img/728x90.jpg
img/728x90.jpg
2 கிமீ தூரம் நடந்து தண்ணீர் எடுத்தோம் ஊற்றுக்குழியை அதிகாரிங்க மூடிட்டாங்க - கண்கலங்கும் மக்கள்

2 கிமீ தூரம் நடந்து தண்ணீர் எடுத்தோம் ஊற்றுக்குழியை அதிகாரிங்க மூடிட்டாங்க - கண்கலங்கும் மக்கள்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வைப்பாற்றுப் பகுதியில் பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வந்த ஊற்றுக்குழிகள் மூடப்பட்டதால் அந்தத் தண்ணீரைக்கூட எடுக்க முடியாமல் மக்கள் தவிப்பில் உள்ளனர்.

ஊற்றுக்குழியில் தண்ணீர் எடுக்கும் மூதாட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது விளாத்திகுளம். மானாவாரி விவசாயமும் கரிமூட்டத் தொழிலும்தான் முக்கியத் தொழிலாக உள்ளது. மாவட்டத்திலேயே பின்தங்கிய இந்த விளாத்திகுளம் பகுதியில் தண்ணீர்ப் பிரச்னை, முக்கியப் பிரச்னையாக இருந்து வந்தது. விளாத்திகுளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில், முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். சீவலப்பேரி தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்படி 7 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது நிலவி வரும் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாட்டால், மக்களே தங்களது தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் இப்பகுதியில் உள்ள வைப்பாற்றுப் பகுதியில் குழி தோண்டி, அதில் ஊறும் ஊற்றுத் தண்ணீரை அகப்பையால் எடுத்து குடங்களில் நிரப்பி எடுத்துச் சென்று பயன்படுத்தி வருகிறார்கள்.   

ஊற்றுக்குழியில் தண்ணீர்

ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்கும் சம்பவத்தை பல ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன. இதைத் தொடர்ந்து, விளாத்திகுளம் பேரூராட்சி அதிகாரிகள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஊற்றுக் குழிகளை மூடிவிட்டனர். இது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து தூத்துக்குடி தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் விளாத்திகுளத்தில் வரும் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் பேசினோம். ``விளாத்திகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் கிடைப்பதற்கு தற்போது 10 நாள்களுக்கு மேல் ஆகிறது.

மூடப்பட்ட ஊற்றுக்குழி

குடிநீர்த் தேவைக்காக ஒரு குடம் தண்ணீர் ரூ.10 முதல் 12 வரை விலை கொடுத்து வாங்க வேண்டியதுள்ளது. தினமும், குடிநீர், சமையல் தேவைக்காக குறைந்தபட்சம் ஒரு வீட்டுக்கு 3 முதல் 4 குடம் தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் போதிய அளவில் கிடைக்கவில்லை என்பதால்தான், 2 கி.மீட்டர் தூரம் வரை நடந்து சென்று வைப்பாற்றில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுத்து அதை குடிநீருக்கும், சமையலுக்கும் பயன்படுத்தி வருகிறோம். பல ஊற்றுகள் தூர்ந்த நிலையில், 8 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட குழியில் ஒரு சில ஊற்றுகளில் மட்டும் தற்போது தண்ணீர் சுரப்பதால் ஒருகுடம் தண்ணீர் நிரப்ப, ஒருமணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில், அதிகாரிகள் திடீரென ஊற்றுக் குழிகளை மூடியுள்ளனர். தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கிட நடவடிக்கை எடுக்காமல் தண்ணீர் சுரந்து தாகம் தீர்த்து வந்த ஊற்றுக்குழிகளை மூடியது கண்டிக்கத்தக்கது. மூடப்பட்ட குழிகளை மீண்டும் திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.

``ஊற்றுகளில் விஷமிகள் யாரேனும் விஷத்தன்மை உடையவற்றை கலந்துவிட்டால் பிரச்னையாகிவிடும். முட்புதர்கள் வளர்ந்துள்ள பகுதிகளில் தண்ணீர் எடுக்க தனியாகச் செல்லும் பெண்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் குழி மூடப்பட்டுள்ளது” என்கிறது அதிகாரிகள் தரப்பு.  பேரூராட்சி அதிகாரிகள் குழிகளை மூடி, தண்ணீர்த் தட்டுப்பாட்டை மேலும் அதிகப்படுத்தியுள்ளனர்.