img/728x90.jpg
திருகோணமலை மூதூர் கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் மோசமாக ஆக்கிரமிக்கப்பட்டு அக்கிராமங்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளன!

திருகோணமலை மூதூர் கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் மோசமாக ஆக்கிரமிக்கப்பட்டு அக்கிராமங்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளன!

திருகோணமலையின் பல பிரதேசங்களில் யுத்தத்தின் பின்னர் தோன்றியுள்ள புதிய பிரச்சனை- காணிப்பிணக்கு. குறிப்பாக மூதூர், சேருவில பகுதிகளில் தோன்றியுள்ள இந்த சர்ச்சை இனநல்லுறவையே பாதிக்கும் விவகாரமாகலாமென்ற அச்சமும் எழத் தொடங்கியுள்ளது.

அண்மித்த பகுதிகளில் நடக்கும் காணிப்பிணக்குகளின் அடிமுடியை தேடிச் சென்றால், நமக்கு கிடைத்தது பேரதிர்ச்சி கதைகளே. அந்தப்பகுதியில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லீம்களால் தமது காணிகள் பறிக்கப்படுகிறது என்பது பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டு. அரச அதிகாரத்தின் துணையுடன் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த நில அபகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது மூதூரில் உள்ள பழங்குடிகள்தான். தம்மை தமிழ் அரசியல்தலைமைகள் யாருமே கண்டுகொள்வதில்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறார்கள். தமது அடையாளத்தை பேணவே போராடிக்கொண்டிருக்கும் இவர்களிடமிருந்து நிலமும் பிடுங்கப்பட்டால்…

‘மூதூர் கிழக்கில் உள்ள பூர்வீக தமிழ்குடிகள் நாங்கள். மூதூர் தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் அலி அபுபக்கர் ஏற்படுத்தி தந்த விவசாய திட்டமிது. விவசாய திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குளத்தையும், எமது விளை நிலங்களையும் பெருமகன் அலி அபுபக்கரின் வாரிசுகள் அபகரித்துவிட்டனர்’ என கண்ணீர் சிந்துகிறார் ஒரு பெரியவர்.

1935 இல் உல்லைக்குளத்தை மையமாக வைத்து ஆரப்பந்தசேனை, ஆத்தியடிப்பள்ளம், சாலம்பக்கேணி, பொக்குலான்குளம் போன்ற பகுதிகளில் விவசாயக்காணிகள் ஆதிவாசிகளிற்கு வழங்கப்பட்டது. 2- 5 ஏக்கர் காணி வீதம் 105 பேருக்கு வழங்கப்பட்டது. அந்தக்காணிகளை யாரும் விற்கவோ, வாங்கவோ முடியாது. அயல்கிராமங்களில் உள்ள முஸ்லீம்கள் விவசாய நிலங்களிற்குள் அத்துமீறி நுழையக்கூடாதென்பதற்காக எல்லையாக வீதியொன்றை உருவாக்கி அடையாளமிடப்பட்டிருந்தது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அபுபக்கரின் ஒத்துழைப்புடன் இந்த விவசாய திட்டம் உருவானது. வேட்டையாடிய ஆதிவாசிகளை விவசாயத்தின் பக்கம் அவர்தான் திருப்பினார். உல்லைக்குளத்தை அமைத்து, அதனை மையமாக கொண்டு விவசாய குடியிருப்பை ஆரம்பித்தார்.

1935ம் ஆண்டு இந்த விவசாய திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு விவசாயம் செய்ய ஆதிவாசிகளிற்கு காணி வழங்கப்பட்டு, அவற்றை யாரும் விற்கவோ, வாங்கவோ முடியாதென நிபந்தனையுள்ளது. விவசாய பிரதேசத்திற்குள் யாரும் உள்நுழையக்கூடாதென எல்லையும் குறிக்கப்பட்டது.

ஆதிவாசிகள் தங்கள் தலைவரை பட்டாங்கட்டி என்றுதான் அழைப்பார்கள். அவரே கிராமத்தின் வட்டவிதானையாகவும் இருப்பார். அவர்களின் முதலாவது பட்டங்காட்டியாகவும், வட்ட விதானையாகவும் இருந்தவர் பத்தன் கோணமலை. பின்னர் தம்பியையா, இராசையா என பட்டியல் தொடர்ந்தது.

யுத்த நெருக்கடியில் சிக்கி உல்லைக்குளம் உடைந்ததால் பல வருடங்கள் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு விட்டது. இதன்பின்னர் எல்லாம் கைமீறி சென்றுவிட்டது.

காணி நிபந்தனையை மீறி விவசாய காணிகளை மெதுமெதுவாக அயல்கிராம முஸ்லீம்கள் அபகரிக்க தொடங்கி இப்பொழுது முற்றுமுழுதாக அவர்களின் பிடிக்கு சென்றுவிட்டது. 105 பேருக்கு வழங்கப்பட்ட காணியில் ஒருவர்கூட தற்போது விவசாயம் செய்யவில்லை. ஒருகாலத்தில் தமிழர்களின் விவசாய நிலம் என்ற வரலாறு மட்டும்தான் மிஞ்சியுள்ளது. 1935 இலிருந்து ஆதிவாசி சமூகம் கடைப்பிடித்த வட்டவிதானை நடைமுறையையும் 2010இல் முஸ்லீம்கள் மாற்றிவிட்டனர்.


