img/728x90.jpg
கார்ப்பரேட்டுகளின் காட்டு தர்பாருக்கு வழிவகுக்கும் இந்திய வனச்சட்டம் – 2019

கார்ப்பரேட்டுகளின் காட்டு தர்பாருக்கு வழிவகுக்கும் இந்திய வனச்சட்டம் – 2019

காடுகள் அனைத்தையும் தனியார்மயமாக்கிட, காடுகளையும் மலைகளையும் பெருங்குழும சூறையாடலுக்குத் திறந்துவிட மிகக் கேவலமான காட்டு தர்பார் கட்டவிழ்த்து விடப்படுகிறது. நரேந்திர மோடி அரசு தனது ஆட்சியின் இறுதி நாட்களில் “இந்திய வனச் சட்டம் - 2019” என்ற சட்ட வரைவை முன்வைத்திருக்கிறது. 

காலம் காலமாக காடுகளை தங்கள் தாயாகவும் தெய்வமாகவும் மதித்து ஒழுகி காடுகளையே தாயகமாகக் கொண்டு வாழ்ந்த மக்களை அக்காடுகளின் மீது உரிமையற்றவர்களாக மாற்றி, வெள்ளை ஏகாதிபத்திய அரசாங்கம் முதல் முதலில் 1868இல் “இந்திய வனச் சட்டம்” என்ற ஒன்றை ஏற்படுத்தியது. அதை இன்னும் கடுமையாக்கி 1927இல் வெள்ளை அரசு பிறப்பித்த இந்திய வனச் சட்டம் தான், இன்றுவரை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. 

காடுகளின் மீது உரிமை படைத்தவர்கள் இந்த ஒரே சட்டத்தின் வழியாக ஆக்கிரமிப்பாளர்களாக வரையறுக்கப்பட்டார்கள். ஆக்கிரமிக்க வந்த வெள்ளை அரசு, இக்காடுகளின் உரிமையாளரானது. 
மன்னராட்சி நடைபெற்ற சமவெளிப் பகுதிகளைவிட பழங்குடி மக்கள் வாழ்ந்த காடுகளை தனது காலனிப் பகுதியாக ஆக்கிரமிப்பதில்தான் வெள்ளை அரசு கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டி வந்தது. வெள்ளை அரசின் ஆயுத வலுவைப் பற்றி கவலையே படாமல், தங்கள் வனத் தாயகத்தை பாதுகாக்க கடைசி மனிதர் வரையிலும் பழங்குடியினர் போராடினார்கள். 
வீரம் செறிந்த அப்போராட்டங்கள் வீழ்த்தப் பட்டதற்குப் பின்னால்தான், காடுகளும் மலைகளும் வெள்ளையராட்சியின் உடைமைகளாயின. ஆயினும், வெள்ளை முதலாளிகளும் அவர்களோடு இளையப் பங்காளியாக இணைந்த இந்திய முதலாளிகளும் தங்கள் தொழில், வணிக விரிவாக்கத்திற்கு தொடர்வண்டி தண்டவாளங்கள் போட வேண்டிய தேவை ஏற்பட்டது. 

வெள்ளை துரைமார்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கு மலையகங்கள் தேவைப்பட்டன. அங்கே விதவிதமான மரங்களால் ஆன சொகுசு வீடுகளை கட்டிக் கொள்ளவும் அவர்கள் விரும்பினார்கள். இவை அனைத்திற்காகவும் வெள்ளை அரசு காடுகளைக் கைப்பற்றியது. அதை நிலைப்படுத்திக் கொள்வதற்காகவே இந்திய வனச்சட்டம் - 1927 உருவாக்கப்பட்டது. 

காந்தியடிகள் உள்ளிட்டு பல்வேறு தலைவர்கள் வனச்சட்டத்தை எதிர்த்துப் பழங்குடி மக்களின் வன உரிமைக்காகப் போராடி இருக்கிறார்கள். 
ஆயினும், வெள்ளையரிடமிருந்து ஆட்சியை கைமாற்றிக் கொண்ட ஆரியப் பெரு முதலாளிகளுக்கு, அச்சட்டமே துணை செய்தது. எனவே, அதை இன்னும் கடுமையாக்கி திருத்தங்கள் செய்து அச்சட்டத்தையே தொடர்ந்து பயன்படுத்தினார்கள். 

