img/728x90.jpg
புங்கன்குழி கிராமத்தில் பரவிய தீயை அணைக்காமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பிற்குச் சென்ற யாழ் மாநகர தீயணைப்பு பிரிவு!

புங்கன்குழி கிராமத்தில் பரவிய தீயை அணைக்காமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பிற்குச் சென்ற யாழ் மாநகர தீயணைப்பு பிரிவு!

அராலி புங்கன்குழி கிராமத்தில் பரவிய தீயை அணைக்காமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பிற்குச் சென்ற யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் செயல் தொடர்பாக அராலி மக்கள் வேதனை அடைந்துள்ளனர். 

இன்று அராலி புங்கன்குழி கிராமத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கிராமவாசி ஒருவர் குப்பையை எரிக்கும் போதே குறித்த அனர்த்தம் ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டவுடன் விரைந்து செயற்பட்ட மக்கள் கிராம சேவகருக்கு தகவல் வழங்கினர். கிராம சேவகர் உடனடியாக குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு தீயணைப்பு பிரிவிற்கு அறிவித்தல் வழங்கினார்.

ஆனால் மயிலிட்டியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்ட நிகழ்விற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால் தங்களால் வர முடியாது என யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு பதிலளித்தது. 

இந்த தீ விபத்து தொடர்பாக இலங்கை மின்சாரசபைக்கும் அறிவிக்கப்பட்டது. அவர்களும் குறித்த இடத்திற்கு வரவில்லை. 

இறுதியாக வலி.மேற்கு பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தினால் 10 பனைகள், 20 வடலிகள், 2 வேலிகள் எரிந்து நாசமாகின. 

யாழ். மாவட்டத்திற்கு என இருக்கின்ற ஒரே ஒரு தீயணைப்பு பிரிவும் யாழ்ப்பாணம் வருகின்ற அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்குச் சென்றால் இங்குள்ள மக்களின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு ஏற்பது என அராலி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

வலி.மேற்கு பிரதேச சபையிடம் தீயணைப்பு பிரிவு இல்லை. எனினும், அவர்கள் தங்களால் இயன்றவரை பணியாற்றி தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இல்லையேல் தீ வேகமாக பரவி பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கும் என அப்பகுதி பிரதேச சபை உறுப்பினர் இலங்கேஸ் தெரிவித்தார்.