நடராசா கனகரெட்ணம்
மூதூர் கிழக்கு பழங்குடியினர் சங்கத் தலைவர்

வர்த்தக நடவடிக்கையின் போது முஸ்லீம் வியாபாரிகளிடம் எமது மக்கள் பெற்ற கடனிற்கு ஈடாக காணியில் 2 அல்லது 3 போகம் விவசாயத்தை செய்துவிட்டு தாருங்கள் என கொடுக்கப்பட்ட காணிகளை ஏமாற்றி சொந்தம் கொண்டாடி வருகின்றனர். 1935ம் ஆண்டு வழங்கப்பட்ட உறுதியின்படி இதனை வேறு ஒருவருக்கு கைமாற்ற முடியாது. எனினும் அவர்களிடம் தற்போதுள்ள அரசியல் பலமுள்ளது. செல்லும் இடமெல்லாம் முஸ்லீம் அதிகாரிகளே உள்ளனர். இதனால் சுலபமாக ஆவணங்களை மாற்றுகிறார்கள். எங்கள் மக்களிடம் பெற்ற 100, 200 ரூபாய் கடனுக்காக பல இலட்சம் பெறுமதியான காணி முஸ்லீம்களால் சட்ட விரோதமான அபகரிக்கப்பட்டுள்ளது. இக்காணிகளுக்கு நீர்பாய்ச்சும் ஒழுங்கு, பசளை வழங்குதல் போன்றவற்றை பத்தினி அம்மன் விவசாய சம்மேளனமான எம்மிடம் இருந்த உரிமையையும் யாரிடமும் அனுமதி பெறாமல் மாற்றியுள்ளனர். பக்கத்திலுள்ள கிராமசேவகர் பிரிவான இக்பால்நகர் கிராம விவசாய உத்தியோகத்தர் தன்மூப்பில் கையெழுத்து வைத்து அதற்கான பசளை மற்றும் ஏனைய மானிய சலுகைகளை தாராளமாக பெறுகிறார்கள்.

தற்போது மூதூர் கிழக்கு பழங்குடியினர்கள் வாழும் 10 கிராமங்களின் சங்கத் தலைவராக நடராசா கனகரெட்ணம் உள்ளார். அவரிடம் பேசியபோது, தமது கண்ணெதிரே காணிகளை முஸ்லீம்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பிடித்துவிட்டார்கள் என கண்கலங்கினார்.

தேர்தல் சமயத்தில் மட்டும் இந்தப்பக்கம் அரசியல்வாதிகளின் தலைகளை காண முடிவதாகவும், அதன் பின்னர் யாரும் தம்மை எட்டியும் பார்ப்பதில்லை என்கிறார் நிலங்களை பறிகொடுத்த கிராம மக்களின் தலைவர்.

உல்லைக்குளத்தை நம்பி வாழ்ந்த ஆதிக்குடிகள் தமது விவசாய நிலங்களை முற்றாக இழந்தது திருகோணமலை நில அபகரிப்பின் ஒரு சான்று மட்டுமே. மூதூருக்கு அருகிலுள்ள சேருவிலவிலும் இதுதான் நடக்கிறது. அங்குள்ள பூர்வகுடிகள் தமது நிலத்தை தக்கவைக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த பிரதேசத்தில் உள்ள உப்பூரல் கிராமத்தில் அத்துமீறிய காணிபிடிப்பு விவகாரத்தில் தமிழ்- முஸ்லீம் மக்களிற்கிடையில் ஓரிரு வருடங்களின் முன் பெரும் மோதலொன்றே நடந்தது. அதனை தொடர்ந்து அருணாச்சலம் சுவேந்திரகுமார் என்ற கிராமசேவகரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த மோதலில் தொடர்புபட்டார்கள் என 12 தமிழர்கள் கைதாகினர். இவர்களில் ஒருவரே கிராமசேவகர்.

மூதூர் கிழக்கிலுள்ள பல கிராமங்களிற்குள் அத்துமீறி காணிபிடிப்பதை தோப்பூர் முஸ்லீம்கள் மேற்கொள்வதாக அந்த பகுதிகளிலுள்ள சமூகஅமைப்புக்கள் குற்றம்சாட்டி வருகின்றன. அண்மையில் நடந்ததும் அப்படியான சம்பவம் என்கிறார்கள் கிராமத்தவர்கள்.

