img/728x90.jpg
தண்ணீர் சிக்கலில் தமிழ்நாடு

தண்ணீர் சிக்கலில் தமிழ்நாடு

”தண்ணீர் சிக்கலில் தமிழ்நாடு..!

(தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தி வரும் தமிழ்த்தேசிய மாத இதழான தமிழர் கண்ணோட்டம் கடந்த 2019 மே இதழில் வெளியான தலையங்கக் கட்டுரை இது. கடந்த 2019 ஏப்ரல் மாத இறுதியில் எழுதப்பட்ட இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளதைவிட தற்போது சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் குடிநீர் சிக்கல் பூதாகரமாக உருவெடுத்த நிலையில் அக்கட்டுரை இங்கு மீண்டும் பதிவிடப்படுகிறது).

அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் நடந்து வரும் சில நிகழ்வுகள், தமிழ்நாடு மிகப்பெரும் தண்ணீர் சிக்கலை எதிர்கொள்ளப் போவதை உணர்த்திக் கொண்டுள்ளன. வழக்கமாக, பருவமழை காலத்தில் மேட்டூரில் தேங்கியுள்ள மிச்ச நீரை அடிப்படை சேமிப்பாக வைத்துக் கொண்டுதான், கர்நாடகத்திலிருந்து வர வேண்டிய தண்ணீரில் ஓரளவைப் பெற்று குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணைத் திறக்கப்பட்டு வந்தது. கடந்தாண்டு (2018) பருவமழை அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணையில் மார்ச்சு இறுதி வாக்கில் 64 அடி உயரத்திற்குத் தண்ணீர் இருந்தது.

இந்த சேமிப்பைக் காலி செய்கின்ற வகையில், கடந்த 31.03.2019 அன்று முதல் மேட்டூர் அணையிலிருந்து திடீரென 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கு முன்னர் “குடிநீருக்காக” அதிகபட்சமாக 2,000 கன அடி தண்ணீர் தான் திறந்துவிட்டார்கள். வீராணம் ஏரியை நிரப்பத்தான் மேட்டூரில் இவ்வளவு தண்ணீரை திறந்துவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. எதற்காக இப்போது திடீரென வீராணம் ஏரியை நிரப்புகிறார்கள்? தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மிகப்பெரும் குடிநீர் சிக்கலில் உள்ளது.

ஒப்பந்தப்படி ஆண்டுக்கு ஆந்திராவிலிருந்து 12.5 ஆ.மி.க. (டி.எம்.சி.) வர வேண்டிய கிருஷ்ணா தண்ணீர் இதுவரை குறைந்தது 6 ஆ.மி.க.வுக்காவது வந்திருக்க வேண்டும். ஆனால், 1 ஆ.மி.க.வுக்குக் கூட வரவில்லை. ஆந்திராவுக்குக் கோடி கோடியாகப் பணம் கொடுத்துதான் இந்தத் தண்ணீர் பெறப்படுகிறது. தமிழ்நாடு அரசு அந்த உரிமையான தண்ணீரை கேட்டுப் பெறவில்லை. கடந்தாண்டு (2018) போதுமான மழைப் பெய்யாத நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய முகாமையான ஏரிகளில் போதிய தண்ணீர் இல்லை. மொத்தம் 11 ஆயிரத்து 25.7 கோடிகன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்ட இந்த நான்கு ஏரிகளிலும், இப்போது வெறும் 40.2 கோடி கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

நாள் ஒன்றுக்கு சென்னை பெருநகரத்திற்கு மட்டும் 83 கோடி லிட்டர் தண்ணீர் தேவை. இப்போது, அதில் 55 கோடி லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. இதற்காக வீராணம் ஏரியிலிருந்து நாள் தோறும் 18 கோடி லிட்டரும், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் வழியாக 20 கோடி லிட்டரும், கல்குவாரிகளிலிருந்து 3 கோடி லிட்டரும், பூண்டி, புழல் ஏரிகளிலிருந்து 14 கோடி லிட்டரும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த 55 கோடி லிட்டர், இப்போது 45 கோடியாகக் குறைக்கப்பட்டுவிட்டது. கோடைக்காலத்தில், தண்ணீர் தேவை அதிகரிக்கும்போது, மிகப்பெரும் சிக்கல் ஏற்படும்!

சென்னையில், குறிப்பாக வடசென்னையின் பெரம்பூர், திரு.வி.க.நகர், கொடுங்கையூர், கொளத்தூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர்ச் சிக்கல் மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. இதேபோல், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கடும் தண்ணீர் சிக்கல் எழுந்துள்ளது. தெருக் குழாய்களில் போதுமான தண்ணீர் வராததால், மாநகராட்சியின் குடிநீர் லாரிகளையே மக்கள் நம்பியுள்ளனர். தனியார் லாரிகள் ஒரு குடம் நீரை 10 ரூபாய் வரை விற்கிறார்கள்.

நிலத்தடி நீரும் மிகப்பெரும் அளவுக்கு கீழிறங்கிச் சென்றுவிட்டது. சென்னையில் 600 அடிக்குக் கீழும் தண்ணீர் கிடைப்பதில்லை! மழை நீர் சேகரிப்புத் திட்டம் கட்டாயமாக்கப் பட்டாலும், அது முறையாகக் கண்காணிக்கப்படாததால், வெறும் ஏட்டளவில் கிடக்கிறது.

இந்நிலையில், சென்னையைச் சுற்றி குவிந்துகிடக்கும் மோட்டார் வாகனத் தொழிற் சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என நூற்றுக்கணக்கான பகாசுர தொழில் நிறுவனங்கள் நிலத்தடி நீரை சுரண்டிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் தண்ணீர் சிக்கல் வரும்போதெல்லாம் மக்கள் வீதிகளில் அலைந்து கொண்டிருக்க, இந்தத் தொழில் நிறுவனங்கள் தங்குதடையின்றி நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொழுக்கின்றன. சென்னை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் நிலைமையும் இதுதான்! மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் நிலத்தடி நீர் அபாயகரமான நிலைமையில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நமது நீர்நிலைகளை அழித்தொழித்ததில் தீவிரமான நகரமயமாக்கலுக்கு முகாமையான பங்குண்டு! எனவே, இனியாவது நீர் மேலாண்மையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நகர்மயமாக்குதலில் முன்னெச்சரிக்கையும், கட்டுப்பாடும் தேவை! உயிர்கள் அனைத்திற்குமான நீரை தான் மட்டுமே இயற்கை நீதிக்கு எதிரானது என்ற உருத்தல் ஆட்சியாளர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் தேவை. மாசுபடுத்தும் தொழிற்சாலை களுக்குத் தடை விதித்தல், ஆக்கிரமிப்புகளிலிருந்து நீர்நிலைகளை மீட்டல், மழைக் காலங்களில் நீரை சேமித்தல், எனப் பணிகள் நிறைய இருக்கின்றன. இப்பணிகளில் மக்களும் பங்குகொள்ளவேண்டும். ஆபத்து காலத்தில் கூச்சலிடுவது மட்டும் போதாது, நீண்டகால தொலைநோக்குத் திட்டங்கள் தேவை!

 கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

#தவிக்கும்தமிழ்நாடு