img/728x90.jpg
img/728x90.jpg
மறைக்கும் மத்திய அரசு மீளுமா கீழடி? - தொல்லியல் தொல்லைகள்

மறைக்கும் மத்திய அரசு மீளுமா கீழடி? - தொல்லியல் தொல்லைகள்

 கீழடியில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சியின் ஆய்வறிக்கையை, ஆராய்ச்சி மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணனை வைத்தே சமர்ப்பிக்க வேண்டும் என்று வழக்கு போடப்பட்டுள்ளது; தொல்லியல் ஆர்வலர்களும் இதே கருத்தைத் தெரிவிக்கிறார்கள். தோண்டப்பட்ட செய்திகளைச் சற்றே கிளறுவோம்...

 
இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் பெங்களூரு அகழாய்வுப் பிரிவு, வைகை நதிக்கரை நாகரிகத்தை அறிந்துகொள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வுசெய்யத் திட்டமிட்டது. 2013-14-ம் ஆண்டுகளில் முதற்கட்டப் பணி துவங்கியது. தொன்மையான வைகை நதியின் நாகரிகத்தைக் கண்டறிய தொல்லியல் எச்சங்கள் அதிகமுள்ள கீழடியில் நான்கு ஏக்கர் பரப்பளவு அகழாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
 
 
முதற்கட்டப் பணிகள் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஓர் ஏக்கருக்கும் குறைவான இடத்தில் மட்டுமே அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிலேயே ஆயிரக்கணக்கில் தொன்மையான பொருள்கள் கிடைத்தன. அவற்றில் சில பொருள்கள் மட்டும் காலத்தைக் கண்டறிவதற்காக கார்பன் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. 
 
ஆய்வின் முடிவில் அவை கி.மு 2-ம் நூற்றாண்டுக்கு முந்தையவை என்பது உறுதியானது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், நகர நாகரிகம் தமிழகத்தில் இருந்ததற்கான சான்றாகக் கீழடி இருந்தது. பழந்தமிழரின் இலக்கியங்கள் மற்றும் வரலாற்றை நிரூபிப்பதில் கீழடியில் கிடைத்த பொருள்கள் தற்போது முக்கியப் பங்காற்றி வருகின்றன. இரண்டு கட்ட அகழ்வாய்வின் இறுதியில், ‘இந்தியாவின் தொன்மையான நாகரிகம் கீழடி’ என்று நிரூபணமானது. 
 
ஆனால், இதன்பின் திடீரென மூன்றாம் கட்ட அகழாய்வு நிறுத்தப்பட்டு, கீழடியில் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன், அஸ்ஸாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். அப்போது, ‘கீழடியில் தொடர்ந்து அகழாய்வு நடத்தப்பட வேண்டும்’ என்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் கோரின. எழுத்தாளர்களும், தொல்லியல் அறிஞர்களும் அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் கீழடிக்கு மாற்ற வேண்டும் என்று பேசிவந்த நிலையில், மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்குக் கண்காணிப்பாளராக ராம் என்பவரை நியமித்தது மத்திய தொல்லியல் துறை.
 
 
 
மூன்றாம் கட்ட அகழாய்வில் கிட்டத்தட்ட 3,000 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனாலும் கண்காணிப்பாளர் ராம், ‘‘ஏற்கெனவே அறியப்பட்ட கட்டடங்களின் தொடர்ச்சியோ அல்லது வேறுவிதமான பொருள்களோ இந்த ஆய்வில் கிடைக்கப்பெறவில்லை’’ என்று தன் முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
 
இதனால் நான்காம் கட்ட அகழாய்வு நடக்குமா என்றிருந்த நிலையில், தமிழகத் தொல்லியல் துறை அதைக் கையில் எடுத்துள்ளது. இந்தப் பணிக்குக் கண்காணிப்பாளராக தமிழகத் தொல்லியல் துறையின் சிவானந்தம் நியமிக்கப்பட்டார். தற்போது ஆய்வை முடித்து, முதற்கட்ட அறிக்கை கொடுத்திருக்கிறார் அவர். இந்த ஆய்வில், தங்க அணிகலன்கள், பானை ஓடுகள், மனித முகம் கொண்ட அச்சுகள், உறைக்கிணறு உள்ளிட்ட 5,820 பொருள்கள் கண்டறியப்பட்டன. ஐந்தாம் கட்ட ஆராய்ச்சியைச் செய்ய தமிழகத் தொல்லியல் துறை விண்ணப்பித்துள்ளது. மழைக்காலம் முடிந்து, 2019 ஜனவரியில் இது தொடங்கக்கூடும். 
 
இதற்கிடையே, ‘முதல் இரண்டு கட்ட முழு ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் தயார் செய்யக் கூடாது. பெங்களூரு தொல்லியல் துறை சூப்பிரண்டாகப் பணியாற்றி வருபவர்தான் தயார் செய்ய வேண்டும்’ என்று மத்திய தொல்லியல் துறை இப்போது உத்தரவிட்டுள்ளது.  ‘இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார்.
 
 
 
இதுகுறித்து அவரின் வழக்கறிஞர் அழகுமணியிடம் பேசினோம். ‘‘கீழடி ஆய்விலிருந்து அமர்நாத் பெயரை நீக்கவே மத்திய தொல்லியல் துறை இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. கீழடியில் நடந்த முதல் இரண்டு கட்ட அகழாய்வின் ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் வரும் 31-ம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதையடுத்துதான், முழு அறிக்கையை யார் தயார் செய்வது என நீதிபதிகள் முடிவெடுப்பார்கள்’’ என்றார்.
 
நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவரும் நிலையில்தான், கீழடி தொடர்பான ஆய்வறிக்கையைத் தயார் செய்யும் குழுவில் அமர்நாத் ராமகிருஷ்ணனை மத்தியத் தொல்லியல் துறை சேர்த்திருப்பதாகத் தெரியவருகிறது.
 
கீழடி குறித்து தொடர்ந்து பேசிவரும் எழுத்தாளர் சு.வெங்கடேசன், ‘‘பொதுவாக தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் அதிகாரிதான், அறிக்கையையும் தயார்செய்ய வேண்டும். பழங்கால நாகரிகம் தொடர்பான ஆய்வில் கிடைத்த சான்றுகள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பது அறிக்கையின் மூலமாக உறுதிப்படுத்தப்படும். ஆனால், அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டதில் உள்நோக்கம் இருக்கிறது. தமிழகத்தில் இருந்து மத்திய தொல்லியல் துறைக்கு எதிராகப் பேச்சு வந்ததும், கண்துடைப்புக்காக அமர்நாத்தை சேர்த்துள்ளனர்’’ என்றார்.
 
வரலாறுகள் தவறான நபர்களால் தீர்மானிக்கப்படக் கூடாது!