குரங்கணி வனப்பகுதியில் புகுந்த வெளிநாட்டவர்கள் - வனத்துறையினரைத் தாக்கிவிட்டு தப்பியோட்டம்

குரங்கணி வனப்பகுதியில் புகுந்த வெளிநாட்டவர்கள் - வனத்துறையினரைத் தாக்கிவிட்டு தப்பியோட்டம்

 தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி, ட்ரெக்கிங் சென்ற 23 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை அனுமதியின்றி ஆறு வெளிநாட்டவர்கள் குரங்கணி மலைப்பகுதியில் புகுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மூணாறு பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் வழிகாட்டுதலின் பேரில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆறு பேர், (மூன்று ஆண்கள், மூன்று பெண்கள்) கடந்த ஒரு வாரமாக கேரளப் பகுதிகளில் சுற்றுலா சென்றுவிட்டு, டாப்ஸ்டேஷன் வழியாக சென்ட்ரல் ஸ்டேஷன் வந்தடைந்து குரங்கணி வந்துள்ளனர். இத்தகவல், வனத்துறைக்குத் தெரியவர, உடனே விரைந்து சென்ற போடி வனச்சரக வனத்துறையினர், வழிகாட்டி உட்பட ஆறு பேரைப் பிடித்து, வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துவந்துள்ளனர். குரங்கணி காட்டுத் தீ சம்பவத்துக்குப் பிறகு, குரங்கணி வனப்பகுதியில்  ட்ரெக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் சூழலில், இவ்வழியாக ஏன் வந்தீர்கள்... என அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
 
அதற்கு சரிவர பதிலளிக்காததால், அவர்களுடைய பாஸ்போர்ட்டை காட்டும்படி வனத்துறையினர் கேட்டுள்ளனர். அதற்கு மறுப்புதெரிவித்த ஆறு வெளிநாட்டவர்களும், வனச்சரக அலுவலகத்திலிருந்து தப்பித்ததாகக் கூறப்படுகிறது. தப்பிக்கும்போது, வனத்துறையினரைத் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யார் இவர்கள்... ஏன் அவர்களைப் பற்றிய தகவல்களைத் தர மறுக்கிறார்கள்? எதற்காகத் தப்பித்தார்கள் என்று புரியாத வனத்துறையினர், போடி நகர் காவல்துறைக்கு தகவல் தரவே, தப்பியோடிய ஆறு பேரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அனுமதியின்றி வனப்பகுதிக்குள் புகுந்த வெளிநாட்டவர்களால் தேனி மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.