மூன்று வருடங்களின் முன் உப்பூரல் பாடசாலைக்கென ஒதுக்கப்பட்ட அரச காணியையும் தோப்பூரை சேர்ந்த முஸ்லீம்கள் சிலர் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. காணியை சுருட்டி, அதில் அத்திவாரம் இட முற்பட்டுள்ளனர். இதனால் எழுந்த சர்ச்சையில் கணவன், மனைவி இருவரும் அடித்து காயப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். காணி பிடிக்க வந்தவர்களில் நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவங்களில் உப்பூரல் கிராம மக்களுடன் துணை நின்றார், இரண்டு சமூகங்களுக்கான பிரச்சினையை ஏற்படுத்த தூண்டுகோலாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் கிராம சேவகர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மொத்தத்தில் திருகோணமலையின் பூர்வகுடிகளின் இருப்பிடங்களை குறிவைத்து பெரும்போர் தொடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. நமது அரசியல் தலைமைகள் விழித்துக் கொண்டால்த்தான் நமது பாரம்பரிய நிலங்களை காப்பாற்றிக் கொள்ளலாம்.

மூதூர் கிழக்கில் தமிழ்-முஸ்லீம் மக்களிடையே யுத்தகாலத்தில் பெரும் பகை இருந்தது உண்மைதான். இலங்கையில் சிறுபான்மையினங்கள் ஒன்றுபட்டு செயற்பட்டால்த்தான் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யலாமென்பதை காலம் உணர்த்திய பின்னரும் தமிழ்- முஸ்லீம் மோதல் நீடிப்பது துயரம்தான்.

ஒரு அறிமுகம்

காணி அபகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்கள் இலங்கையின் ஆதிக்குடிகள். தமக்கென தனியான மொழி, கலாசார அடையாளங்களை  பேணிப்பாதுகாத்தவர்கள், தமிழை பேச்சு மொழியாக பயன்படுத்துகிறார்கள். மட்டக்களப்பின் கருவேப்பங்கேணி, மாங்கேணி, காயாங்கேணி, பனிச்சங்கேணி ஆகிய ஒவ்வொறு இடமாக நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்த இந்த ஆதிக்குடிகளின் மூதாதையர்கள், மூதூருக்கு வந்து தோப்பூருக்கும் சேருவிலவுக்கும் இடையே ஒமனகிரி எனும் இடத்தில் முதலாவதாக குடியிருப்புக்கள் அமைத்து வாழ்ந்துள்ளனர். இந்த காலத்தில் அரிசிப் பாவனை இவர்களிடம் இருக்கவில்லை. மிக அரிதாகவே பயன்படுத்தினார்கள். அல்லைக்கிழங்கு, கவளக்கிழங்கு போன்றவையே பிரதான உணவாக இருந்துள்ளது. ஒமனகிரியில் வாழ்ந்தவர்கள் அங்கிருந்து மெல்லமெல்ல நகர ஆரம்பித்து, மலைமுந்தல், ஆமைப்பதி, மட்டப்புக்களி, நீலாக்கேணி போன்ற இடங்களில் சிறிதுசிறிதாக குடியேறி சந்ததிகளை அதிகரிக்க ஆரம்பித்தனர். அந்தசமயத்தில் அவர்களின் பிரதான தொழிலாக வேட்டையாடுதலே இருந்தது.

டி.எஸ்.சேனநாயக்கா பிரதமராக இருந்த சமயத்தில், மூதூர் தொகுதியின் முதலாவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அலி அபுபக்கர், ஆதிவாசிகளின் தலைவரான பட்டாங்கட்டி கோணாமலை என்பவருடன் ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்திற்கு வந்தார். தேர்தலில் ஆதிவாசிகள் அவரை ஆதரித்தால், அவர்களின் தேவைகளை நிறைவேற்றி தருவதாக வாக்களித்தார்.

தேர்தலில் வெற்றியடைந்த அபுபக்கர் சொன்னபடி ஆதிவாசிகளிற்கு உதவினார். வேட்டையாடும் தொழில் நிரந்தரம் அல்ல என ஆலோசனை வழங்கி, ஆதிவாசிகளை விவசாயத்தில் ஈடுபடுமாறு ஆலோசனை வழங்கினார். அத்துடன் நின்றுவிடாமல், குளம் ஒன்றை அமைக்க ஆலோசனை வழங்கியுள்ளார். குளம் அமைக்க பொருத்தமான பள்ளம் ஒன்றை ஆதிவாசிகள் அடையாளப்படுத்த, அதனை துப்பரவு செய்ய பணம் வழங்கியுள்ளார். அபுபக்கரின் ஒத்துழைப்புடன் உல்லைக்குளம் உருவாக்கப்பட்டு, இந்த விவசாய திட்டம் தொடங்கியது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் கள்ள ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு மிக மோசமாக ஆக்கிரமிக்கப்பட்டுவருகிறது. அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் இச் செயற்பாடுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் திருகோணமலை மூதூர் கிழக்கில் மாத்திரம் பழங்குடி மக்களின் விவசாய நிலங்கள் 2000 ஏக்கர் வரை 2010 பின்னர் பறிக்கப்பட்டு அக்கிராமங்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.

மூதூர் கிழக்கில் பாலக்காட்டுவெட்டை இப்போது இர்பான் நகராகவும், கோபாலபட்டனம் அறபாநகராகவும், வெந்தக்காட்டுவெட்டை, மலைமுந்தல், மாவடியூற்று ஆகிய கிராமங்கள் தாய்பூநகராவும் 2015, 2016 இல் பெயர் மாற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.