இந்நிலையில், பழங்குடியின மக்களின் நீண்டநெடிய போராட்டத்திற்குப் பிறகு 2006இல் “வன உரிமைச் சட்டம்” பிறப்பிக்கப்பட்டது. அதை உருப்படியாக செயல்படுத்த வைப்பதற்கும் இச்சட்டத்தின்படி மலை வாழ் மக்களின் கிராம சபைகளுக்கு உள்ள அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கும் அம்மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 
இந்நிலையில், இச்சட்டத்தின் மீது நேரடியாகக் கை வைக்காமல் அதை அப்படியே முடமாக்குவதற்கு கடந்தாண்டு (2018) “தேசிய வனக் கொள்கை” என்ற ஒன்றை மோடி அரசு அறிவித்தது. முதன்மை எதிர்க் கட்சியான காங்கிரசு, இக்கொடிய கொள்கை பற்றி மூச்சுவிடவில்லை! 

இந்தப் பின்னணியில்தான், நடப்பிலுள்ள “இந்திய வனச் சட்டம் - 1927”ஐ முற்றிலுமாக கொடுமையாக மாற்றியமைத்து, புதிதாக இந்திய வனச் சட்டம் - 2019 என்பதை மோடி அரசு முன்வைத்திருக்கிறது. 
பழைய சட்டத்தைப் போலவே இந்தச் சட்டமும் “காடுகளை பாதுகாக்கும் நோக்கோடு கொண்டு வரப்பட்டுள்ளது” என்றே அறிவித்துக் கொள்கிறது. இதன் உண்மையான நோக்கம், காடுகளை பாதுகாப்பதல்ல - காடுகளைப் பறிப்பது!

வெள்ளையர் சட்டத்தில் வனத்துறை அதிகாரிகளுக்கு கேள்வி முறையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன. மோடியின் சட்டத்தில் வனத்துறை அதிகாரிகளின் தர்பாருக்கே ஒட்டுமொத்த காடுகளும் விடப்படுகின்றன.

இச்சட்டத்தின்படி காடுகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் பிற சமூகத்தினரை எந்தக் கேள்வி முறையுமின்றி வனத்துறை அதிகாரிகள் தடுப்புக் காவலில் முன்கைது செய்து அடைக்கலாம். “காடுகளைப் பாதுகாக்க இவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்” என்ற வாசகம் இருந்தால் போதும்! 

இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் முன்பு போல் எளிதில் பிணையில் வரமுடியாது. 
இதற்கு முன்னர் கைது செய்கிற வனத்துறை அதிகாரிதான் கைது செய்யப்படும் மக்கள் மீது உள்ள குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் சாட்சி சான்றுகளோடு மெய்ப்பிக்க வேண்டும். ஆனால், இனி கைது செய்யப்பட்டவர் தான், தான் குற்றமற்றவர் என்பதை ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பிக்க வேண்டும். அதாவது, இந்தியா முழுவதற்கும் பொடா நீக்கப்பட்டிருந்தாலும் பழங்குடியினர்க்கு மட்டும், அது மீண்டும் கொண்டு வரப்படுகிறது.

வசதி வாய்ப்புகளும், பலமட்ட தொடர்புகளும் உள்ளவர்களுக்கே பொடா போன்ற கருப்புச் சட்டத்தை எதிர்கொள்வது மிகக் கடினமானது. ஒற்றை வரியில் காவல்துறையினர் சாற்றும் குற்றச்சாட்டிலிருந்து எல்லாவித பதில் வாதங்களையும் முன்வைத்து, தாங்கள் குற்றமற்றவர்கள் என்று மெய்ப்பிப்பது யாருக்கும் எளிய செயல் அல்ல! 

வாய்ப்புகள் ஏதுமற்று, குரலற்றவர்களாக வாழும் பழங்குடி மக்களுக்கு இது அரிதிலும் அரிதானது. அச் சூழலில் மனம் போன போக்கில், வனத்துறையினர் குற்றம்சாட்டி கைது செய்தாலும் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடுவதைத் தவிர பாவப்பட்ட பழங்குடி மக்களுக்கு வழி ஏதுமில்லை!

மோடியின் புதிய சட்டம் பல வாய்ப்புகளில் வனத்துறை அதிகாரிகள் பிடியாணை பிறப்பிக்காமலேயே அப்பாவி பழங்குடியினரை கைது செய்யலாம் என கட்டற்ற அதிகாரத்தை வழங்குகிறது. 

இவை அனைத்திற்கும் மேலாக, “காடுகளை பாதுகாப்பதற்காக” எனச் சொல்லி வனத்துறை அதிகாரிகள் பழங்குடியினரை சுட்டுக் கொல்லலாம் என்ற புதிய அதிகாரத்தை இச்சட்டம் வழங்குகிறது. காசுமீர், நாகாலாந்து போன்ற இடங்களில் ஆயுதப் போராட்டங் களைக் காரணம் காட்டிதான் “ஆயுதப்படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம்” செயலில் உள்ளது. ஆனால், எந்தக் காரணமுமின்றி இவ்வாறான சட்டம் பழங்குடியினர் மீது பாய்கிறது என்பதுதான் இதற்குப் பொருள்! 

