img/728x90.jpg
img/728x90.jpg
வேளாண் விளை நிலங்கள் வழியாக பெட்ரோல் குழாய்களைப் பதிக்காதே!

வேளாண் விளை நிலங்கள் வழியாக பெட்ரோல் குழாய்களைப் பதிக்காதே!

கிருட்டிணகிரியில் உழவர் போராட்டம்! 

கர்நாடக மாநிலம் தேவனகுந்திக்கு பெட்ரோல் கொண்டு செல்வதற்காக, கிருட்டிணகிரி மாவட்டத்தின் இருகூர் வழியாக பெட்ரோலியக் குழாய்ப் பதிப்புத் திட்டத்தை இந்திய அரசின் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது.

கேரளாவில் செயல்படுத்துவதைப் போல் சாலை வழியாக பெட்ரோலியக் குழாய்களைக் கொண்டு செல்லாமல், தமிழ்நாட்டில் மட்டும் வீடுகள் - விளைநிலங்கள் வழியாகச் செல்லும் இந்த பெட்ரோலியக் குழாய்கள் உழவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் அழித்துவிடும்.

ஏற்கெனவே, இதே பகுதியில் இந்திய அரசின் “கெயில்” நிறுவனக் குழாய்களைப் பதிக்க நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இன்னொருபுறத்தில், தருமபுரியிலிருந்து ஓசூருக்கு 6 வழிச்சாலை இருக்கும்போது, இப்போது இராயக்கோட்டை வழியாகவும் 6 வழிச்சாலை அமைப்பதற்காக 240 அடி வரை நிலம் எடுத்துள்ளனர். ஏற்கெனவே, தருமபுரிலியிருந்து இராயக்கோட்டை வழியாக உள்ள இரட்டை வழிப் பாதையை அகலப்படுத்தாமல், வேளாண் நிலங்களை எடுப்பது, அப்பகுதி உழவர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

இந்நிலையில், உழவர்களுக்கு எதிரான இத்திட்டங்களை எதிர்த்து, கடந்த 13.08.2019 அன்று, தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தூ. தூருவாசன் தலைமையிலான உழவர்கள், இருகூர் - தேவனகுத்தி திட்டத்திற்குத் தங்கள் நிலங்களைத் தர மாட்டோம் எனத் தெரிவித்து கிருட்டிணகிரி மாவட்டத் துணை ஆட்சியர் திரு. ஆர். புஷ்பா அவர்களை சந்தித்து நேரில் மனு அளித்து முறையிட்டனர்.

இதன் அடுத்த கட்டமாக, இன்று (22.08.2019) காலை கிருட்டிணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் பெருந்திரளான உழவர்கள் பங்கேற்பில் தமிழக உழவர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தூ. தூருவாசன் தலைமை தாங்கினார். தமிழக உழுவர் முன்னணி ஆலோசகர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, கண்டன உரையாற்றினார். தமிழக உழவர் முன்னணி கிருட்டிணகிரி ஒருங்கிணைப்பாளர் திரு. கடமல்பட்டி முருகேசன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

கிருட்டிணகிரி மாவட்டத்தின் ஒடையாண்டஅள்ளி, எச்சனஅள்ளி, எதிர்க்கோட்டை, இராயக்கோட்டை, பழையூர், நெல்லூர், சஜ்ஜலப்பட்டி, பிள்ளாரி அக்ரகாரம், கொப்பக்கரை, கோனேரி அக்ரகாரம், லிங்கனம்பட்டி, கருக்கம்பட்டி, நடுக்காலம்பட்டி, கடவரஅள்ளி, பண்டப்பட்டி, பந்தாரப்பட்டி, சின்னபண்டப்பட்டி, அயர்னப்பள்ளி, ஆழமரத்துக் கொட்டாய், கொடகார அள்ளி, சீபம், துப்புகானப்பள்ளி, உள்ளட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த உழவர்கள் இதில் திரளாகப் பங்கேற்று இந்திய அரசின் வேளாண் அழிப்புத் திட்டத்திற்கு எதிராக ஓங்கிக் குரலெழுப்பினர். மைலான் லேபரட்டரிஸ் தொழிலாளர் சங்கத் துணைத் தலைவர் திரு. தியாகராசன், தமிழ்த்தேசியப் பேரியக்க ஓசூர் பத்தலப்பள்ளி கிளைச் செயலாளர் தோழர் வனமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், கோரிக்கையை வலியுறுத்தி கிருட்டிணகிரி மாவட்ட ஆட்சியரின் முதன்மைச் செயலாளர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்திய அரசே! வீடுகளை - விளை நிலங்களை அழித்து பெட்ரோலியக் குழாயப் பதிக்கும் திட்டத்தைக் கைவிடு!