img/728x90.jpg
வடநாட்டு அரசியல் எதிர்ப்பு தொடர்கிறது..!

வடநாட்டு அரசியல் எதிர்ப்பு தொடர்கிறது..!

வடநாட்டு அரசியல் எதிர்ப்பு தொடர்கிறது..!

நரேந்திர மோடியே எதிர்பார்க்காத அதிகப் பெருபான்மையை மக்களவைத் தேர்தலில் பா.ச.க.வுக்கு வடநாடு வழங்கியிருக்கிறது! வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக கருத்துக் கணிப்பு நடத்தியவர்களே எதிர்பார்க்காத படுதோல்வியை காங்கிரசுக்கு வழங்கியிருக்கிறது வடநாடு!
 
காங்கிரசுக்கு 100க்கும் மேற்பட்ட தொகுதிகள் கிடைக்கும் என்று தான் கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் அதற்கு 52 இடங்கள் தான் கொடுத்துள்ளார்கள். அதில் கேரளம் - 15, தமிழ்நாடு - 9, தெலங்கானா - 3, கர்நாடகம் - 1, மொத்தம் - 28.
 
வாக்குப் பதிவு எந்திரத்தில் ஆட்சியாளர்கள் மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டைக் காங்கிரசுத் தலைமை கூறவில்லை.
 
நடைமுறை உண்மையைப் பொறுத்த வரை காங்கிரசுக்கும், பா.ச.க.வுக்கும் இடையே அடிப்படை வேறுபாடு எதுவுமில்லை. இந்தித்திணிப்பு, சமற்கிருதத் திணிப்பு, மாநில உரிமைப் பறிப்பு, பெருங்குழும வேட்டைக்காரர்களுக்கு வேட்டை நாய் போல் செயல்படுவது, ஆரிய - வேதகாலம் - இந்து மதவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தியத்தேசியம் என்ற கற்பனைக் கட்டமைப்பை வலுப்படுத்துவது முதலியவற்றில் காங்கிரசும், பா.ச.க.வும் ஒரே கொள்கை உடையவை. இவை குறித்து பா.ச.க. தீவிரமாகப் பேசும்; வன்முறைகளில் கூடுதலாக ஈடுபடும். ஆரவாரமின்றி இவை அனைத்தையும் காங்கிரசு செயல்படுத்தும்!
 
இந்த இரண்டு கட்சிகளின் அனைத்திந்தியத் தலைமையை ஏற்றும் இவற்றுடன் கூட்டணி சேர்ந்தும் தமிழ்நாட்டு உரிமைகளைக் காவு கொடுத்து பணம், பதவி பார்க்கும் கங்காணிக் கழகங்கள் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும் என்பது சமகாலத் தமிழர்கள் அறிந்த வரலாறு.
 
இந்தக் கங்காணிக் கழகங்களைத் தமிழர்கள் தூக்கிச் சுமப்பதற்கான அடிப்படைக் காரணம், வட இந்தியத் தலைமையையும், வர்ணாசிரமவாத ஆன்மிகத்தையும் ஏற்காத தமிழர் மரபு தான்!
 
இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் 1920களில் காங்கிரசுக் கட்சி தீவிர இந்தித் திணிப்பில் ஈடுபட்டது. சென்னையில் 1919இல் தென்னிந்திய இந்திப் பரப்புக் கழகத்தைக் காந்தி தொடங்கி வைத்தார். அப்போதிருந்து இந்தியையும் ஆரிய வேதகாலப் பெருமை பேசிய காங்கிரசையும் எதிர்த்து வருகிறார்கள் தமிழர்கள். தமிழறிஞர்களும் தமிழ் இன - மொழி உணர்வாளர்களும் தான் காங்கிரசின் ஆரிய - இந்தி ஆதிக்கக் கருத்துகளை 1920களில் இருந்து எதிர்த்து வந்தார்கள்.
 
இதன் தொடர்ச்சியாகத்தான் 1937இல் மாநில முதல்வரான இராசாசி இந்தியைத் திணித்த போது 1938இல் மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் நடந்தது. தமிழறிஞர்கள் தொடங்கிய இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் பெரியார் பங்கேற்ற பின் அப்போராட்டம் வெகுமக்கள் போராட்டமாக வீச்சுப் பெற்றது. அப்போராட்டத்தில் தான் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கம் எழுந்தது.
 
வெள்ளை ஏகாதிபத்தியமிடமிருந்து விடுதலை பெறுவதற்காக அனைத்திந்திய அளவில் காந்தி தலைமையில் காங்கிரசு பேரியக்கமாக விளங்கிய அக்காலத்தில் - அதற்கு மாற்றாக தமிழ்நாட்டில் பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் இயங்க முடிந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் ஆரிய - வேதகால ஆதிக்க எதிர்ப்பு தமிழர்களிடம் மரபு வழியாக இருந்ததுதான்!
 
இந்தியா விடுதலை பெற்ற பின் 1952இல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அகாசுகா கூட்டணி அமைத்துதான் இராசாசி தலைமையில் காங்கிரசு ஆட்சி அமைக்கப்பட்டது. 1967இல் காங்கிரசை வீழ்த்தி தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது.
 
அப்போதிருந்து தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துதான் காங்கிரசோ அல்லது பா.ச.க.வோ சில இடங்களைப் பெற முடிகிறது.
 
இனக்கவர்ச்சி காட்டி தமிழர்களிடம் செல்வாக்கு பெற்ற தி.மு.க. திரைக்கவர்ச்சி காட்டி அரசியல் நடத்தியது. திரைப்பட நாயகர்கள் அரசியல் கடை விரிப்பது தொடங்கியது. ஊழல், வாரிசு அரசியல், எதேச்சாதிகாரத் தலைமை முதலியவற்றில் இந்தியாவில் முதல் வரிசைக் கட்சிகளாக தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் சீரழிந்தன. ஆனாலும் ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல் தமிழ்நாட்டு உரிமைகளுக்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள்தான் என்றும், காங்கிரசு, பா.ச.க.வைவிட தமிழ்நாட்டுக்குரியவை என்றும் தமிழர்கள் கருதுகிறார்கள். அந்த உளவியலில்தான் தமிழர்கள் இத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலுள்ள காங்கிரசு, கம்யூனிஸ்ட்டுகள், வி.சி.க. அணிக்கு பெருவாரியாக வாக்களித்து 39க்கு 38 மக்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்துள்ளார்கள்.
 
தமிழ்நாட்டில் தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தமிழ்த்தேசியத்தை முன்வைத்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி கருதத்தக்க அளவில் வாக்குகள் வாங்கி இருக்கிறது. 3.87 விழுக்காடு வாங்கியிருப்பது வளர்முகம் ஆகும். நாம் தமிழர் கட்சியின் தலைமையிலிருந்து கிளைவரை இலட்சியத் தெளிவு - இலட்சிய உறுதி - எடுத்துக்காட்டான செயல்பாடுகள் ஆகியவை வலுவாக வேர்விட வேண்டும்.
 
காமவெறி போன்று பதவிவெறியும் கண்ணை மறைக்கும்; கவனம் மிகமிகத் தேவை!
 
பா.ச.க.வின் பெருவெற்றியைக் கண்டு அஞ்சத் தேவை இல்லை. மொழி உரிமை, இன உரிமை, மண்ணுரிமை, வாழ்வுரிமை முதலியவற்றிற்காக நாம் நடத்திவரும் போராட்டத்தை மேலும் உறுதியுடன், வலிமையுடன், ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து நடத்த வேண்டும். காங்கிரசு வென்றிருந்தாலும் இது தான் நம் நிலைமை!
 
ஐயா பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்