img/728x90.jpg
போதைப்பொருள் கடத்தலில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டதாக கூறுவது விசமத்தனமான கதை

போதைப்பொருள் கடத்தலில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டதாக கூறுவது விசமத்தனமான கதை

தமிழீழ விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கு தாயகத்தில் எழுவது வீதமான நிலப்பரப்பை தமது ஆழுமையில் வைத்து நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தி இருந்தனர். எந்த ஒரு இடத்திலும் போதைப்பொருள் பாவனை நிலையங்களோ மதுபான சாலைகளோ இருந்ததில்லை மிகவும் ஒழுக்கமுடன் கட்டமைப்பை அவர்கள் வைத்திருந்தனர்.

அவ்வாறானவர்களின் வரலாறு தெரியாமல் ஜனாதிபதி அவர்கள் போதைப்பொருள் கடத்தலில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டதாக கூறுவது விசமத்தனமான கதை என முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வன்னி நிலப்பரப்பு போலவே மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பெருநிலம் வாகரை பகுதிகள் 2007,ம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களாக இருந்தது அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த எந்த இடத்திலும் எந்த ஒரு மதுபானச்சாலைகளோ சட்டவிரோத கசிப்பு காச்சும் இடங்களோ கஞ்சா சேனைகளோ இருக்கவில்லை.

விடுதலைப்புலிகளின் போராளிகள் எவரும் புகைத்தலைகூட தொட்டுப்பார்கவில்லை வெற்றிலை பாக்கு புசிப்பதுகூட இல்லை அப்படியான நேர்தியான ஒழுக்கத்தை கடைப்பிடித்த வரலாறு அவர்களுக்கு மட்டுமே உண்டு. வரலாறுகள் தெரியாமல் தமக்கு பிடிக்கவில்லை என்பதால் செய்யாத ஒரு செயலை அவர்கள் மீது கூறி பொய்யான பிரசாரங்கள் மேற்கொள்வது ஒரு நாட்டின் தலைவருக்கு அழகல்ல.

விடுதலைப்புலிகளுக்கு நிதி உதவிகள் புலம்பெயர் உறவுகளே கூடுதலாக வழங்கியதும் பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய பொருண்மிய அமைப்பை கட்டி வடக்கு கிழக்கு பகுதிகளில் பல கால்நடைப்பண்ணைகள்,விவசாயபண்ணைகள், வர்த்கநிலையங்கள், தொழில்சாலைகள், என பலதரப்பட்ட கட்டமைப்புக்களால் அவர்களுக்கு வருமானம் கிடைத்தது அதைவிட கணிசமான நிதிகளை வடக்கு கிழக்கில் உள்ள பல தமிழ்மக்கள் வழங்கியதும் உண்டு அரச ஊழியர்களும் மாத வேதனத்தில் ஒரு பகுதியை வழங்கிய வரலாறு உண்டு இது இலங்கையை ஆட்சி செய்த அனைத்து அரச தலைவருக்கும் ஏன் இலங்கை புலனாய்வு பிரிவுக்கும் நன்கு அப்போது தெரிந்த விடயம்தான் அப்படி இருக்கும்போது தற்போது திடீரென ஜனாதிபதி அவர்கள் போதை பொருள் கதையை கூறி இருப்பது ஏற்க முடியாது.

கடந்த 2019,ஏப்ரல்,21 இஷ்லாமிய பயங்கரவாதிகள் இலங்கையில் கொழும்பு மட்டக்களப்பு போன்ற இடங்களில் நடத்திய மிலேச்சத்தனமான தற்கொலை தாக்குதலுக்கு பின்னர் பல சிங்கள அரசியல் தலைவர்களும்,முஷ்லிம் அரசியல் தலைவர்களும் விடுதலைப்புலிகளின் போராட்டம் நடத்தை சம்மந்தமாக மிகவும் புகழாரம் சூட்டி பாராளுமன்றத்திலும் பொது இடங்களிலும் பேசியதை எல்லோருக்கும் தெரியும் எவருமே விடுதலைப்புலிகளை இஷ்லாமிய பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு பேசவில்லை அவர்களின் போராட்டம் இலட்சியம் இலக்கு கொள்கை எல்லாம் வேறு விதமாகவே இருந்தது என்றே கருத்துரைத்தனர் அதுதான் உண்மையும்கூட ஜனாதிபதி அவர்களும் இதனை ஏற்றுக்கொண்டவராகவே இருந்தவர் ஆனால் போதை பொருள் பாவனை கதையை மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் விதமாக கூறிஇருப்பது உண்மைக்கு புறம்பான கருத்தாகும்.

முள்ளிவாய்கால் மௌனம் கடந்த 2009,மே,18,ம் திகதி ஏற்பட்டு தற்போது பத்து வருடங்களில் இலங்கைக்கு பல வெளிநாடுகள் ஊடாக கடத்தப்பட்ட போதைப்பொருள்கள் ஹேறோயின்,கஞ்சா என்பன பல்லாயிரம் கிலோ கிறாம் என அறிநமுடிகிறது தினமும் வரும் செய்திகள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் போதை பொருட்களை எடுத்து வந்த பலர் கைதுசெய்யப்பட்ட செய்திகளே ஒவ்வொரு நாளும் வருகிறது விடுதலைப்புலிகள் காலத்தில் கொழும்பில் கூட போதை பொருட்களுடன் விமான நிலையத்தில் எவரும் கைது செய்ததாக பரவலாக செய்திகள் வரவில்லை இதிலிருந்து எதை அறியக்கூடியதாக உள்ளது விடுதலைப்புலிகள் காலத்தில் வடக்கு கிழக்கு மட்டுமல்ல இலங்கைமுழுவதும் பொதைபொருட்கள் கடத்தல் இடம்பெறவில்லை என்பதை எனுத்துக்காட்டுவதை ஜனாதிபதி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் பா.அரியநேத்திரன் மேலும் கூறினார்.