ஏற்கெனவே உள்ள 1927ஆம் ஆண்டு சட்டத்தில் காடுகளில் சில பகுதிகளை “காப்புக் காடுகள்” (Reserved Forest) என்றும் “கிராமக் காடுகள்” (Village Forest) என்றும் வரையறை செய்து அறிவிக்க மாநில அரசுகளுக்குத்தான் அதிகாரம் இருந்தது. மோடியின் புதிய சட்டத்தில் இந்த அதிகாரம் இந்திய நடுவண் அரசுக்கு எடுத்து செல்லப்படுகிறது. 

காப்புக் காடுகளில் சாலை போடுவதோ, வன வளர்ச்சிக்குத் தொடர்பில்லாத திட்டங்கள் செயல்படுத்துவதோ மிகமிக அரிதானது. பல நிபந்தனைகளை நிறைவேற்றிய பிறகுதான் அரசே கூட காப்புக்காடுகளை நெருங்க முடியும். காப்புக்காடுகள் முற்றிலும் வனத் துறையின் முற்றாதிக்கத்திற்கு உட்பட்டவை.

இவ்வாறான காப்புக் காடுகளின் மீது வனத்துறையின் அதிகாரத்தை சில நிபந்தனை களுக்கு உட்பட்டு கிராமக் குழுக்களிடம்தான் ஒப்படைத்தால் அந்தப் பகுதி கிராமக்காடு எனப்படும். 
2006 வன உரிமைச் சட்டம், இதில் ஒரு முக்கியமான குறுக்கீடாக அமைந்தது. கிராமக் காடுகள் அமைந்துள்ள பகுதிகளிலும் வன உரிமைச் சட்டத்தின்படி கிராம சபைகளின் அதிகாரம் மேலோங்கியதாக அமைந்தது. அந்த வகையில் மீண்டும் மலைவாழ் மக்களிடம் வனங்களின் மீதான அதிகாரம் வழங்கப்பட்டது. 

இந்த வன உரிமைச் சட்டத்தை அப்படியே வைத்துக் கொண்டு, அதனை செயலற்றதாக முடக்கும் வகையிலேயே கிராமக் காடுகள் குறித்த வனச் சட்டத்தின் பிரிவுகள் இப்போது உருவாக்கப்பட்டிருக்கின்றன.

கிராமக் காடுகளில் கிராமசபையின் அதிகாரம் செல்லாது என இப்புதிய சட்டம் கூறுகிறது. 
இதுதவிர, “உற்பத்திக் காடுகள்” (Production forest) என்ற புதிய வகையினம் உருவாக்கப் படுகிறது. எந்த காட்டையும் உற்பத்திக் காடு என இந்திய அரசு அறிவிக்கலாம். அவ்வாறு அறிவிக்கப்பட்ட வனப்பகுதிகளை வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்கி விடலாம். அந்தக் குத்தகைக் காலத்தில், தங்கள் வணிக நலன்களுக்காக எந்த வகையிலும் அந்த வனப்பகுதியை தனியார் நிறுவனங்கள் மாற்றிக் கொள்ளலாம். 

இவ்வாறான உற்பத்திக் காடுகளை சுற்றியுள்ள வேறு வனப்பகுதிகளில் பழங்குடியினரும், பிற மலைவாழ் மக்களும் கடுக்காய், தேன், மூலிகை போன்ற வன சிறு மகசூல்களை எடுப்பது தனியார் நிறுவனங்களுக்கு இடை யூறாக இருக்குமென கருதப்பட்டால், அப்பகுதி களில் பழங்குடியினர் நடமாட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கும் வனத் துறைக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. 

இவ்வாறு உற்பத்திக் காடுகள் என்ற பெயரால், காடுகள் தனியார்மயமாவதற்கும் மலைகளும் காடுகளும் பெருங்குழுமங்களுக்கு வாரி வழங்குவதற்கும் இப்பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளிலும் வன உரிமைச் சட்டமே செயல்படாமல் நிறுத்தி வைப்பதற்கும் வழி செய்யப்பட்டுவிட்டது. 

வெள்ளைக்காரர்கள் பிறப்பித்த வனச் சட்டத்தைவிட மிகக் கொடுமையானது மோடி அரசு முன்வைத்துள்ள “இந்திய வனச் சட்டம் - 2019”!

- தமிழ்த்தேசியப்பேரியக்கப் பொதுசெயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் -