட இப்போது நேரமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் கூறினார்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவரிடம் இருந்து பறித்தபோது எல்லாவற் றையும் இழந்த மனநிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னமும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கவில்லை.

காணாமல்போனவர்களுக்கு நடந்தது என்ன என்பது பற்றி அறியப்படவில்லை. மீள் குடியேற்றம் முழுமை பெறாத அதேநேரம் தமிழ் மக்களின் நிலங்கள் இன்னமும் படைத் தரப்பின் ஆக்கிரமிப்பிலேயே இருந்து வருகிறது.

இவற்றுக்கு எந்தத் தீர்வும் கிடைக்காத நிலையில், இப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் செயற்பாட்டை நியாயப்படுத்தி வருகிறது.

தவிர, அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்து வரும் கூட்டமைப்பால் பெளத்த ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியவில்லை.

ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அவர் களைப் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆக்கியதன் பயன்பாடு தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்ததேயன்றி வேறு எவருக்கு மல்ல என்பதே உண்மை.

தனக்குப் பெரும்பான்மை பலம் இருந்தால் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அமுலாக்க முடியுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இங்கு நாம் கேட்பதெல்லாம் அரசியலமைப் புச் சீர்திருத்தத்தைச் செய்யும்போது அதனை நிறைவேற்றுவதற்குத் தன்னிடம் பெரும்பான்மை இருப்பதாகப் பிரதமர் ரணில் விக் கிரமசிங்க நினைத்திருந்தாரா? என்பதுதான்.

அரசியலமைப்புச் சீர்திருத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அது அமுலுக்கு வந்துவிட்டால் இனப்பிரச்சினைக்கான தீர்வு இயல்பாகவே கிடைத்துவிடும் என்று ஐ.நா சபை உட்பட உலக நாடுகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மேலாக அரசியலமைப்புச் சீர்திருத்தப் பணிகளில் எத்தனையோ பேர் ஈடுபட்டிருந்தனர். மக்கள் சந்திப்புக்கள், கருத்துக் கணிப்புகள் என்பனவும் நாடளாவிய  ரீதியில் நடைபெற்றது.

இவ்வாறு புதிய அரசியலமைப்பு என்ற விடயத்தை முதன்மைப்படுத்தி அதனை அமு லாக்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திய  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இப்போது பெரும்பான்மைப் பலம் தன்னிடம் இல்லை என்று கூறிக்கையை விரித்துள்ளது.

இவ்விடத்தில் புதிய அரசியலமைப்பு என்ற விடயம் பற்றி எதுவும் நடந்தது போல காட்டிக் கொள்ளாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மெளனமாக உள்ளது.

ஆக, தமிழ் மக்களின் தலைகளில் மண்ணைக் கொட்டியதைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை.

எனவே எதிர்வரும் தேர்தல்களின்போது தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டத் தயாராக வேண்டும்.

இதைவிடுத்து தேர்தலில் ஏதோ வாக்களித்து விட்டால் சரி என்று தமிழ் மக்கள் அச மந்தமாக இருப்பார்களாயின் இதுகாறும் தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்கள், இழப்புகள் அத்தனையும் அர்த்தமற்றதாகுவதுடன் எங்கள் இளைஞர்கள் செய்த தியாகங்களும் வீணாகி விடும் என்பதை உணர்ந்து தேர்தலில் பாடம் புகட்ட நாம் ஒவ்வொருவரும் தயாராக வேண்டும்.