img/728x90.jpg
முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறு பேச்சு! செப் 24ல் ஆஜராக ஸ்டாலினுக்கு நீதிமன்றம் உத்தரவு

முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறு பேச்சு! செப் 24ல் ஆஜராக ஸ்டாலினுக்கு நீதிமன்றம் உத்தரவு

 தி.மு.க ஆட்சி அமைந்தால், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி' என்று மு.க.ஸ்டாலின் பேசியதற்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், செப்டம்பர் 24-ம் தேதி அவர் நேரில் ஆஜராக திருச்சி முதன்மை நீதிபதி  குமரகுரு உத்தரவிட்டுள்ளார். 
 
கடந்த ஜூன் 21-ம் தேதி, திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``ஐந்தாவது முறையாக கலைஞர் ஆட்சிபுரிந்த நேரங்களில், ஜெயலலிதா ``இது சிறுபான்மை ஆட்சி, மைனாரிட்டி ஆட்சி"  என்று கூறுவார். அதற்குத் தலைவர் கலைஞர்,  ``ஆம், இது மைனாரிட்டிகளுக்காக நடக்கக்கூடிய ஆட்சி. எனவே, இது  மைனாரிட்டி ஆட்சிதான்" என்பார். மைனாரிட்டி ஆட்சியாக இருந்தாலும் ஐந்து வருடங்கள் முழுமையாக ஆட்சி நடத்தியவர் நமது தலைவர் . ஆக, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்களுக்காகக் குரல்கொடுப்பது இந்த தி.மு.க தான்.
 
மத்தியில் ஆளும் பா.ஜ.க-வால் மதச் சார்பின்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. நீட் பிரச்னையால் மனமுடைந்து மாணவிகள் தொடர்ந்து தற்கொலைசெய்துகொண்டுவருகின்றனர். அதைத் தட்டிக்கேட்கக்கூடிய நிலையில் இந்த எடப்பாடி ஆட்சி இருக்கிறதா? இல்லை.  எடப்பாடி, நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ கொஞ்சம்கூட சிந்தித்துப் பார்க்கவில்லை.
 
'தி.மு.க நினைத்திருந்தால், இந்நேரம் ஆட்சியை முடித்திருக்கலாம். கருணாநிதி, ஒருநா‌ளும் யாரையும் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்ததில்லை. என்னிடம் பல ஐஏஎஸ் ஆபீஸர்கள், ஏன் நீதிபதிகள்கூட `` நல்ல நல்ல சான்ஸ் வருது. முடிக்க மாட்றீங்களே"னு கேட்கிறார்கள். பொதுமக்களும் கட்சிக்காரர்களும்கூட அப்படித்தான் கேட்கிறார்கள். எம்.எல்.ஏ-க்கள் மனது மாற வேண்டும். அவர்கள் மனது மாறினால், அடுத்த நிமிடம் பதவியில் இருப்பீர்களா? சரி. மக்கள் விரும்புவது மாதிரியே முயல்வோம். எம். எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கிக்குவோம்.
 
நாம் ஆட்சியில் இல்லையென்றாலும்கூட, நாம்தானே அமைச்சர் மாதிரி இருக்கிறோம். பதவி இன்று வரும் நாளை போகும். ஆனால், அந்தப் பதவிக்கு உரிய மரியாதையை நாம் நிச்சயம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு மாதந்தோறும் கமிஷன் வகையில் 10 கோடி ரூபாய் வரை பணம் கிடைக்கிறது. மேலும், நிறைய கல்லூரிகள் மற்றும் இடங்களை வாங்கிக் குவித்துவருகிறார்கள் என்கிற செய்திகள் வருகின்றன. அடுத்து, தி.மு.க ஆட்சிக்கு வரும்போது,  எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் சிறை செல்வார்கள்” என ஸ்டாலின் பேசினார்.
 
இதுதொடர்பாக வழக்கறிஞர்  சம்பத் என்பவர் தொடர்ந்த அவதூறு வழக்கில், தி.மு.க தலைவர் ஸ்டாலினை இன்று நீதிமன்றத்தில் ஆஜராக  சம்மன் கொடுத்திருந்தார். அதையடுத்து, தி.மு.க தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மு.க.ஸ்டாலினின்  தந்தையும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்காக தமிழகம் முழுவதும் புகழஞ்சலிக் கூட்டங்கள்  நடத்திவருவதால், ஸ்டாலினால் இன்றைய தினம் ஆஜராக முடியவில்லை. அதனால், வேறு தேதி கேட்டு மனு கொடுக்கப்பட்டது. அதையடுத்து, வழக்கை திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குமரகுரு, வரும் செப்டம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
 
தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற சில தினங்களில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடர்ந்த வழக்கில், வரும் செப்டம்பர் 24-ம்தேதி ஸ்டாலின் ஆஜராக  உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.